Epi 9_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 9_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 9

சம்பூர்ணாவிற்கு மனதிற்கு மிகவும் சோம்பலாக இருந்தது. கடந்த சில மாதங்கள் ஆனந்த் அத்தானின் வீட்டை பார்வையிடுவதில், வடிவமைப்பதில் சென்று விட்டிருந்தது. இப்போது ஏறத்தாழ பணி முழுமையடைந்த தருணம். சின்னச் சின்ன வேலைகள் மட்டும் மீதம் இருந்தன.

ப்ளம்பிங்க் மற்றும் எலெக்ட்ரிசிடி சார்ந்த வேலைகள் சில இடங்களில் மீதமிருந்தன. அத்தான் அனுப்பிய பணத்தால் இவளுக்கு இன்கம் டாக்ஸ் பிரச்சனை வந்துவிடுமோவென ஒரு பக்கம் பயம்.

இந்த அத்தானுக்கு வேறு வேலையென்ன? பணத்தை போட்டு விட்டாயிற்று, ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், மணி ட்ரான்ஸ்ஃபர் செய்யவும் கூட இவளது வங்கி இவளிடம் தான் பணம் வசூலித்தது. எல்லாவற்றையும் கணக்கு போட்டு வைத்திருக்கிறாள். ஒரு காசு விடாமல் அத்தானிடம் பணம் வசூலித்து விட வேண்டியதுதான்.

இவள் செலவழித்தது போல மீதம் சில இலட்சங்கள் இருந்தன. நான் இந்தியா வரும் போது மீதிப்பணத்தை வாங்கிக் கொள்கின்றேன் என அத்தான் சொன்னதாக அப்பா சொல்லிக் கொண்டார்.

‘ஹப்பா இத்தனை பணம் வைத்து சமாளிப்பது நமக்கு ஆகாதப்பா? எப்படி செலவாகின்றதென கவனம் வைப்பதற்குள்ளாக தலை வலித்து விடுகின்றது. நமக்குத் தேவை அளவான பணம். பட்ஜெட் போட்டோமா செலவழித்தோமா கொஞ்சம் சேமித்தோமாவென இருந்தால் போதும்’ என எண்ணிக் கொண்டாள்.

இவள் செலவழித்தவைகள் எல்லாம் மேல் செலவுகள்தான். அதுபோக மற்ற பில்கள் எல்லாம் நேரடியாகவே ஆனந்த் அங்கிருந்து செலுத்தி இருந்தான் போலும். எல்லாமும் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள். அவனது தற்போதைய ஸ்டேடஸ் என்ன என சொல்லும் விதமாக அவனுடைய வீட்டு அலங்காரமும் அதன் பொருட்களும் இருந்தன.

ஆனந்த் அத்தானை இத்தனை வசதியாக, வெற்றிகரமானவனாக பார்ப்பது அவள் மனதிற்கு நிறைவாக இருந்தது. இதை பார்க்க சாம்பவி அத்தை இருந்திருக்கலாம். என எண்ணியதும் என் அம்மாவும் தான் இருந்திருக்கலாம் என தோன்றவும் அவள் கண்கள் நிறைந்து விட்டிருந்தது.

‘அம்மா’ சம்பூர்ணாவின் மனம் தேம்பியது, ‘இத்தனை அவசரமாக என்னை நீ விட்டு சென்றிருக்க வேண்டாம்’ கண்ணீர் வழிந்தது.

‘அம்மா இருந்தால் அம்மாவிற்கு நான் சொல்லாமலே என் மனம் புரிந்திருக்குமோ?’ மனம் சப்பைக்கட்டு கட்டியது.

‘மனம் புரிந்து என்ன செய்வதாம்? ஆசைக்கும் ஒரு அளவுகோல் வேண்டும்’ தன்னைத்தானே கண்டித்துக் கொண்டாள். அம்மா இல்லாததில் இருந்து அவள் இப்படித்தானே இருக்கின்றாள். தன்னைத் தானே கண்டித்துக் கொண்டு தனக்குத்தானே அறிவுரை சொல்லிக் கொண்டு ம்ஹீம்… பெருமூச்செழுந்தது.

“வாட் ஹேப்பண்ட் அக்கா?”

அவளது முகம் வருடிய வண்ணம் அருகில் வந்து நின்றான் பிரசன்னா.

“நத்திங்க்டா” புன்னகைத்தாள்.

“க்ளாஸ் முடிஞ்சிருச்சா?”

“ம்ம் ஜஸ்ட் நவ்” என்றவன் அவள் மடியில் படுத்துக் கொண்டான். கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக சில மாதங்களாக மறுபடியும் வீட்டிலிருந்து வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருந்தன.

“சாப்பிடுறியா?”

“நோ அக்கா, நாட் பீலிங்க் ஹங்க்ரி”

இவனுக்கு பசிக்கவில்லையாமே? இதென்னடா உலகத்தின் எட்டாம் அதிசயம் என தம்பியை பார்த்தவள் தலையை வருடி விட ஆரம்பித்தாள்.

“டூ யூ லைக் ஹிம்?” அருகில் காகித உரையில் இருந்த புகைப்படத்தை நோக்கி விரல் நீட்டி பிரசன்னா கேட்க ஆமென்றும் சொல்லாமல் இல்லையென்றும் சொல்லாமல் மத்திமமாக தலையை ஆட்டி வைத்தாள்.

“தெரியலைடா”

“மீன்ஸ் யூ டோண்ட் லைக் ஹிம், தென் வொய் யூ செட் யெஸ் டு அப்பா?”

சொல்லாததையும் புரிந்துக் கொண்டு “உனக்கு விருப்பமில்லாத போது எதற்கு அப்பாவிடம் சம்மதித்தாய்?” எனக் கேட்ட தம்பியை பார்த்து ‘அம்மா இல்லாத குறை என நினைத்தாயே இதோ பார்’ என இவள் மனம் இவளிடம் கேட்டது.

“அப்பா என் கிட்ட பிடிச்சிருக்கான்னு கேட்கவே இல்லியே.”

“தென் தேட்ஸ் ராங்க், இட்ஸ் யுவர் மேரேஜ். யூ ஷீட் லைக் ஹிம் க்னோ?”

‘உன் திருமணம் உன் விருப்பம் இல்லாமல் எப்படி? ஷப்பா ஆணியடிச்ச மாதிரி கேள்வி கேட்குறான்யா…’ இவள் மனம் உடன் பிறந்தவனை சிலாகித்தது.

“ஆக்சுவலி ஆக்சுவல்லி ஒன்ஸ் யூ காட் மேரேஜ்…ஐ வில் மிஸ் யூ கா… வெரி பேட்லி மிஸ் யூ பட் ஐ வில் மேனேஜ்.” (உனக்கு திருமணமானால் நான் உன்னை மிகவாக தேடுவேன் அக்கா… இருந்தாலும் பரவாயில்லை சமாளித்துக் கொள்வேன்)

‘நானும் தான்’ என எண்ணியவாறு அவன் தலையை வருடி விட்டாள்.

அவர்கள் உறவு ஏறத்தாழ தாய் சேய் உறவு போன்றது. எப்படி பிரிந்து இருப்பதாம்?

‘பட் அக்கா” (ஆனால் அக்கா) அவன் தொடர்ந்தான்.

“இஃப் தேட் பர்சன் இஸ் நைஸ் தென் ஐ ஹேவ் நோ ப்ராப்ளம்” (அந்த நபர் நல்லவராக இருந்தால் எனக்கொன்றும் பிரச்சனையில்லை) மறுபடியும் காகித உரை நோக்கி கை நீட்டினான்.

“ஸ்டில் ஐ டோண்ட் லைக் ஹிம், ஐ டோண்ட் க்னோ வொய் பட் ஐ ஃபீல் லைக் ஹி இஸ் நாட் தேட் குட் அக்கா. இஃப் ஹி இஸ் லைக் ஆர் ஆனந்த் அத்தான் தென் ஐ ஹேவ் நோ ப்ராப்ளம்” எனவும் இவளுக்கு மூச்சடைத்தது.

இந்தாளை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை இவர் ஆனந்த அத்தான் போலிருந்தால் எனக்கு பிடித்திருக்கக் கூடும் எனச் சொல்லி விட்டு தன் போக்கில் அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவனை சம்பூர்ணா சிலை போல் சமைந்து பார்த்திருந்தாள்.

மிலானில் இருந்து டெல்லி வந்த ஆனந்தும், விகாஷீம் பெருந்தொற்றின் திட்டத்தின் படி அந்த ஹோட்டேலில் ஒரு வார கால குவாரண்டைன் இருந்து அன்றைய தினம் தான் கணேசன் மாமா வீட்டிற்கு புறப்படுவதாக இருந்தனர்.

ஆனந்தின் அப்பா தான் சொன்னது போல இன்னும் டெல்லி வந்திருக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் வருவதாக கூறி இருந்தார்.

காலை எழுந்ததில் இருந்தே விகாஷ் ஆனந்திடம்,

“ஆனந்த் நான் அங்கு வருவதே உன் வீட்டை பார்வையிடத்தான். நீ உன் உறவினர் வீட்டில் என்னை தங்கவெல்லாம் சொல்லக் கூடாது சரியா? அதெப்படி முன் பின் தெரியாத வீட்டினர் இல்லத்தில் நான் தங்குவது? அவர்களுக்கும் கூட சங்கோஜமாக இருக்கும் தானே?” என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றி இருந்தான்.

அன்றைய தினம் இரவு அவனுக்கு மும்பை ஃப்ளைட் இருந்தது. லிண்டா மற்றும் ஆல்ஃபீயும் அதே ஹோட்டேலில் தங்கி இருந்த போதும் அவர்களை இவர்கள் காண நேரவில்லை. தனது வீட்டிற்கு வரச் சொல்லி விலாசம் கொடுத்து விட்டிருந்தான். லிண்டா தனது வீட்டை காண வர விரும்புவதாக ஒரு பேச்சிற்கு கேட்டு இருக்கக் கூடும், அவள் அங்கெல்லாம் வருவாளா என்ன? என ஆனந்த் எண்ணி இருந்தான்.

“ப்ளைட்டுக்கு நேரமிருக்கே, சாயங்காலம் வரைக்கும் என் உறவினர் வீட்டில் தங்கிக் கொள் விகாஷ்.” என ஆனந்த் சொன்னபோது அத்தனை உறுதியாகவெல்லாம் விகாஷ் சரி என்று ஆனந்திற்கு பதில் சொல்லவில்லை.

இருவரும் அந்த ஹோட்டேலில் செக்கவுட் செய்து பணம் செலுத்தி விட்டு புறப்பட்டனர். பில்லை வாசித்துக் கொண்டு வந்த விகாஷ்,

“நாம வெளிநாட்டிலருந்து வர்றோம் என்றதும் என்ன பகல் கொள்ளை பார்த்தியா?”

“ம்ம், விட்ரா நாம என்ன எப்போதுமா இங்கே வரப் போறோம்? இதெல்லாம் மண்டையில் ஏத்திக்காதே?” என்றான்.

சம்பூர்ணா வீட்டில் கணேசன் நண்பரின் மகனை வரவேற்க ஆயத்தமாக இருந்தார்.

“அக்கா”

“என்னடா பிரசன்னா?”

“அப்பா நெவெர் எவெர் டேக்ஸ் லீவ் ஃபார் அஸ், பட் சீ டுடே ஹி டேக்கன் லீவ் ஃபார் அத்தான்”

“பாரேன் இந்த அப்பா நமக்காக என்றக்காவது லீவு எடுத்து இருப்பாரா? அத்தானுக்காக மட்டும் லீவு எடுத்திருக்கிறார்” என அவனிடம் கிசுகிசுத்தவனுக்கு அவளால் சிரிக்காமல் பதில் சொல்ல மிகவும் சிரமமாக இருந்தது.

‘அப்பா இவர்கள் பக்கம் பார்க்கின்றதைப் போல இருக்கின்றதே… அவருக்கு இவன் சொன்னது கேட்டிருக்குமோ?’ எண்ணினாலும் தம்பியை கலவரப்படுத்தாமல் தான் தயாரித்து வைத்த உணவு வகைகள் மற்றும் அத்தான் மற்றும் அவன் நண்பனுக்காக சுத்தப்படுத்தி வைத்திருந்த அறையில் எல்லாம் சரியாக இருக்கின்றதாவென போய் பார்த்து வந்தாள்.

முத்துராஜ் மாமா அடுத்த நாள் வருவதாக இருந்தார். அவர் வந்தால் எப்போதும் போல அப்பாவின் அறையில் படுத்துக் கொள்வார். மூன்றுமே இரட்டை படுக்கைகள் கொண்ட அறைகள் என்பதால் பிரச்சனை இல்லை. அக்கா தம்பியின் அறையில் தான் இரண்டு கட்டில்களும் ஒட்டி போட்டுக் கொண்டு அக்காவும் தம்பியும் இரவு முழுக்க கட்டில் டூர் சுற்றிச் சுற்றி வருவர்.

“அக்கா ஐ செட் க்னோ, தோஸ் பீப்பிள் ஆர் நாட் குட், தேட் டே தே டிட்ண்ட் டர்ண்ட் அப், அப்பா ஷீட் ஹேவ் ஆல்ரெடி டோல்ட் நோ டு தீஸ் பீப்பிள். டோண்ட் க்னோ வொய் ஹீ இஸ் எண்டெர்டெயினிங்க் தெம்?” (அக்கா அந்த ஆட்கள் நல்லவர்கள் அல்ல என்று நான் அன்றே சொன்னேன் அல்லவா? சொன்னபடி அவர்கள் வரவும் இல்லை. அப்பா எதற்காக இந்த ஆட்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றாரோ?)

சம்பூர்ணாவிற்கு கணேசன் பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டினர் இன்று நாளை என நாட்கள் கடத்தியதோடு நில்லாமல் கட்டாயம் வருவோம் எனச் சொல்லி ஒருமுறை எல்லா தயாரிப்புகளையும் செய்த பின்னர் வராமல் இருந்தனர். என்னச் செய்வது? வீட்டில் செய்த வெளியில் இருந்து வாங்கிய அத்தனை பலகாரங்களையும் பாவம் (?) பிரசன்னாதானே அன்று தின்று முடித்து இருந்தான்.

இது சம்பூர்ணாவிற்கு முதலாவது மாப்பிள்ளை வீடல்ல? மூன்றாவது மாப்பிள்ளை. மாப்பிள்ளை வீட்டாரின் அத்தனை அலட்டல்களுக்கும் அவளும் பழகித்தான் போய் விட்டிருந்தாள். மற்ற குடும்பங்களைப் போல பெண்ணும் மாப்பிள்ளையும் பேசுவது என்பதான எதையும் கணேசன் விரும்பவும் மாட்டார். ஊர் உலகம் எங்கோ முன்னே பயணிக்க இவர் இன்னும் அந்த கிராமத்தில் இருந்து வெளிவரவில்லை. தன்னைப் போலவே அவர் பார்க்கும் மாப்பிள்ளைகளும் வீட்டார்களும் பிற்போக்குவாதிகளாக இருந்து தொலைந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

“லீவ் இட் பிரசன்னா, நம்ம விருந்தினர்களை வரவேற்க தயாராக இருப்போம்” என்றாள் சம்பூர்ணா.

“ம்ம்… ஐயாம் வெரி எக்ஸைடட் டு சீ ஆனந்த் அத்தான் யூ க்னோ. ஹி இஸ் வெரி ஹெண்ட்சம், ஹி இஸ் கூல் அண்ட் வெரி நைஸ் பர்சன் ஆல்சோ.” ( நான் ஆனந்த் அத்தானை சந்திக்க வெகு ஆர்வமாக இருக்கின்றேன், ஆனந்த் அத்தான் வெகு அழகானவர், அன்பான குணமும் கூட)

‘ஆரம்பித்து விட்டாயா ஆனந்த் அத்தானின் புராணத்தை?’ என்றவளாக சம்பூர்ணா தம்பியை புன்னகைத்து பார்த்திருந்தாள்.

கதவு அழைப்பு மணியை இசைக்கவும் கதவை திறக்க விரைந்தாள்.என்னதான் மனதிற்குள்ளாக சில சஞ்சலங்கள் இருந்தாலும் கூட பல வருடங்கள் கழித்து தங்கள் வீட்டிற்கு வரும் அத்தானை நல்ல விதமாக உபசரிக்க வேண்டும் என எண்ணியவளாக கதவை திறந்தாள்.

சின்ன வட்ட பொட்டொடு, நிலவிற்கொப்ப தணிந்த அழகுடன்… சல்வாரில் எதிரில் நின்று, “வாங்க அத்தான்” என வரவேற்றவளை பார்த்த விழி பார்த்த வண்ணம் உறைந்து போய் ஆனந்த் பார்த்திருக்க,

“டே கிராதகா… பாப்பு பாப்புன்னு சொன்னியே, சின்னப் பொண்ணுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்டா. கும்தாவா இருக்காடா… உங்க மாமா கிட்ட நான் நல்லா தமிழ் பேசுவேன்னு சொல்லி எனக்கு பொண்ணு கேட்டு கட்டி கொடுக்கச் சொல்லுடா நான் உனக்கு மிலானில் சிலை வச்சு கும்பிடறேன்.”

விகாஷ் இவன் காதில் முணுமுணுக்க இவர்களை வரவேற்று உள்ளே சென்றவளின் பின்னே செல்லாமல் ஆனந்த் விகாஷை முறைத்து நின்றான்.

தொடரும்

error: Content is protected !!