Epi 1_Manadhoram Unthan Ninaivugal

அத்தியாயம் 1_மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 1

கனவுகள்

உன் நினைவுகளிடமிருந்து

தப்பிக்கும் மார்க்கம் அறியாது

உறக்கத்தை நாடினால்

அங்கேயும் வந்து 

கனவுகளை திருடிவிடுகிறாயே?

அடித்துப் போட்டார் போல தூங்கிக் கொண்டிருந்த மகளை கவலையாக பார்த்து விட்டு நகர்ந்தார் தங்கம்.

“மீரா மீரா இன்னுமா எழுந்துக்கலை அவ?”

மகளுக்கு குரல் கொடுத்த மனோகர் மனைவியிடம் கேள்வியை நிறுத்தினார்.

“இந்தப் பொண்ணு என்னிக்கு வேலை விசயமா வெளியூர் போயிட்டு வந்ததோ அன்னிலருந்து இப்படித்தான் ஒரே தூக்கம். அப்படி என்ன தூக்கமோ?”தங்கம் பதிலளிக்க,

அரைத் தூக்கத்தில் இருந்தவள் பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு தன்னை சுதாரித்துக் கொண்டு, அவசரமாய் எழுந்து அரை மணி நேரத்தில் அலுவலகம் செல்ல புறப்பட்டு நின்றாள்.

“அடடே என் பொண்ணை நீ குறை சொன்னே இல்லையா? இப்ப பாரு எப்படி டான்னு வந்து நிக்கிறா? அவ என்னை மாதிரி சுறு சுறுப்பாக்கும்”

“ஓ உங்களை மாதிரியா?” தங்கம் எடுத்துக் கொடுக்க, அவர் சிரித்தார் மீராவின் முகமும் சற்று சிரிப்பை அணிந்ததோ?

அவசரமாக அம்மா செய்து வைத்த டிஃபனை எடுத்து தனது பைக்குள் வைத்தவள் காலை உணவை உண்ணாமலே புறப்பட, இட்லியும், பொடியுமாய் காலை உணவும் அம்மாவால் அவளது உணவு பையினுள் திணிக்கப் பட்டது.

“வரேன் மா, வரேன் பா”

அமைதியாய் அங்கிருந்து புறப்பட்டாள் மீரா. ஆம் அவள் எப்போதுமே அப்படி ஒரு அமைதிதான். யாரையும் புண்படுத்த தெரியாத குணம், தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை. காரணம் என்னவென்று யாராகிலும் கேட்டால் “அமைதியாக இருந்து என் எனர்ஜியை சேமிக்கிறேன்” என அவள் புன்னகைத்துச் சொல்லும் விதத்தில் அது அவளது இயல்பு அதை தவறாக எடுத்துக் கொள்வானேன்? என்றுதான் பிறருக்கும் தோன்றும்.

பல நேரங்களில் இவளது அமைதி குணத்தின் காரணமாகவே பிறர் அவள் தலையில் அதிகமாக வேலையை கட்டுகிறார்களோ? எனத் தோன்றும் படி இருக்கும். ஆனால், அவளது திறமையினால் இந்த 25 வயதிற்குள்ளாக நல்லதொரு பதவியில் இருந்தாள். அடுத்து மேனேஜர் பதவிதான் அவளது இலக்காக இருந்தது. 

சமீபத்தில் புதிய ப்ரோஜெக்ட் ஒன்றிற்காக அவள் ஹைதராபாத் சென்று திரும்பியதில் இருந்து இன்னும் அதிகமான அமைதியில் தன்னை அவள் மூழ்கடித்துக் கொண்டாள்.

மீராவின் தங்கைகள் சித்ரா, சுசித்ரா இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பவர்கள். தந்தை மனோகர் மொத்த சந்தையில் இருந்து பொருட்களை வரவழைத்து, சில்லறை வணிகத்தினருக்கு கைமாற்றி விடும் வியாபாரங்கள் சில செய்து வருகின்றார். தாய் வீட்டை கவனித்துக் கொண்டே துணி வியாபாரம் செய்து வருகின்றார். மத்திய வர்க்கம் ஆனால் மகிழ்ச்சியான குடும்பம்.

அலுவலகத்தில் பாதி வேலையில் இருக்கையில் அவளது டைரக்டர் சுஜித்தின் அழைப்பு வர என்னவென்று கேட்க அன்று அவளுக்கு பத்து கேண்டிடேட்களிடம் இண்டர்வ்யூ நடத்த வேண்டியது இருந்தது.

மூன்று முதல் நான்கு சுற்று நேர்முகத் தேர்வுகளில், முதலாவது நேர்முகத் தேர்வில் வடிக்கட்டப்பட்டவர்களுக்கான இரண்டாம் சுற்றில் ஆபரேஷன் லீடராக மீராவை அன்று தெரிவுச் செய்ய அழைத்திருந்தனர். அவள் பணிபுரியும் அலுவலகம் ஜெனரல் இன்சூரன்ஸ் க்ளெயிம்களை தங்கள் க்ளையண்டுகள் சார்பாக அனுப்பும் அலுவலமாகும். அது யூ கே வை மையமாகக் கொண்ட அலுவலகம். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிவோருக்கான தகுதி நிர்ணயத்தை எப்போதும் மிக உயர்வானதாகவே வைத்திருப்பர்.

மீராவும் தனது தெரிவுகள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதாக மெனக்கெடுவாள். அந்த நேர்முகத் தேர்வுகளைத் தவிர்த்தும் கூட இன்னுமாக இருந்த தனது தினசரி வேலைகளை அவள் முடிக்க வேண்டியது இருந்தது. எனவே, தனது நேரத்தை வீண் செய்ய விரும்பாதவளாக, தான் நேர்முகத் தேர்வு செய்ய வேண்டியவர்களின் விபரங்கள் அறிய மனித வளத்துறையினர் பகுதியை நாடிச் சென்றாள்.

அன்று அந்த பிங்க் நிறச் சேலையில் அன்று அவளது அழகு கொஞ்சம் தூக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். ஹெச் ஆரிடமிருந்து விபரங்கள் பெற்றுக் கொண்டவள் நேர்முகத் தேர்வுச் செய்ய வேண்டி ரிசப்ஷனிற்குச் செல்ல, அங்கிருந்த எல்லோரது கவனமும் அவள் மீது வந்து குவிந்தது. 

அவள் பொதுவாக அந்நியர்கள் யாருடைய கவனத்தையும் அதிகமாக ஈர்க்க விரும்பாதவள் அதனால் அந்த கவனமீர்த்தலில் கொஞ்சமாக சஞ்சலமுற்றாள். அன்று நேர்முகத் தேர்வு இருக்கும் என்றுத் தெரிந்திருந்தால் வேறு உடையில் வந்திருப்பாளோ என்னமோ?

மற்ற நாட்களில் எப்படியோ? ஆனால், தனது மனம் மிகவும் சஞ்சலத்தில் வருத்தத்தில் இருந்தால் தன் மனதை திடப்படுத்திக் கொள்ள தன்னை தன்னம்பிக்கையாக காட்ட அவள் அணிவது சேலைகளாகத் தான் இருக்கும். 

தனது உடை தரும் கம்பீரம், வீட்டில் மற்றும் வெளியில் தெரிந்தவர்களின் சின்னச் சின்ன பாராட்டுக்கள், மெச்சுதலான பார்வை என இந்த சேலை தெரப்பியில் அவளது தன்னம்பிக்கை பூஜ்யத்தில் இருந்து ஐம்பதாக நூறாக இன்னும் பலவாக பெருகிய அனுபவம் அவளுக்கு உண்டு.

அந்த கண்ணாடி கேபினுள் வந்தமர்ந்தவள் முதலில் வந்த பெண்ணை புன்னகையுடன் ஏறிட்டாள். அவளது சுய விபரங்கள் அடங்கிய பக்கத்தில் இருந்த விபரங்களை கவனித்தாள். வழக்கமாக கேண்டிடேட்களை இலகுப் படுத்தக் கேட்கப் படும் கேள்விகள் கேட்டு உரையாடிய பின்னர் வேலைக்கேற்ற தகுதிகள் இருக்கின்றனவா? என அறிவதற்கான கேள்விகளும் உரையாடல்களும் நிகழ்த்தினாள்.

கேள்விகளை எதிர்கொள்ளுகையில் கேண்டிடேட்டின் மன நிலை, அவர்கள் பதில் சொல்லும் விதம் ஒவ்வொன்றாக மதிப்பெண்கள் இட ஆரம்பித்தாள். ஆயிற்று பத்திற்கு பதிலாக பன்னிரண்டு நபர்களை இண்டர்வியூ செய்ய வேண்டி இருந்தது. அத்தனை வேலையையும் செய்து முடித்தாயிற்று. நடு நடுவே தனது வழக்கமான வேலைகளுக்கான அழைப்புகள் வேறு மாற்றி மாற்றி வந்துக் கொண்டு இருக்க அவைகளுக்கும் அவள் பதிலளிக்க வேண்டி இருந்தது.

சில மணி நேரங்கள் கரைந்திருக்க, மீரா மிகவும் களைப்பாக உணர்ந்தாள். கஃபேடேரியா சென்று தனியே அமர்ந்து காஃபி வாங்கி அருந்துகையில் ஏனோ அவனது ஞாபகம் வந்தது. அந்த திமிரின், ஆணவத்தின் மறு உருவமானவனின் ஞாபகம் மனதிற்குள்ளாக நிரடியது.

Pages: 1 2


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *