5. Naan En Seiven?_Short Story_Jansi

5. நான் என் செய்வேன்?_சிறுகதை_ஜான்சி

நான்  என் செய்வேன்?

என் செய்வேன்…

வெகு நாளாய்

எவர் முகமும் காண,

எனக்குள்

இத்தனை

ஆர்வம் துளிர்த்ததில்லை.

வெகு சில நாளாய்

உன் முகம் கண்டிடவே

முகமும்

அகமும்

மலர்கின்றது.

ஆண் என்றாலே அதட்டல் தான்

காரணமில்லா அரட்டல் தான்

என்று பதிவிட்டிருந்த என் மனதோடு

உந்தன் கருத்துக்கள் தவறென்று

சொல்லிச் சென்றது உன் வருகை.

அரங்கம் நடுவில் நீ நின்று

உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,

அவை அதிராத மென்மையில்

உன் பேச்சும்,

அதனினும் மெலிதாய்

புன்னகையும் கொண்டே

என் உள்ளத்தில்

பிரளயம் வர வழைத்தாய்.

நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க

நீ சென்ற பின் எவ்வாறு

நான் உனை காண்க?

மீண்டும் சந்திப்பது

வாழ்வில் உண்டோ  இல்லையோ?

என்றொரு புறம்

மனம் அங்கலாய்க்க

நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.

இன்று இருப்பதில்

நிறைவுக் கொள்வோம்.

என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது

உன் முகம் காணவே மலர்ந்திடுதே

உனை நோக்கியே மயங்கிடுதே

என் செய்வேன்.

நான் என் செய்வேன்?…..

 கையில் கிடைத்த பழுப்புக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு சந்தேகம் என்றுக் கேட்கவந்த டீம் மெம்பர் வந்தவுடனே தான் எனக்கு நான் ஆஃபீஸில் இருப்பதே ஞாபகம் வந்தது. தாளை மடித்து  கை வாக்கில் எங்கோ வைத்து விட்டு வேலைகளை கவனிக்கச் சென்றேன்.

 ஹலோ ஹலோ பொறுங்க முதலில் நான் என்னை அறிமுகம் செய்துக் கொள்ளுறேன்.

என் பெயர் ஆலிஸ்.இதோ இந்த நிறுவனத்தில டீம் லீடா இருக்கிறேன். வயசு 27 அம்மா அப்பா இல்லை ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு இருக்கிறேன்.அப்போ உனக்கு இன்னும் கல்யாணம்னு? கேட்கிறீங்களா…பொறுப்பா எடுத்துச் செய்ய யாருமில்ல, நகைப் பணம், சொத்தில்ல…….என்னையெல்லாம் யாருங்க கல்யாணம் செஞ்சுப்பாங்க?……இப்போ வேற வயசு முப்பதாக போகுது, இனிமே எதுக்கு வேண்டான்னு நானே முடிவெடுத்துக் கிட்டேன்.

எனக்கு வீடு ஆபீஸ் ரெண்டுமே இது தான், வேலையில் மூழ்கிட்டா நேரமே தெரியாது. ஆபீஸில இருக்கிறவங்க தான் ரிலேடிவ்ஸ், பிரண்ட்ஸ் எல்லாமே.வேலை செய்றது கொஞ்சம் அதிரடியா இருக்கும். அமைதியா அப்படின்னா என்tனன்னு கேட்கிறது நம்ம ஸ்டைல்.யாரோ நீ எருமை மாட்டைத் தான் மேய்ப்பன்னு எப்பவோ சாபம் விட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் 20 பேர், என் மேலாளரைச் சேர்த்து 21 பேரை……..சமாளிக்கிறதுன்னு சொல்றேங்க.  

 இப்படி இருந்த என்னை புலம்ப விட்டது யாருன்னு என் கவிதையை படிச்சிட்டு நீங்க கேட்கறதுக்கு முன்னாலயே எனக்கு புரிஞ்சிடுச்சிங்க. இப்போ அந்த அமைதியின் திருவுருவத்தை உங்க கிட்ட நான் அறிமுகப் படுத்திக்கிறேன். 

வழக்கமான மீட்டிங்க்ல தான் அவரை அறிமுகப் படுத்தி வச்சாங்க… புதுசா வர்ற பிராஜக்ட பெங்களூர்ல இருந்து வரப் போற மேனேஜர் லீட் செய்வார்னு ஏற்கெனவே சொல்லியிருந்தாங்க, அது போலவே அவரை அறிமுகப் படுத்தவும் “ஓ அவர் தான் இவரா?”ன்னு  நான் கூட வாய் விட்டுச் சொன்னேன்.

 அந்த பிரனீத் என்கிற பிரதினிதி……ச்சே வர வர ரொம்ப உளற ஆரம்பிச்சிட்டேன் அந்த பிரகிருதி அமைதியா எல்லாரையும் பார்த்து லேசா தலையை அசைச்சு வச்சார். எனக்கே நாம ரொம்ப வாயாடியோன்னு? ஒரு நிமிஷம் தோணிட்டு …அதெல்லாம் இல்லைன்னு என்னை நானே பிறகு தேத்திக் கிட்டேன்.

அவர் அப்படியொன்றும் அழகில்லைன்னு சொல்ல முடியாது, பார்க்க நல்லாதான் இருக்காரு. ஆனால், நான் இது வரை சந்திச்ச வாட்ச் மேன்ல இருந்து WWF ல கும்மாங்க் குத்து கொடுக்க அல்லது வாங்குறதுக்கு முன்னாடி மைக்க பிடிச்சு சவுண்ட் உடுவாங்களே அவங்க வரை எல்லா ஆம்பிளங்களையும் சவடால் விடற மாதிரி, தொண்டல மைக் இருக்கிற மாதிரி அலறி அலறி பேசி தான் பார்த்திருக்கேன்.ஏன் அமைதியா டயலாக் பேசி நடிச்சிட்டிருந்த சூர்யா கூட “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” ன்னு சவுண்ட் விட்ட  பிறகு தானே ஹிட்டானாரு.

ஆனா, பிரனீத் பயபுள்ள எங்க இருக்குன்னே தெரியாது அவ்வளவு அமைதி. பல நேரம் நான் உக்காந்த இடத்தில இருந்துட்டே என் டீம் மெம்பர்ஸ்க்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டு இருப்பேன். என்னை மாதிரியே என் டீமும் கொஞ்சம் கலகலப்பா தான் இருக்கும். திடீர்னு ஏதோ இலை அசைஞ்சா மாதிரி  கொஞ்சம் சத்தம் கேட்குதே என்னன்னு பார்த்தா பிரனீத் டீம்ல ஏதோ முக்கியமான டிஸ்கஷன் நடந்திட்டு இருக்கும். 

இங்கிருந்து பார்த்தாஅவர் வாயை திறக்கிறதும் ,மூடுறதும் மட்டும் தான் தெரியும் அவ்வளவு அமைதியான குரல்ல சொல்றதை அதுக்கு மேல அமைதியா டீம் கேட்டுட்டு இருக்கும்.ஏன்டா?  எப்படிடா  இப்படில்லாம்…..என் மண்டைய பிச்சுக்கலாம்னு எனக்கு தோணும்.

இப்படி தான் நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சது, அவரோட அஃபிஷியலா தேவையான எதுவும் விஷயம் இருந்தா மட்டும் தான் இதுவரை பேசியிருப்பேன். தனியா தங்கி இருக்கிறதால யார் கூடவும் ஆஃபீஸ் ஃபிரண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சம் லிமிட்டா தான் பழகுவேன், நிறைய கசப்பான அனுபவங்கள் தந்த பாடம் அது. 

இப்போ கூட மனசில இப்படில்லாம் தோணுது ஆனால் அவர் மேல காதல்னு சொல்ல மாட்டேன். கட்டாயம் இது நடக்கணும்னு எண்ணமும் கிடையாது. ஒரு வகையான ஈர்ப்புதான் கொஞ்ச நாள்ல அவர் இங்கிருந்து திரும்பி போன பின்னே மறந்திடுவேன்…மறந்திடணும்…ம்ம்.

சரி வேலையைப் பார்ப்போம், 8 மணி நேரம் செய்ற வேலையை ரெண்டு மணி நேரம் உக்காந்து என்ன செஞ்சோம் எப்படி செஞ்சோம்னு புளி போடாம விளக்கனும், எல்லாத்தையும் தொகுத்து வித விதமா மெயில் அனுப்பனும்.உள்ள வேலையை செய்யவே நேரம் சரியா இருக்கும்.இதில எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் வேற , ஒரு மாசமா அவளுக்கு வேலைச் சொல்லிக் கொடுக்கிறதுக்கு எக்ஸ்ட்ரா 1 மணி நேரமாகுது. எனக்கெதுக்கு இப்போ பேக் அப்? காய்ச்சல் அடிச்சாலும் நான் ஆஃபீஸ் வரம இருந்ததில்ல, இவங்க  என்னதான் நினைக்கிறாங்களோ தெரியலப்பா…..

 அன்றைக்கு சாயங்காலம் டீம் மெம்பெர்ஸ் எல்லாம் போயிட்டாங்க, என் பேக் அப்பும் தான்.  எக்ஸல் பைலுக்குள்ள தலையை விட்டு ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருந்தப்போ எதிர்த்தால ஏதோ நிழலாடின உணர்வு. தலையை ரொம்ப கஷ்டப் பட்டு நிமிர்த்திப் பார்த்தா அட நம்ம பிரனீத்.

“உங்களுக்கு என்னோட மெயில் கிடைக்கலயா?”

“எந்த மெயில்?” கேள்வியோடு நான்…

நாளைக்கு பெங்களூர் புறப்படறேன், அதான் ஒரு கெட் டுகெதெர் மாதிரி……..

‘ஓ…….இது வழக்கமாக நடக்கும் விஷயம் தானே?’ எண்ணும் போதே ……….

‘அப்போ நாளைக்கே போயிடுவான் போல…?’ மூளை ஒரு புறம் பதிய வைத்துக் கொண்டது.

“இல்லையே மெயில் வரலை…”

என் புன்முறுவலை ஏற்றுக் கொண்டவனாக…

“அதுக்கென்ன இப்போ வரலாமே…”

“சரி இதோ இந்த ரெண்டு மெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன், வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான்.நீங்க வேணா காஃபேடேரியால வெயிட் செய்றீங்களா?”

“பரவாயில்ல இங்கியே நிக்கிறேன்…”

“சரி” … அடுத்த பத்து நிமிடங்கள் செலவழியும் வரை காற்றசையாத மௌனம் அங்கே….

கஃபேடேரியாவில் ட்ரீட் இருக்கும் போல என பிரணீத்தை பின் தொடர்ந்த எனக்கு அவன் ஆஃபீஸை விட்டு கீழிறங்கி கார்டனுக்குள்ளாக நுழையும் வரை ஒன்றும் புரியவில்லை.

‘ஓஹோ கார்டனோடு சேர்ந்து இருக்கும் ரெஸ்டாரெண்டாக இருக்கும், மற்றவங்க எல்லோரும் அங்க காத்திருக்காங்க போல, ஆனா எனக்காக காத்திருந்து  ஏன் கூப்பிட்டு வரணும்?, ஒரு வேளை எல்லாரும் வந்திருப்பாங்க, என்னை கூப்பிடலன்னா நான் தப்பா நினைச்சுக்குவேன்னு இருக்கலாம்’ என்றெண்ணியவளாக பின்தொடர்ந்தாள்.

 இரவின் இருள் முழுமையாக கவ்வாத நேரம், போய்க் கொண்டிருக்கும் போதே பிரனீத்தின் மொபைல் ஒலித்தது. வீடியோ காலிங்க் எடுத்து தாய் மொழியில் பேசத் துவங்கினான்.நமக்கு கன்னடம் புரியாது இருந்தாலும் பர்சனலாக பேசும் போது நாம் எதுக்கு இடைஞ்சலாக என்றெண்ணியவளாக சற்றுத் தள்ளிச் செல்ல துவங்க, இரண்டெட்டு எடுத்து வைக்கும் முன் என் விரல்களை மென்மையாகப் பற்றி பின் இழுத்தான் அவன்.

“மீட் மை மாம்…”என்றுச் சொல்லியவனாக என்னை தனது மொபைல் பக்கம் என்னைப் பார்க்க தூண்டினான்.

நான் “ஹலோ ஆண்டி” என்று மரியாதைக்காக பேச,

“நல்லாயிருக்கியா ஆலிஸ் பொண்ணே” என்று அவனின் அம்மா என்னிடம் தமிழில் பேச,

ஆச்சரியமாக அவனைத் திரும்பிப் பார்த்தேன்.

“எங்க அம்மா தமிழ்” என்றான் அட்சர சுத்தமாக, ‘இவனுக்கும் தமிழ் தெரியும் போல?’ என்ற என்  சிந்தனையை, தாய் பின்னே தலையை நுழைத்தவளாக ஸ்கிரீனுக்குள் நுழைந்து ஹாய் சொன்ன அழகான யுவதியின் குரல் கலைத்தது.

“மை சிஸ்டர்” என்று புன்னகைத்தான்.

தாயும் மகளும் விலகி நின்று பிரனீத் தலையில் ஒரு டப்பா பவுடரைக் கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர் ஸ்க்ரீனில் வந்து புன்னகைத்தார். சொல்லவே வேண்டாம் இவர் அவன் அப்பா என்றெண்ணி புன்னகைத்தாள். பதிலுக்கு அவர் புன்னகைத்ததில் இந்த அமைதியான புன்முறுவல் எங்கிருந்து வந்தது என்னும் ரகசியம் அவளுக்கு புரிந்தது.

“அடுத்து என்ன மீட் மை வைஃப்” என்றுச் சொல்லப் போகிறான் என்று எண்ணும் போதே அவன் பெர்ஃப்யூம் வாசனை என்னருகே உணர்ந்தேன்.

தோளணைப்பு மாத்திரம் தான் மீதி கிட்டே வந்தவன்..போனில் இருப்பவரிடம்.ஏதோ ஒன்றைக் கேட்கும் தொனியில்

“மம்மி…”என்று கையில் பிடித்திருந்த போனில் நங்கள் இருவரும் வரும் வகையில் பிடித்துக் கேட்டான். எதிர்முனையில் அனைவர் பார்வையிலும் அளவில்லாத ஆர்வம்.

ஒரு வகையான உணர்வில் இருந்தேன் நான். பொருள் விளங்கா உணர்வு. அதெல்லாம் ஒன்றுமில்லை இதெல்லாம் சும்மாதான் வீண் கற்பனை வேண்டாம் மனமே…..என்று என்னை தேற்றிக் கொண்டேன்.

போனில் பேசி முடித்தவன், ரெஸ்டாரெண்ட் செல்லும் எண்ணமே இல்லாதவன் போல ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

“இங்க சென்னை மாதிரியே பெங்களூர்லயும் ஸ்டாப் எல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க….உனக்கு அவ்வளவு வித்தியாசமா தெரியாது”

‘நான் ஏன் பெங்களூர் ஸ்டாப் பத்தி கவலைப் படணும்?, அவங்க எப்படி இருந்தா என்ன? எனக்கு ஏன் வித்தியாசமா தெரியணும்?’  என்னோட மைண்ட் வாய்ஸ்.

“இங்க உன் மேனேஜர் பேக் அப் ரெடியானதுனால எதுவும் பிரச்சினை செய்ய வாய்ப்பில்ல…”

‘பேக் அப்??’

“நான் ஏற்கெனவே உங்க டிபார்ட்மெண்ட் லீட் கிட்ட கேட்டுட்டேன் , இங்க இருந்தா என்ன? இல்ல வேற பிராஞ்ச்ல இருந்தா என்ன? எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினையில்லன்னு சொன்னாங்க.”

‘###@@…………..’

 “நீ பெங்களூர் வர்றதைப் பத்தி நிறைய பேருக்கு ரொம்ப சந்தோஷம்…உன்னோட டீம் ஹேண்ட்லிங்க் ஸ்கில்ஸ் அவ்வளவு பிரசித்தம்..”

‘???………….’

“அம்மா கூட ஏண்டா என் மருமவ வேலைக்கு போகணும் ? வேண்டாண்டான்னு சொன்னாங்க…”

‘…’

“நாந்தான் சொன்னேன் அவளுக்கு வேலைப் பார்க்கிறதுல அவ்வளவு ஆர்வம் அம்மா, அவளை தடைச் செய்ய கூடாதுன்னு…”

இப்படி ஒன் வேல வேகமா டிராவல் செஞ்சிகிட்டு இருக்கிற பிரனீத்தை எப்படி ஸ்டாப் செய்யிறதுன்னு புரியாம திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

சட்டுன்னு கையைப் பிடிச்சு இழுத்ததில திரும்பி நடந்த வாக்கிலயே அவன் மேல இடிச்சு நின்னேன்.

 காதோரமா குனிந்து …

“மேரி மீ”என்றதும் எனக்கு என்னச் சொல்றதுன்னே புரியலை. கோபத்தில,

அது, “வில் யூ மேரி மீ? ன்னு கேட்பாங்க மேரி மீ”ன்னு ஆர்டர் போட மாட்டாங்க.” என்று நொடித்துக் கொண்டேன். இன்னும் அவன் கை வளைவுக்குள் இருப்பது வேறு பதட்டமாக இருந்தது.

“அது தான் எனக்கு தெரியுமே.”

“வாட்?”

“தேட் யூ வில் மேரி மீ?”

இறுகிக் கொண்டே போன அவன் அணைப்பினின்று விடு பட எண்ணியவள் முன்பு அதை நீட்டினான்.

அந்த பழுப்புக் காகிதம் அதில் என் கவிதை, அடக் கடவுளே இதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேனே?.

“எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும்” சொன்னவன் இப்போது எப்படி புன்னகைத்துக் கொண்டிருப்பான் என்று அவன் முகம் பாராமலேயே எனக்கு புரிந்தது. அவன் முகத்தை திரும்பி பார்க்க துணிவில்லாத போதும் குனிந்து வெட்கத்தை மறைத்துச் சிரித்துக் கொண்டேன்.

நான் எழுதியது தான் இருந்தாலும், அந்த தாளை திறந்துப் படித்தேன்.ஏற்கெனவே பல முறை படிக்கப் பட்டிருந்தது அதன் நிலைப் பார்த்துப் புரிந்தது.

என் செய்வேன்…

வெகு நாளாய்

எவர் முகமும் காண,

எனக்குள்

இத்தனை

ஆர்வம் துளிர்த்ததில்லை.

வெகு சில நாளாய்

உன் முகம் கண்டிடவே

முகமும்

அகமும்

மலர்கின்றது.

ஆண் என்றாலே அதட்டல் தான்

காரணமில்லா அரட்டல் தான்

என்று பதிவிட்டிருந்த என் மனதோடு

உந்தன் கருத்துக்கள் தவறென்று

சொல்லிச் சென்றது உன் வருகை.

அரங்கம் நடுவில் நீ நின்று

உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,

அவை அதிராத மென்மையில்

உன் பேச்சும்,

அதனினும் மெலிதாய்

புன்னகையும் கொண்டே

என் உள்ளத்தில்

பிரளயம் வர வழைத்தாய்.

நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க

நீ சென்ற பின் எவ்வாறு

நான் உனை காண்க?

மீண்டும் சந்திப்பது

வாழ்வில் உண்டோ  இல்லையோ?

என்றொரு புறம்

மனம் அங்கலாய்க்க

நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.

இன்று இருப்பதில்

நிறைவுக் கொள்வோம்.

என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது

உன் முகம் காணவே மலர்ந்திடுதே

உனை நோக்கியே மயங்கிடுதே

என் செய்வேன்.

நான் என் செய்வேன்?…..

என்னும் வரிகளுக்கு கீழாக , இடக்கையால் எழுதினால் எப்படி அலங்கோலமாக கையெழுத்து வருமோ அப்படி ஒரு எழுத்தில் தமிழில் ஒரு வரி எழுதியிருந்தான்.

“என்னை கல்யாணம் செஞ்சுக்கோ problem solved…….

என்று,

எனக்கு தமிழ் வாசிக்க வரும் அவ்வளவு அழகா எழுத வராது என்றவன் , குனிந்து என் முகம் திருப்பி என்  நெற்றியில் முத்தமிட்டான்.

“வில் யூ மேரி மீ?”

நான் திரும்பி அவன் மார்பில் சாய்ந்து அவன் முகம் நோக்கி புன்னகைத்தேன்.

                            முற்றும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!