அத்தியாயம் 9_ மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 9
சகஜம்
ஒவ்வொரு முறையும்
என் முகம் ஏன் பார்க்கின்றாய்? என்றறிவேன்.
உந்தன் பேச்சும், நெருக்கமும், அக்கறையும்
உணர்த்தும் உந்தன் காதலுக்கான பதிலை
என்னிடம் தேடுகின்றாய்.
உனக்கான உணர்வுகளை
பிரதிபலிக்காத என் முகம் பார்த்து
ஒருபோதும் மனம் தளராதே…
ஆர்ப்பரிக்கும் கடலின்
அடியாழங்களில் அமைதி நிலவுவது
சகஜம் தானே?
****
POSH அதாவது Prevention of Sexual Harassment at the Workplace எனும் சட்டம் பணி புரியும் இடத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டமாகும். இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் இச்சட்டம் நாடு முழுவதும் 9 டிசம்பர் 2013 அன்றைய தினம் முதலாக நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் படி கீழ்வருவன பாலியல் துன்புறுத்தல்களாக கருதப்படும்,
1. அத்துமீறிய தொடுகைகள் மற்றும் பாலியல் அழைப்பிற்கான சைகைகள்.
2. ஏதேனும் ஒரு செயலுக்கு பிரதி உபகாரமாக பாலியல் உறவை கேட்பது.
3. Making sexually coloured remarks. பாலியல் சார்ந்த விஷயங்களை கோடிட்டு காட்டிக் கொண்டு இருப்பது.அ.கா அருவருக்கத் தக்க பேச்சுக்கள், சாடைகள் கையசைவுகள் முதலியன.
4. நிர்வாணப் படம் காண்பிப்பது.
5. தனது பாலியல் எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டுவது, அல்லது வேலையில் இடையூறுகள் செய்வது.
6. வெறித்து வெறித்துப் பார்ப்பது.
7. குறிப்பிட்ட நபரை எந்த நேரமும் பின் தொடர்ந்துக் கொண்டு இருப்பது.அவரது விபரங்களை அவர் அறியாமல் சேகரிப்பது. அவருக்கு மனரீதியான பயமூட்டும் இச்செயல்களை செய்வது.
8. ஒருவரின் உடையை, அலங்காரத்தை புகழ்வது, வருணிப்பது மற்றும் வழிவது.
இன்னும் நிறையச் சொல்லலாம். பொத்தாம் பொதுவில் சொல்வதானால் பெரும்பாலான நாவல்களிலும், சீரியல்களிலும், படங்களிலும் காதல்…அதீதக் காதல் என் காட்டப்படுவன Sexual Harrassment எனும் பாலியல் துன்புறுத்துதல்கள் தான் என்றால் அவை மிகையாகாது.
குறைந்த பட்சம் 15 பேர் பணி புரியும் அலுவலகங்கள் முதலாக இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் மனித வளத்துறையினரால் நிர்வகிக்கப்படும் POSH குழுவில் நிறுவனத்தின் பெரிய பதவியில் இருக்கின்ற பலரும் இருப்பர். பணிக்கு புதிதாகச் சேருகின்றவர்களுக்கு POSH பயிற்சி கொடுக்கப்படும். பாலியல் துன்புறுத்தல்களைக் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டி சம்பந்தப்பட்ட குழுவின் மின்னஞ்சல்கள் விபரங்கள் தெரிவிக்கப் படும்.
குற்றச்சாட்டுகள் எழுமானால் விசாரணையின் முடிவில் குற்றமுள்ளவர்களாக அறியப்படுகின்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்.
“உன்னுடைய பெர்ஃப்யூம் வாசனை நன்றாக இருக்கின்றது” எனச் சொன்னதற்காக தன் வேலையை இழந்த நபர்களும் உண்டு. “உன்னுடைய சேலையின் நிறம் எடுப்பாக இருக்கின்றதே? எனச் சொல்லி அதனால் பல்வேறு விசாரணைகளை எதிர்கொண்ட நபர்களும் உண்டு.
அட இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதையெல்லாமா பாலியல் துன்புறுத்தல் எனச் சொல்ல வேண்டும் என மேற்போக்கான நிலையில் இவை எடுத்துக் கொள்ளப் படுவது இல்லை. ஒருவருக்கு பிடிக்காத பட்சத்தில் அவரது தனிப்பட்ட விஷயங்களில் நிகழும் அதீத மூக்கு நுழைப்புகள், அதிகாரங்கள் அவை துன்புறுத்தல்களாகவே கருதப்படும்.
விசாரணையின் முடிவில் வேலையிழக்கும் அபாயங்கள் இருக்கும் நிலை ஒன்று என்றால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதே தனது தனிப்பட்ட ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அது எவ்விதமாக ஆண்களை பாதிக்கும் என்பதை விவரிக்க தேவையிராதென எண்ணுகின்றேன்.
***
