அத்தியாயம் 3_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 3
ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா? சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்…அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம்?
பொதுவாகத் தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அலுவலுக்குத் தாமதமாக வருவதைச் சுத்தமாய் வெறுப்பவன் அவன்.எதிலும் எல்லாவற்றிலும் டிசிப்ளின் அதுவே அவன் எதிர்பார்ப்பு… அவன் அவன் என்று குறிப்பிடும் அவன் என்றால் யார்? என்று தானே கேட்கிறீர்கள்?
அமித் தான் ஆலிசின் மேனேஜர், அவன் கண்டிப்பான குணம் கொண்டவன். அவளது வருகைப் பதிவை வாரத்திற்கு ஒரு முறையாவது பார்த்து ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ஒரு மணி நேரம் அவளைத் திட்டுவது அவனது வழக்கம்.
‘சூப்பர்வைசர் ஆகிய நீயே தாமதமாக வந்தால் மற்றவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவாய்? எனச் சினந்து கொள்வான்.
வழக்கமாக மதியம் வரக்கூடிய அவன் இன்று காலையில் வந்ததும், அவள் வந்த உடனே அவளை மீட்டிங்கிற்கு அழைத்ததும், மீட்டிங்கில் எதிரில் இருப்பவரிடம் அவளைப் புகழ்ந்து பேசியதும் அவளை ஆச்சரியத்தில் அமிழ்த்தியது.
எதிரில் இருந்த அடையாளம் தெரியாத நபரை அமித் அறிமுகப்படுத்தினான்.
“மீட் மிஸ்டர் ராகவன் ஃப்ரம் டெல்லி ஆஃபீஸ்”
ஆலிஸீக்கு உயர் அதிகாரியான அவரைக் குறித்துத் தெரியும் என்றாலும் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை. பரஸ்பர மரியாதை நிமித்தமாக இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
அடிக்கடி ராகவனிடமிருந்து இவர்கள் குழுவிற்கு மின்னஞ்சல் செய்திகள் வருவது உண்டு. அவரே இப்போது சென்னைக்கு வந்து இருப்பதைக் குறித்து யோசித்தால் நிச்சயமாக அடுத்ததாக வரவிருக்கும் ப்ரொஜக்ட் எத்தனை பெரியதாக இருக்கும் என உணர முடிந்தது.
தங்கள் அலுவலகத்தில் புதியதாக ப்ரொஜக்ட் வருவதை அவள் அறிந்திருந்தாள். அதற்காக ராகவனே சென்னைக்கு அழைத்து இருக்கிறார்கள் என்றும் இப்போது அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால், எதற்காக அந்த ராகவன் முன்பாக அவளை அழைத்துப் பேசி அமித் புகழ்ந்து கொண்டு இருக்கிறான்? என்று அவளுக்குப் புரியவில்லை.
அலுவலகத்திற்கு வந்ததும் மின்னஞ்சல்கள் எதையும் வாசிக்காமல் மீட்டிங்கிற்கு வந்த தன்னுடைய மடத்தனத்தை அவள் அறவே வெறுத்தாள். இப்போது அவள் தனக்கு அனுப்பப்பட்ட எந்தச் செய்தியையும் வாசிக்கவில்லை என்று காட்டிக் கொண்டால் பிரளயமே வெடிக்க வாய்ப்பு இருந்தது.
எப்போதுமே அமித்திற்கு ஆலிஸின் விளையாட்டுத்தனங்கள் பிடிக்காது. அவனைப் பொறுத்தவரையில் சூப்பர்வைசர் என்பவர் ஒரு ஆசிரியரைப் போலக் கண்டிப்பானவராக இருக்க வேண்டும், தனது கீழ் வேலை செய்வோருக்குச் சமமாக இல்லாமல் இடைவெளி பேண வேண்டும். ஆனால் ஆலிஸோ தன்னுடைய டீம் மெம்பர்ஸ் உடன் நட்பாகப் பழகுவதும், அரட்டை அடிப்பதும், தானும் இருந்த இடத்தில் இருந்து எதையாவது தின்று கொண்டு, கூட இருப்பவருக்கும் தின்ன கொடுத்துப் பணியிடத்தை சுற்றுலாத் தலம் போல மாற்றி வைத்து இருப்பதும், சத்தமாய்ப் பேசி சிரிப்பதும், என்று வெகுவாக அமித்தின் பொறுமையைச் சோதித்துக் கொண்டு இருந்தாள்.
அலுவலகத்திற்கு ஏற்ற எந்த நாசூக்கான குணமும் இல்லாத ஆலிஸை கண்டாலே அவனுக்கு மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால் என்ன செய்வது? எப்போதும் சென்னை டீம்களுக்குள் போட்டி என்று வருகையில் டீம் ஒர்க், வருகைப் பதிவு, மற்றும் அர்ப்பணிப்போடு வேலை செய்வது இவற்றில் அவளது குழுதான் முன்னிலை வகிக்கும். பொதுவாக அவளது குழுவினர் சட்டென்று வேலையை விட்டு செல்வதும் இல்லை. எனவே, அவளது குழுவின் அட்ரிஷன் ரேட் மிகக் குறைவு. அப்படி ஒரு உறவை அவர் அவர்களோடு பேணிக் கொண்டு இருந்தாள்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேலை செய்யும் திறன் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த டீம் எனும் பரிசையும் அடிக்கடி அவளது குழுவினரே வாங்கி வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவள் குறித்த பிரச்சனைகளை மேலிடத்திற்குக் கொண்டு சென்றாலும் அவளது பர்ஃபாமென்ஸின்படி அவளை அவன் அசைக்க முடியாமல் இருந்தான். இவன் அவளுக்கு எதிராக அளிக்கும் குற்றச்சாட்டுகளை எவரும் ஏற்றுக் கொள்வதுவும் இல்லை.
அவள் தன் டீமோடு நடந்து கொள்ளும் முறை குறித்து இவன் எத்தனை குற்றம் குறைகளைச் சொன்னாலும்,
“அதனால் என்ன? அவள் அனைவருடனும் ஜோவியல் ஆக இருப்பதால் தான் அதிகமான வேலைகள் இருக்கும் போதும், வார இறுதிகளில் லீவு நாட்களில் வரவேண்டியது இருந்தாலும் அவளுடைய குழுவினர் முகம் சுணங்காமல், உற்சாகத்தோடு செயல்பட்டு அதிகப்படியான வேலைகளைச் செய்து முடிக்கிறார்கள். நீ அவள் செயல்படும் முறையைக் குறித்துக் கவலை படாதே, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான அணுகுமுறை இருக்கும். நமக்குத் தேவையான ரிசல்ட் கிடைத்தால் போதும்.” என்று அவனுக்கு மேலிடத்திலிருந்து பதில் வந்துவிட்டிருந்தது.
இப்போது அவனுக்குக் கிடைத்த வாய்ப்பில் ஆலிஸை அவன்
தன்னுடைய டீமில் இருந்து வெளியே தூக்கிப் போட முழுமையாக முயன்றான். புதிய ப்ரொஜெக்டிற்க்கு அவனிற்குக் கீழ் வேலை செய்யும் ஏதோ ஒரு டீம் லீடர் அனுப்பி வைக்கும்படி மேலிடம் கேட்டிருக்க, இப்படிப்பட்ட வாய்ப்பை தவற விடுவது முட்டாள்தனம் அல்லவா? உடனே ஆலிஸை அனுப்பி வைக்க முடிவு எடுத்து விட்டான்.
கடினமான புதிய ப்ராஜெக்டில் அவள் வேலை செய்ய முடிந்தால் சரி, இல்லை அவருடைய வேலை செய்யும் விதம் மற்றவருக்குப் பிடிக்காமல் பொறுப்புக்களை சரி வர செய்ய இயலாமல் ஆகிவிட்டால் அவளை வேலையை விட்டு துரத்தினாலும் அவனுக்கு அது குறித்து ஒன்றும் இல்லை.
எனவேதான் டெல்லியில் இருந்து வந்த ராகவனிடம் ஆலிஸை குறித்து வெகுவாகப் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தான். ஒரு பொருளை விற்க வேண்டுமானால் அதை நல்லது என்று சொல்லித்தானே ஆகவேண்டும்.


Leave a Reply