Epi 11_Manadhoram Unthan Ninaivugal

“ஏன் உங்களுக்கு மட்டும் தமிழ் தெரியுமா?”

“அதெல்லாம் நல்லா தெரியும், இப்ப எல்லாம் நான் அடிக்கடி தமிழ் படம் தான் பார்க்கிறேன்” என்றவனை முறைத்தவள்,

“வந்தவளை வேலை செய்ய விடாம பாதி வேலையில் விரட்டிட்டு, இப்ப நான் உங்க ஊர் மொழி வேற கத்துக்கணுமா? நல்லா இருக்கே” எனவும் மௌனமானான்.

“அமேதோ விசிகிபோயானு” (இவளோட…. ஷப்பா முடியலை) தனக்குள் சலித்துக் கொண்டாலும் தான் கேட்க வந்ததை கேட்காமல் பேச்சு தொடரும் விதம் நெருடியது. எத்தனை துளித்துளியாக பருகினாலும் அவளது ஜீஸ் முடிந்து விட்டிருந்தது அவனுடையதும் தான்.

“ஒருவேளை தெலுங்கானா உன்னோட சொந்த ஊராகிடுச்சுன்னா நீ அந்த மொழியை கத்துக்கணும் தானே?” என்றான்.

‘பரவாயில்ல கார்த்திக், நீ கொஞ்சம் நெருங்கி வந்திட்ட’ என தனக்குத்தானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டான்.

அவன் நூல் விட்டு கேட்பதை புரிந்தவளாக “எனக்கொன்னும் உங்க ஊர் சொந்த ஊராக வேணாம்” மீரா வெடுக்கென பதிலளித்தாள். கார்த்திக்கோ இசைவில்லாத மொழியில் கவனம் செலுத்தாமல் தவிர்த்தவனாக அவளது முகபாவனைகளில் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.அவளை கண்ணோடு கண் பார்த்தவனாக,

“நேனு நின்னு ஆத்மார்த்தமாக பிரேமிஸ்துனானு” (நான் உன்னை உளமாற காதலிக்கிறேன்) என்றவனது வார்த்தையிலோ முகத்திலோ பொய்மை சிறிதளவும் இல்லை.

திக்கென்று அதிர்ந்தாள் மீரா, மொழிப்பெயர்ப்பு தேவை இல்லாமலேயே அவனது வார்த்தைகள் அவளுக்கு புரிந்திருந்தன. அவனது முகத்தின் கனிவும், பேசிய வார்த்தைகளின் அழுத்தமும் இவளது இதயத்தின் ஆழம் வரையிலும் சென்று தாக்கின.

அவள் தடுமாறிய அத்தருணம் அவளது மனம் “நோ மீன்ஸ் நோ” என அவள் பயிற்றுவித்து இருந்ததன்படி அலறியது.சில நொடிகளில் தன்னை வெகுவாக சமாளித்தவளாக முகமாறுதல்களை கையாண்டு அவனுக்கு பதிலளித்தாள்.

“வேணாம், இது சரிப்பட்டு வராது கார்த்திக்.”

அவளது மறுப்பை விடவும் அவன் சொன்னதை அவள் புரிந்துக் கொண்ட விதத்தில் உள்ளூர மகிழ்ந்தவாறு இருந்தான் அவன். அதென்னவோ அவள் என்னச் செய்தாலும், என்ன பேசினாலும் அவனால் கோபப்பட முடிவதில்லை. மனம் முழுக்க பரவசமும், தித்திப்பும் தான். தன்னுடைய இலகுத்தன்மை அவளை வெகுவாக பாதிக்கின்றது என அறிந்தும் வழக்கம் போல அன்றும் இலகுவாக இருந்தான்.

சரிப்பட்டு வராது என பதில் சொல்லும் முன்பாக அவளது முகத்தில் வந்து போன உணர்வுகள் அனைத்தையும் படித்தவாறு அமர்ந்திருந்தவன் கேட்டான்.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!