இல்லை வேண்டாம், ‘எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிப்பவை நான் தவறானவற்றை சிந்திக்க மாட்டேன்’ என் அம்மா, அப்பா நலமாக இருப்பார்கள். நான் அவர்களைப் பார்த்துப் பேச போகிறேன். கண்களை அடமாய் துடைத்துக் கொண்டாள். கண்ணாடிப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். ஒருவழியாய் சின்ன புன்னகை துளிர்க்க, இவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாரதாவின் முகத்தில் மாறாத அதே இறுக்கம் தான்.
ஷாரதா லேண்ட் லைனின் வயரை அகற்றியவள். தன் கையில் என்றும் வைத்திருக்கும் மொபைலையும் அறையிலேயே வைத்துவிட்டு, தன்னையே விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்கும் ரிஷாவை கண்டுக் கொள்ளாமல் அவளை சாப்பிட பணித்து விட்டு அவள் எடுத்து வைத்திருக்கும் பையை ஆராயலானாள்.
ரிஷாவின் கண்கள் நெருப்பை கக்கியது. இது இப்போதல்ல, எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். எப்போது ரிஷா வெளியே சென்று விட்டு வந்தாலும் அவள் பையை குடைந்து பார்த்து விட்டு தான் மறுவேலை.
ஷாரதாவும் சாப்பிட்டு முடிக்க தன் துணியை மாற்றி வந்தவர் முற்றிலுமாய் வேறு விதமாய் இருந்தார். அவரது உயரத்திற்கு அந்த முரட்டு ஜீன்ஸிம் டெனிம் ஷர்ட்-ம் பாந்தமாய் பொருந்தி இருக்க, தன்னை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பவளை சட்டையே செய்யாமல்
“வா போகலாம்”
தங்கள் காரை விட்டு விட்டு எதற்காக வாடகைக் கார் எனப் புரியாவிட்டாலும் மந்தை ஆடு போலவே ஷாரதாவை பின் தொடர்ந்தாள் ரிஷா.
அவர்கள் பயணம் தொடர்ந்தது.
முதலில் டார்ஜிலிங்க் டிஸ்ட்ரிக்டின் பாக்டோக்ரா (bagdogra) நகரத்திற்கு சென்றவர்கள் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு வரும் வரையிலும் ரிஷா ஷாரதாவின் விழி அசைவுகளுக்கேற்ப பின்பற்றும் சீடத்தியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
இரயிலின் பெயர்ப்பலகை பார்த்த பின்னர் தான் அவள் வெகுவாக குழம்பிப் போனாள்.அது மும்பை செல்லும் இரயில்.
‘அவள் செல்ல வேண்டியது சென்னை, இப்போது சென்றுக் கொண்டிருப்பதோ மும்பை. ஏன் அப்படி? எதற்காக மும்பை செல்ல வேண்டும்? ஒரு வேளை அம்மா அப்பா மும்பையில் எங்கும் இருக்கிறார்களோ?’… அவளை மேலும் சிந்திக்க விடாது செலுத்திக் கொண்டிருந்தார் ஷாரதா.
ரயில் ப்ளாட்பாரத்திற்கு வந்து விட்டிருந்தது. ஏசி கோச் அத்தனையும் அவர்கள் நடந்தே கடந்துச் சென்றிருக்க, தான் எங்கே சென்றுக் கொண்டிருக்கிறோம்? ஏன் செல்கிறோம்? என்றுப் புரியாமலேயே அவரோடு ரிஷா நடந்துக் கொண்டிருந்தாள்.
ஜெனரல் கம்பார்ட்மெண்ட் வந்ததும் ஷாரதா வை பின்பற்றி அவளும் உட் புக, ’ஜெனரல் கம்பார்ட்மெண்டிலா? ஏன்?’ என்ற கேள்வி தொக்கி நிற்கும் ரிஷாவின் விழிகளை வழக்கம் போலவே சந்திக்காமல் அவள் முன்பாக விறு விறுவென்று நடந்துக் கொண்டிருந்தார் ஷாரதா.
ஒரு இடத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லாதிருக்கவும் தாங்கள் அங்கு தான் அமரப் போகிறோம் என்று ரிஷா எண்ணிக் கொள்ள ஷாரதாவோ தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தார். அவர்கள் நின்ற இடத்தில் நண்டும் சிண்டுமாக நிறைந்திருக்க, ஒரு முஸ்லிம் குடும்பம் அமர்ந்திருந்தது. ஓரமாக இடம் கிடைக்க இருவரும் எதிரெதிரில் அமர்ந்தனர்.
நேரம் கடந்துக் கொண்டு போக அந்த வசதியில்லாத சூழலிலும் ஒருவாறாக சாப்பிட்டு கண்கள் சொக்க தலையை இருந்த வாக்கிலேயே சாய்த்து உறங்க தொடங்கினர், இரவும் கடந்தது.
ஒரு நாள் இந்த அவஸ்தையில் கழியவே, தட்ப வெட்ப நிலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறும் நிலையில், தங்கள் குளிருடைகளை ஏற்கெனவே இருவரும் பைக்குள் பத்திரமாக வைத்து விட்டிருந்தனர். இன்னும் சில மணி நேரத்தில் மும்பை வந்து விடும் யாரோச் சொல்ல கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
இரயில் மிக விரைவாக குஜராத்தின் வடோதராவைக் கடந்து மும்பைக்குள் பிரவேசிக்க பயணித்துக் கொண்டிருந்தது.
இப்போது மும்பைச் செல்ல வேண்டிய தேவையென்ன? என முன் தினத்திலிருந்தே பல முறை கேட்க முயன்றும் ஷாரதாவின் பதில் தராத புறக்கணிப்பை தாங்க இயலாதவளாக, ரிஷா தன் தலையை பின்புறமாக சரித்து கண்களை மூடினாள்.
தொடர்ந்த பயணம், படுக்க வாகாக அமையாத இருக்கை அனைத்துமோடு தன் வாழ்வில் என்னதான் நடந்துக் கொண்டிருக்கின்றது என்று புரியாத நிலை. கூடவே தூங்கவும் முடியாத மனதை பிசையும் பெற்றோர் குறித்த கவலை உணர்வுகள். அவை அனைத்தும் அவளை முந்தைய நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்று விட்டன.
‘அந்த கொடிய நினைவுகள் மறக்க முடியுமா? அவைகள் தான் தன் பெற்றோரை பிரிவதற்கு காரணமான நினைவுகளல்லவா?’
என்னதான் அம்மா, அப்பாவும் காரணம் சொல்லாவிட்டாலும் கூட அப்பாவின் தொழில்முறை நண்பர்களின் பிரச்சனைகள் தான் தன்னுடைய பிரிவிற்கான காரணம் என்பது அவளால் புரிந்துக் கொள்ள முடியாதா என்ன?
அப்போது அவளுக்கு வயது 12 அல்லது 13 இருக்கும். ரிஷாவின் தந்தை சண்முகம், அவரது நண்பர்கள் கனகவேல் மற்றும் ருத்ரபாண்டி இவர்கள் சேர்ந்து நடத்தியது தான் அந்த பிரபலமான SKR கார்மெண்ட். ஆளுக்கொரு பொறுப்பைக் கையிலெடுத்துக் கொள்ள மிகவும் வேகத்தில் முன்னேறியது அவர்கள் நிறுவனம். ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன அப்போது தான் அந்த விஷயம் நிகழ்ந்தது. நண்பர்களுக்குள்ளாக வேற்றுமையும் அதன் காரணமாக பிரிவும் ஏற்பட்டது. அவள் வயதிற்கு அது குறித்து வெகு விபரமாக தெரியாவிட்டாலும் மூன்று நண்பர்களில் கனகவேல் தான் தனியாக நிறுவனம் ஆரம்பிக்க விரும்புவதாக கூறவும்.
கணக்கு வழக்கை பார்த்து பங்கு பிரிக்க எண்ணுகையில் தான் அதுவரை வங்கி விபரங்களை கையாண்டுக் கொண்டிருந்த ருத்ரபாண்டி ஒரு சில தில்லு முல்லுக்களை செய்திருப்பது தெரிய வரவே நண்பர்களுக்குள்ளாக பிரச்சனைகள் எழுந்திருந்தன.

