சில நாட்களாக நண்பர்களுக்குள்ளாக ஏற்பட்டிருந்த பிரச்சனைகளால் தடங்கல் பட்டிருந்த சில வேலைகளை முடித்து வர எப்போதும் நேரம் கழித்து வரும் சண்முகம், வாயிலை எட்டியதுமே தூங்கிக் கொண்டிருந்தாலும் ரிஷா தான் முதலில் எழும்பி அவருக்கு கதவைத் திறப்பாள்.
அவர் வாங்கிக் கொண்டு வருகின்ற தின்பண்டங்களை கொறித்து விட்டு அவர் மடியில் படுத்து தூங்கி விடுவாள். அதனால் ரிஷாவுக்கு தாயும் தந்தையும் பேசிக் கொள்ளும் கம்பெனி விவரங்கள் ஓரளவு புரியும்.
அந்த நாட்களில் தான் கனகவேலின் மகன் திடீரென்று காணாமல் போய்விட, நட்பாக இருந்தாலும் கூட உற்றாராய் பழகியவர்கள் என்பதால் இரவும் பகலுமாக பையனை தேடச் செல்ல, ரிஷாவும் தன் பள்ளி மற்றும் விளையாட்டுத் தோழன் எங்கே காணாமல் போனானோ? என்றெண்ணி கவலைக் கொண்டாள்.
பகல் முழுக்க தேடி ஓய்ந்து இருந்த போது இரவில் பெண்கள் அழுகை ஓலமும், பதட்டமும் தன் நண்பனுக்கு ஏதோ தவறாக நிகழ்ந்து விட்டதாக இவளுக்கு புரிய வந்தது. தண்ணீரின் ஆழத்தில் உட்கார்ந்த வண்ணம் அவன் உடல் கிடைத்தது எனத் தெரிய வந்திருந்தது. சின்னப் பிள்ளைகள் அங்கே வரக் கூடாது என அம்மா ரிஷாவை தடுத்து விட்டார்.
அந்த மரணம் எல்லோரையும் வெகுவாக உலுக்கி விட்டிருந்தது. சில காலம் எல்லோருமே அதைக் குறித்தே பேசிக் கொண்டு இருந்தனர். ரிஷாவின் வீட்டில் வந்து, அவள் தாயிடம் வழக்கமாக ஊர்க்கதை பேசும் பெண்கள் இது நிச்சயமாக தொழில் முறை பிரச்சனையால் நேர்ந்த கொலையாகத்தான் இருக்க வேண்டும். என்னதான் தொழில் முறை பிரச்சனையானாலும் ருத்ரபாண்டி இப்படி செய்திருக்க கூடாது? என அங்கலாய்த்துச் சொல்வதை அப்போது கேட்டிருந்தாள்.
அதன் பின்னரே சில மாதங்களில் அவளை அம்மா டார்ஜிலிங்க் அழைத்து வந்ததும், ஷாரதாவுடனான இந்த தனிமை வாசமும்… ம்ம்ஹீம் என சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை யாரோ உலுக்கிய உணர்வு.
எதிரில் ஷாரதா நின்றிருந்தார். அவர் முன்னேச் செல்ல இவளை பின் தொடரச் வரச் சொன்னார். ட்ரெயின் நின்றிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். தான் கற்பனையில் ஆழ்வதை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என எண்ணியவளாக பின் தொடர்ந்தாள்.
டாய்லெட்டுக்குள் நுழைந்தவர் அவளையும் உள்ளே இழுத்தார். ‘ச்சீ இது என்ன?’ என நினைக்கும் போதே தன் பையை திறந்து எடுத்த புர்க்காவை அவள் தலை வழியாக அணிவித்தார்.
அவள் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் ஷாரதா அவ்வுடையை அட்ஜஸ்ட் செய்துக் கொண்டிருக்கையில்.இரயில் அதிர அதிர கம்பார்ட்மெண்டுக்குள்ளாக ஆட்கள் கூட்டமாய் தப தபவென இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டிருந்தது.
தொடரும்

