அத்தியாயம் 18_ மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 18
அச்சம் துச்சமே
நள்ளிரவாயினும்
நிலவுக்கு துணையாய்
நாமும்
நமக்கு துணையாய்
நம் காதலும் இருக்க,
நமக்கு
அச்சம் துச்சமல்லவா?
தொப்பலாக நனைந்து இருந்தவர்கள் இருவரும் வீட்டை அடைந்தனர். மீரா உடை மாற்றச் சென்றாள். கார்த்திக் தான் உடனேயே புறப்படுவதாகச் சொன்னாலும் மனோகரும் தங்கமும் அவனை கொஞ்ச நேரம் இருந்துச் செல்லச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் ஏற்றுக் கொண்டவன் தனது உடைகளை காயப் போட்டு விட்டு மாமனாரின் உடைகளை அணிந்து இருந்தான்.
அந்த புது டிஷர்ட் மற்றும் லுங்கியில் சற்று நேரம் அசௌகரியமாக நெளிந்தாலும், அரட்டை களைக்கட்டவும் சற்று நேரத்தில் அவர்கள் வீட்டு மனிதனாகவே ஆகி ஒன்றிப் போனான். தங்கமும் மனோகரும் அவனை தாங்கிய விதத்தில் அவனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
உடை மாற்றி வந்த மீரா இப்போது அழகானதொரு சல்வாரில் இருந்தாள். இரவு உணவும் அனைவரும் அமர்ந்து உண்ண, இம்முறை தாய் சொல்லாமலேயே மீரா அவனுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறினாள். மகளின் முகம் காலை முதல் இருந்த குழப்பத்தின் சுவடுகள் இன்றி பிரகாசிப்பதை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
“நீயும் உட்காரு”, கார்த்திக் அவளை அமர வைத்து பறிமாற முயல, அவனை தடுத்து அவளே தனக்கு உணவை பறிமாறிக் கொண்டாள். சின்னவர்கள் அமைதியாகவே இருந்தனர். அது ஏனோ அவர்கள் இருவருக்கும் இடையில் புக யாரும் விரும்பவில்லை.
மீரா பல நாட்கள் அறியாத பசி அறிந்தவளைப் போல, அந்த நேரம் ரசித்து, ருசித்து உண்டுக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் உண்டு எழுந்திருக்க, இன்னும் இவர்கள் இருவரும் எழக் காணோம்.
கார்த்திக் வாங்கி வந்திருந்த இரசகுல்லாவை சித்ரா எடுத்து வந்து கண்ணாடிக் கிண்ணங்களில் பறிமாற ஆரம்பிக்க அவளோடு சுசித்ராவும் இணைந்துக் கொண்டாள். உணவு டேபிளில் இவர்களை விட்டுவிட்டு அனைவரும் அங்கங்கே அமர்ந்து இனிப்பு உண்பதில் சன்னமான அரட்டையும் சிரிப்புமாக இருந்தனர். மீரா கண்களை உயர்த்தி தங்கைகளிடம் என்னவென்றுக் கேட்க, ஒன்றுமில்லை என தலையசைத்தனர்.
இரவாகி இருந்தது, உடையை மாற்றிக் கொண்ட கார்த்திக் தான் நாளை காலை வருவதாகவும் தாத்தாவிடம் பேச காலை 11 மணி அளவில் நேரம் சரியாக இருக்கும் எனவும் மனோகரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
அத்தய்யா உணவை மறுபடி புகழ்ந்து, சின்னவர்களிடம் விடைப் பெற்று, மீராவின் கைப் பற்றி அழுந்தி விடுவித்து, மாமனாரிடமும் விடைப்பெற்றுச் செல்கையில் அவன் மனதளவில் அவ்வீட்டின் உறுப்பினராகவே மாறி இருந்தான்.
அவன் உடுத்தி இருந்த உடைகள் இப்போது மீராவால் கைப்பற்றப்பட்டு இருந்தன. அத்தனையையும் கண்டும் காணாமல் இருந்த தங்கைகள் வழக்கம் போல அக்காவை இரவு நேரம் வலமும் இடமுமாக சுற்றி வளைத்து இருந்தனர்.

