Epi 1_Manadhoram Unthan Ninaivugal

ஹைதராபாத் இருந்த வரையிலும் குறிப்பிட்ட நாட்களில் அவளை தன்னுடன் வலுக்கட்டாயமாக கஃபேடேரியா அழைத்துச் செல்வதும், அவளுக்கு எதையாவது வாங்கி உண்ண வைப்பதுவும் என இவளது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உள்ளாக நுழைந்து அலட்டலும் அதிகாரமுமாக இவளை ஆட்டிப்படைத்த ராட்சதன் அவன். அவனுடன் இருக்கையில் அவள் அவளாகவே இல்லாமல் காற்றுப் போன பலூனாக குட்டியாகச் சுருங்கி விட்டதாகவே எப்போதும் உணர்வாள்.

‘திமிர் எப்போதும் திமிர், எல்லாவற்றிலும் திமிர் அவனுக்கு…’ மனம் முறுமுறுத்தது. 

இன்று வழக்கத்தையும் விடவும் ஏனோ அவனது ஞாபகம் அதிகமாக வந்தது. ‘தன்னருகில் இருக்கும் போதும், இப்போது இல்லாத போதும், எப்போதும் அவனால் எப்படி அவனையே நினைக்கும் படி தன்னை கட்டுக்குள்ளாக வைக்க முடிகின்றது?’ இன்னும் கூட அவன் குறித்த எண்ணங்கள் என்னவென்று புரியாத உணர்வில் இருந்தாள் அவள்.

தனது இருக்கைக்கு வந்து சற்று நேரம் அமர்ந்துப் பார்த்தாள். அவளால் தனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தனது போதி மரமான அந்த அலுவலகத்தின் ஆளரவமற்ற மாடிப்படிகளின் பகுதிக்கு தனிமையை நாடியவளாக செல்ல ஆரம்பித்தாள். லிப்டுக்கள் உபயோகம் காரணமாக அவ்விடம் எப்போதும் வெறிச்சென்றுதான் இருக்கும்.

அந்த பகுதியில் சில நிமிடங்கள் சிந்தனையில் எங்கேயோ வெறித்துக் கொண்டு நின்றவள் சட்டென்று அந்த ஆளுமையான கைகளுக்குள் சிறைப்பட்டிருந்தாள்.

“என்னடி இப்படி மெலிஞ்சிட்ட? உண்மையைச் சொல்லு… என் நினப்பு தானே? எனக்குத் தெரியும்… அதனாலத்தான் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லன்னு உனக்காகவே சென்னை ஆஃபீஸ் வந்தேன்.”

ஒரு கை இடுப்பை வளைத்திருக்க மற்றொரு கை அவள் பின்னங்கழுத்தை பற்றி இருக்க அவன் அவள் முகத்தில் நெற்றி, கண்கள், மூக்கு என சராமரியாக அவன் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.

“இந்த சாரில ரொம்ப அழகு நீ” தெலுங்கும் தமிழும் கலந்து இழுவையான தொனி அவனது அதில் அவனது குரலில் பெரும்பாலும் தொனிக்கும் கம்பீரத்தில் இவள் மனம் இப்போது கட்டுண்டது.

‘இத்தனை தூரம் வந்தும் என்னை துரத்திக் கொண்டு வந்து விட்டானா?’ உதற முயன்றாள்.

“ஏய்… தள்ளி விடாத… விழுந்துடுவேன்”, கிறக்கமான குரல் இப்போது அவளது உதடுகளுக்குள் தேய்ந்தது. அவனது மீசை மற்றும் தாடியின் சொரசொரப்பு இவள் முகத்தில் ஆங்காங்கே குறுகுறுத்தன.

அவள் கண்கள் திறந்த போதோ அங்கே தனது அக்கம் பக்கத்தில் அவள் யாரையும் காணவில்லை.

அவசரமாக வாஷ்ரூம் சென்று முதலிரவு கடந்த பெண் போல தனது முகத்தை கண்ணாடியில் அங்குலம் அங்குலமாய் தன்னை ஆராய்ந்துப் பார்க்க அருகில் இருந்தவளோ,

“வாவ், யூ ஆர் லுக்கிங்க் கார்ஜியஸ், யூ ஆர் ப்ளஷிங்க் மீரு டார்லிங்க்” என்று வாயைப் பிளந்தாள்.

அவளிடம் தட்டுத் தடுமாறி புன்னகைத்து என்ன நடந்ததெனப் புரியாதவளாக தடுமாறியவளுக்கு ஏதோ யோசனை வர அட்மினுக்கு இண்டர்காமில் அழைத்தாள்.

“ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து இன்று யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?”

“யாரும் வரவில்லையே மீரா”

“ஓ” ஒன்றும் புரியாமல் ரிசீவரை வைத்தாள்.

அடுத்த யோசனை வர ஹைதராபாத் ஆஃபீசில் தனக்கு பரிச்சயமாகி இருந்த ரிசப்சனிஸ்டிடம் விபரம் கேட்க அழைத்தாள்.

“மீரா மேடம் நீங்க நலமா?”

தொடர்ந்து ஆயிரம் கேள்வி பதிலை முடித்த பின்னரே அவளால் தான் பணிபுரிந்த குழு குறித்து பேச்சு பேச்சாக விபரம் கேட்க முடிந்தது.

மற்றவர்களின் விபரங்கள் கேட்ட பின்னர் அவன் பெயர் வந்த போதோ…

“அண்ணகாரு அப்பவே வேலை விட்டு போய்ட்டாரேமா…”எனவும் இவளுக்கு தலைச் சுற்றியது.

அப்படியென்றால் இன்று வந்தது, தன்னை முத்தமிட்டது அவனில்லையா?

“கார்த்திக் எங்கேடா இருக்க நீ?”

தொடரும்

Pages: 1 2


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *