Epi 11_Uyir Oviyam Nee_Final

இப்போது அவர்களது குடும்ப சக்கரம்  மிக நிதானமாக, தெளிவான பாதையில், மிகச் சரியாக சுழல ஆரம்பித்தது.

ஓரிரு வருடங்களில் அகிலன் குடும்பம்  தங்களது வீட்டை விற்றப் பணம் மற்றும், அகத்தியன் எடுத்த ஹவுஸிங் லோன் மூலம்  நல்லதொரு அடுக்கு மாடி குடியிருப்பிற்கு குடியேறினது.

பிள்ளைகளும், கணவரும் வேலை வேலை என்றிருக்க வெண்ணிலாவும் தனது மிகுதியான நேரத்தை பயன்படுத்தும் விதமாக சிறுபிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தார்.

வருடங்கள் சில கடந்திருக்க, இப்போது நுவலியின் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்து இருந்தன.

அகத்தியன் தன் தங்கையை பெண்பார்க்க வந்த பெரியவர்களை வரவேற்ற வண்ணம் தன் வீட்டின் வாசலில் நின்றான்.

பெற்றோரை தொடர்ந்து வந்த மாப்பிள்ளை அருள் நன்கு பளீரென்ற சிரிப்புடன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஏற்கெனவே, பெண் மற்றும் மாப்பிள்ளை விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் பரஸ்பரம் பகிரப் பட்டிருந்ததால் நுவலியால் அருளை எளிதாக அடையாளம் காண முடிந்தது.

அந்த நிகழ்வு வழக்கமான பெண்பார்க்கும் படலமாக இல்லாமல் மிக சாதாரண சந்திப்பு போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாப்பிள்ளையின் தரப்பில் அருளின் பெற்றோர் மற்றும் பெண் தரப்பில் நுவலியின் பெற்றோர் மற்றும் அகத்தியன் தவிர்த்து வேறு யாரும் அங்கே இல்லை.

இரு வீட்டாரின் பரஸ்பர அறிமுகங்கள் முடிந்திருந்தன. நுவலியோ துறுதுறுவென மாப்பிள்ளையையும் அவன் பெற்றோரையும் பார்த்திருந்தாள்.

“என்னமா நுவலி? ஏதாச்சும் கேட்கணுமா? வேணும்னா அருள் கூட போய் தனியா பேசிட்டு வர்றியா?”

அருளின் தாயார் அவளிடம் கேட்கவும் அவள்,

“இல்ல ஆன்டி, அவங்க கிட்ட இல்ல…எனக்கு உங்க கிட்ட தான் முதலில் பேசணும்.”

அருள் புருவம் உயர அவளை கூர்ந்து பார்த்திருந்தான்.

“என்னமா சொல்லு?”

“நான் மேரேஜீக்கு அப்புறமும் வேலை பார்ப்பேன். வேலையை விடறதாக எந்த ஐடியாவும் இல்லை. உங்களுக்கு இதில் அப்ஜெக்சன் எதுவும் உண்டா?”

நுவலியின் குடும்பம் அவள் திருமணம் அவளது மனதில் இருப்பவைகளை அவள் தெளிவாக கேட்டுக் கொள்ளட்டும் என அமைதியாக இருந்தனர்.

“அது உன் சுதந்திரமாச்சேம்மா நுவலி? வேலைக்கு போகிறது குறித்து முழுக்க முடிவெடுக்க வேண்டியது நீ மட்டுமே. என்னோட கருத்து அதில் தேவை இல்லையே?”

என்றதும் நுவலி முகம் மலர்ந்தாள்.

நுவலி ஒரு வித படபடப்புடன் அந்த கேள்வியை கேட்டிருந்த போதிலும் அருளின் தாயாரின் பேச்சில் உள்ளுக்குள்ளாக அவளுக்கு ஏக ஆசுவாசங்கள்.

அடுத்த நாள் அருளுடன் கேஃபே காஃபி டேயில் நுவலி அமர்ந்திருந்தாள்.

சற்று முன் சாதாரணமாகப் பேசி சகஜமாகி இருந்தனர் இருவரும்.

“எங்கம்மா நீ திருமணத்திற்கு பின்னாக வேலையை விடணும்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருப்ப நுவலி?” இரசனையாய் வினவினான் அருள்.

“வெரி சிம்பிள், இந்த ப்ரபோசலை ரிஜெக்ட் செஞ்சிருப்பேன்.”

என நுவலி சொல்லவும் அருள் திகைத்தான்.

“நான் பேசுறது உங்களுக்கு ரொம்ப ரூடா ( இணக்கமற்றத் தன்மை) தோணலாம். அப்படி எல்லாம் என்னை, என் ஆசைகளை தியாகம் செஞ்சு தான் திருமணம் செய்துக்கணும் என்று எனக்கு விருப்பமில்லை அருள்.”

“புரியுது”

“அடிப்படைகள் சரியில்லாமல் புது உறவுகளுக்குள் போகும் போது தியாகத்தில் ஆரம்பிக்கிற வாழ்க்கை கடைசி வரை தியாகத்திலேயே முடிஞ்சிடுறதை நான் கண்ணால பார்த்திருக்கிறேன்.”

“ம்ம்”

“திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து மகிழ்வாய் வாழத்தானே? ஒருவர் மகிழ இன்னொருவர் ஏன் வருந்தணும்?”

“நிச்சயமாய்”

“ஒரு தெளிவுக்காகத்தான் நான் அந்தக் கேள்வியை கேட்டேன் அருள். உங்கம்மா சொன்ன பதில் இப்ப நான் உங்க கிட்ட பதட்டமில்லாமல் பேச உதவியிருக்குன்னு சொல்லலாம்.  

எனக்கு உங்களை பிடிச்சிருக்கு…உங்க அம்மாவையும் தான்.”

“ஹா ஹா”

“நீங்களும் பதிலுக்கு சொல்லணும் அருள்”

“சொல்லிடலாம்”

புன்னகைத்தான்.

“உன் கண்கள் கவி பாடும்…

உன் சொற்கள் கிளி பேசும்.

இன்மொழி தாங்கிய…

கன்னங்கள் குவிந்தாடும்.

அழகாய்…மிக வடிவாய்…

என் எதிரில் நடமாடுகின்றாய்…

உயிர் ஓவியம் நீ பெண்ணே… 

உன்னோடு கை கோர்த்து வாழ்ந்திட…

எனக்கு முழு சம்மதம் கண்ணே”

“வாவ்” மிக மெல்லியதாய் கைத்தட்டினாள்.

அருள் அவளை மிகவும் இரசித்துப் பார்த்திருந்தான்.

“என்ன அழகா கவிதை சொன்னீங்க, எனக்கு….” 

சட்டென்று வெட்கத்தில் அவளது கன்னங்கள் செம்மை படர்ந்தன.

அவள் தன் முகம் மறைக்கும் முன்பாக ஓரிரு புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டான் அருள்.

ஆர்டர் செய்த காஃபியும் வர, தயக்கமும், வெட்கமும் கூச்சமுமாய் மனம் நிறைந்த மகிழ்வுமாய் நுவலி அந்த நாளைக் கடந்தாள்.

அகிலன் தன் மகள் நுவலியின் திருமணப் பத்திரிக்கையை கொடுத்து திருமணத்திற்கு அழைக்கவென தன் ஊருக்குச் சென்றிருந்தார்.

தன் அக்கா மிரட்டியதில் தனது நிலத்தை ஊரில் நல்ல செல்வாக்கான நபரிடத்தில் குத்தகைக்கு விட்டிருந்தார். அவரை ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை பார்த்து வருவதும் வழக்கம். குத்தகைக்கான பணமும், விளைப் பொருளின் பங்கும் தவறாமல் அவருக்கு வந்து சேர்ந்துக் கொண்டு இருந்தது.

இந்த குத்தகை விசயத்திலும் அவரது அக்காவிற்கு அவர் மேல் மனத்தாங்கல்கள் உண்டு.

சோலையோடு முறிந்த உறவை அகிலம் மறுபடியும் புதுப்பிக்க எண்ணவில்லை. அதை அவர் புதுப்பித்தால் இந்த உலகில் அவரை விடவும் முட்டாள் என்று வேறு யாரும் இருக்கவே முடியாது என எண்ணிக் கொண்டார்.

தன் அக்காவின் வீட்டிற்கு சென்றார் அவர். அவர் திருமண அழைப்பை கொடுக்கும் முன்பாக அவர் அக்கா அவரிடம்,

“அகிலா நீ சோலையை உம்மவ கல்யாணத்துக்கு அழைச்சியா?”

“இல்லக்கா”

“அப்படின்னா நானும் உம்மவ கல்யாணத்துக்கு வரலை”

“உன் விருப்பமக்கா”

சொன்னவர் அவ்வீட்டின் கட்டிலில் திருமண அழைப்பை வைத்து விட்டு எழுந்து வெளியேறினார்.

சென்னையில் நுவலி மற்றும் அருளின் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டிருந்தன.

நிறைவு

Pages: 1 2


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!