Epi 28_Manadhoram Unthan Ninaivukal

“இப்போது என்ன பிரச்சனையாக இருக்கும்?” என யோசித்துக் கொண்டு இருந்தவனை விக்ரம் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார் என்னை அளந்து பார்த்தாச்சா? எப்படி நான் தேறுவேனா?” இப்போது கார்த்திக் கேட்க விக்ரம் சிரித்திருந்தான்.

“சித்ரா எல்லார் கிட்டயும் ஒன்னு போலவே பழகுறா, நல்லவங்க கெட்டவங்க தெரியறதில்லை. அதனாலத்தான் கொஞ்சம் சொன்னேன்.”

“எது கொஞ்சம்? அவ முன்னாலயே அவ பேசுர பையனை மிரட்டி இருக்கீங்க? இப்படி செஞ்சா யாரும் என்னை தப்பா பேச மாட்டாங்களான்னு அவ கலங்கி நிக்குறா… இன்னிக்கு அவ ஆஃபீஸ் கூட வரலை.”

“அச்சோ…”

“அவ யார் கூட பேசினா உங்களுக்கு என்ன சார்? எதுக்கு இத்தனை உரிமை எடுத்துக்கணும்?”

“ஆக்சுவலி ஐ லைக் ஹெர்.” (என்னன்னா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்)

“ரொம்ப கஷ்டம்”

“என்னதுங்க சார்”

“என்னை மாதிரியே… இல்ல இல்ல என்னை விட மோசமா ஒருத்தனை பார்க்குறேனா…. அதனாலத்தான் கேட்கிறேன். சரி நீங்க அவளை திருமணம் செஞ்சுக்கிற ஐடியாவா? இல்லை…”

“ஆமா ஆமா அப்படித்தான் ஐடியா… அவ என்னை கட்டிக்க ஒத்துக்குவாளா?”

“தெரியலை பார்ப்போம்… ரொம்ப பயமுறுத்திட்டீங்க அவளை… கொஞ்சம் ஒதுங்கி நின்னுக்கோங்க… ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க… கொஞ்ச நாள் போகட்டும். பொண்ணுங்களுக்கு தவறானவங்களை இனம் கண்டு பிடிக்கத் தெரியும் விக்ரம். அவளாகவே அவன் தவறானவன்னு புரிஞ்சி விலகிக்குவா… இல்லைன்னாலும் அவளை கவனிச்சுக்க வீட்டில் நாங்க இருக்கோம் தானே?”

“ம்ம்ம்….”

“அவளும் உங்களை விரும்பினா நான் உங்க கல்யாணத்தை முன் நின்று நடத்தி வைக்கிறேன் சரியா? அது இல்லாம வேற எதுவும்னா நாங்க வேற நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்.”

“அச்சச்சோ, நான் தவறானவனில்லை.”

“அது புரிஞ்சதாலத்தான் நான் இவ்வளவு நேரம் உங்க கிட்ட பேசினதே… இது என்னோட கார்ட்” கார்த்திக் நீட்டினான் விக்ரமும் தனது கார்டை நீட்ட பரஸ்பரம் பறிமாறிக் கொண்டனர்.

அடுத்து கிடைத்த விமானம் ஏறி, கார்த்திக் வீட்டிற்கு வந்துச் சேர மணி ஒன்றாகி இருந்தது. உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளிடையே இடம் பிடித்து தூங்கிக் கொண்டான்.

மாதங்கள் கழிந்திருந்தன… தான் விக்ரமை விரும்புவதாக சித்ரா கார்த்திக்கிடம் தான் முதலில் கூறி இருந்தாள். வேலையின் நீக்கு போக்குகளும், ஆட்களை ஆய்ந்தறியவும் அலுவலக பணியினூடே கற்றிருந்தாள்.

சித்ராவிற்காக மாமனாரிடம் பேசச் செல்லும் முன் சுசியிடம் பேசி சில முடிவுகளை எடுக்க அனுமதி கேட்டிருந்தான்.கார்த்திக்கிற்கு தெரிந்த எல்லாமும் மீராவிற்கும் தெரியுமென்பதால் அங்கே எந்த குழப்பங்களும் இல்லை.

“அதெப்படி இது கல்யாணத்தில் தான் முடியும்னு கணிச்சிங்க கார்த்திக்”, என தன்னிடம் வியப்பாக கேட்டிருந்த மீராவிடம், 

“இல்லைன்னா அவ என் கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டால்ல மீரு…என்னதான் படபடன்னு பேசுர குணம்னாலும் அவ ரொம்பவே புத்திசாலிதான். பிரச்சனைன்னு வந்தா தானாகவே சமாளிச்சு இருந்திருப்பா.”

“அப்ப அவ அன்னிக்கு உங்களுக்கு அழைச்சது வந்து இந்த பையன் சரியான்னு பார்க்க சொன்ன மாதிரியா?” கேட்டவளிடம் கார்த்திக் சிரித்தான்.

“அப்படியும் இருக்கலாம், டேய் எனக்குன்னா வந்து பேச ஆட்கள் இருக்காங்க வென்று நீ உன் வேலையை பாருன்னு விக்ரம்கு காட்டுறதுக்காகவும் இருக்கலாம்.” அவன் சொன்ன விதத்தில் இவளும் சிரிக்க,

“பிரச்சனைன்னதும் உனக்கு அழைக்காமல் எனக்கு அழைச்சது உனக்கு கோபமில்லையா?” கேட்டவனிடம்,

“அதிலென்ன இருக்கு? இரண்டும் ஒன்னுதான்.” என்றாள் மீரா.

அப்படித்தான் சித்ரா மற்றும் விக்ரம் திருமணத்திற்கு ஒரு சில மாதங்கள் கழித்து சுசித்ராவிற்கும், வேந்தனுக்கும் விமரிசையாக திருமணம் நடைப்பெற்றது. 

மேட்ரிமோனியலில் வெகுவாகத் தேடி சலித்து சுசித்ராவுக்காக கண்டுபிடிக்கப் பட்டவன் தான் வேந்தன். சுசி பணி புரிந்துக் கொண்டிருந்த ஃபைனான்ஸ் துறைக்கு தொடர்பற்ற இளம் பொறியாளன் வேந்தன். பணி புரிந்த துறைகள் வேறு பட்டாலும், கறாரான சுசிக்கும் கலகலப்பான வேந்தனுக்கும் மனதளவில் ஒட்டுதலோ ஒட்டுதல்தான்.

சித்ரா மற்றும் சுசிக்கும் இரண்டாவது தாய் வீடாக மீரா வீடு இருந்தது எனில் மிகையில்லை. விருந்தாளிகளுக்கெனவே அவன் வீட்டின் இரண்டு அறைகள் எப்போதும் ஆயத்தமாக இருக்கும். ஆனால், அவனது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி தருவது கிடையாது. 

பிறர் வந்துச் செல்லும் இடமாக படுக்கை அறை இருந்தால் பிறரின் எண்ண அலைகள் தம்பதிகளை பாதிக்குமாம். கார்த்திக் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் என்ன சொல்கிறீர்கள்?

இப்போது கார்த்திக்கின் வீட்டுச் சுவற்றில் சித்ரா & விக்ரம், சுசித்ரா & வேந்தன் தம்பதியர் புகைப்படங்களும் சேர்ந்திருந்தன.

தொடரும்

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!