3. என்னமோ நடக்குது!?_சிறுகதை_ஜான்சி

இரவின் நிறம் சுற்றிலும் விரவி நிற்க , அடர்ந்த வனத்தின் அருகாமையில் அமைந்திருந்த அந்த காவலர் குடியிருப்பைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் குளிர்ந்தக் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது.வானில் தேய்பிறை நிலவும் அமாவாசைக்கு மூன்றே நாள் இருக்கின்றது என நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் இடது ஓரத்தில் அமைந்துள்ள அபார்ட்மெண்டினுள் இப்போது என்ன நடைப்பெறுகின்றது என்று நாம் பார்க்கலாமா?.
ஆந்த வீட்டின் கதவைத்தாண்டி வரவேற்பரையின் உள்ளே நுழைந்து கடந்துச் சென்றால் முதல் படுக்கையறையில் பத்து வயது ஷாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். இரண்டாவது அறையிலோ காலை முதல் இரவு வரைச் செய்த வேலைகளின் அலுப்பில் அந்தக் குடும்பத்தின் தலைவி பபிதா தூக்கத்தில் சற்றுப் புரண்டுப் படுக்கிறார்.இனி…
கணவன் மாநில காவல் துறையை சார்ந்தவன் தான் இருந்தாலும் கணவன் வீட்டில் இல்லாமல் இரவுப் பணிக்கு செல்லும் நேரங்களில் அவள் தானே குடும்பத்தின் காவலி?
அந்த நேரம் இயல்புக்கு மாறான சர் சர் எனும் ஒலி கேட்க, அவளுக்கு தூக்கத்திலும் விழிப்பு வருகிறது. தனது கண்களின் முன்பாக நிகழுவனவற்றை நம்பவும் இயலாமல், மனதில் எழுந்த பயத்தில் கண்களை விரித்த வண்ணம் குரல் எழுப்பத் தோன்றாமல் வாய் பிளந்தவாறே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அங்கே…அங்கே அது என்ன?..அந்த.இருட்டில் ஒரு உருவம் அது. அதன் இடுப்பளவே உயரத்தில்… அதன் தலைமுடி விரிந்துக் கிடக்க கையில் ஏதோ ஒன்றைப் பிடித்து தரையோடு தரையாகப் பிடித்தவாறு இழுத்துக் கொண்டு அவளை நோக்கி அது வந்துக் கொண்டிருந்தது.
‘ஐயோக் கடவுளே… இது என்னை நோக்கி அல்லவா வருகின்றது… இப்போ சரண் கூட இல்லையே ஐயோ என்ன செய்யலாம்? இது என்னை விடாதுப் போலிருக்கே?’… மிரண்டவளாகப் பார்த்த வண்ணம்… அப்படியே பயத்தில் உறைந்து எழுந்து அமர்ந்திருக்க…
“அம்மா, அம்மா” என்னும் குரல் கேட்டு தன் உணர்விற்கு வந்தாள்..
இப்போது அவளின் மகள் ஸ்வப்னாதான் அவளை உலுக்கிக் கொண்டு இருந்தாள். தான் பயந்தது என்ன? இங்கே நிகழ்ந்தது என்ன? என ஆசுவாசம் கொண்டாலும்… பயந்தது பயந்தது தானே? இல்லையென்றா ஆகப் போகின்றது? கோபம் கொண்டாள்.
“ஏண்டி, தூங்கப் போகுமுன்னே ரெட்டைச் சடைப் போட்டு விட்டேனே…இதென்ன தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு திரியுற? அதுவும் நட்ட நடு இராத்திரியில?”… (தூக்கக் கலக்கத்தில உன்னைப் பேயென்னு நினைத்தேன்னு சொல்லவா முடியும், அதிலும் இவள் சரியான அப்பா கோண்டு, சொல்லிக் கொடுத்திட்டான்னா. பிறகு சரணிடம் யார் பேச்சு வாங்குவது?) என்று மனதில் நினைத்துக் கொண்டவளாய் கூற,
“போம்மா நீங்க வேற… நான் தான் சடையை அவிழ்த்திட்டேன்…கொஞ்சம் சும்மாயிருங்கம்மா இப்போ நான் சொல்லுறதக் கேளுங்க”..
என்ற மகளின் பேச்சைக் கேட்டவாறு பபிதா தனது மகள் வருகையில் அந்த சர்ரென சப்தம் எழுப்பியது எது? என்று அறிந்துக் கொள்ள அவள் கையில் என்ன இருக்கிறது என்றுப் பார்த்தாள்.
சப்னா தன்னுடைய டெடி பியரைத் தரையோடு தரையாக இழுத்துக் கொண்டு வந்து இருக்கிறாள் போல..அதன் சப்தத்தில் தான் மிரண்டு… ஹய்யோ ஹய்யோ…மானசீகமாக தன்னை நொந்துக் கொண்டவளாக மறுபடி மகளிடம் பேசலானாள்.
“ஏண்டி அப்படி உனக்கு என்ன சொல்லணும இப்ப? எதுவானாலும் காலையில பேச வேண்டியது தானே? தூங்குறவள தூங்கவும் விடாம..” கொட்டாவி விட்டாள்.
“அம்மா கதவுக்கு அந்தப் பக்கம் பேய் இருக்கும்மா”…. சொல்ல வந்ததை சின்னவள் பொட்டென போட்டுடைக்க.
“எ…ன்..ன……து?” …….ஏற்கெனவே பயத்தில் இருந்த பபிதாவால் குரலை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.
“ஏம்மா, சும்மாயிரும்மா நீங்க கத்துறதுல எனக்கே பயமா இருக்குது… பயந்து உங்க கிட்ட படுக்கலான்னு வந்தா… நீங்களும் கத்தினா எப்படி?” எட்டு வயது ஸ்வப்னா அம்மாவின் படுக்கையில் தனக்கும் தன் டெடிக்கும் இடத்தை ஒதுக்கினாள்.
“என்னடி பேயின்னு சொல்ற?… உன் பாட்டுக்கு என் பக்கத்தில வந்து படுக்கிற ..எங்க இருக்குப் பேயி? ..எப்ப பார்த்த நீ?” காஞ்சனா , முனி என்று ஒரு படமும் விடாமல் பார்த்த பாதிப்பு அவள் குரலில் தெரிந்தது.
“அம்மா நான் அண்ணா பக்கத்தில எப்பவும் போல படுத்து இருந்தேனா?, அண்ணா சீக்கிரமா தூங்கிட்டான். அப்போ கதவையே பார்த்துக் கிட்டு இருந்தேனா?…”
‘மவளே அப்பாக்கு தப்பாம பிறந்துருக்க, எப்ப பாரு எதையும்கண்காணிக்கிற வேலை’ மைண்ட் வாய்ஸ் , மைன்ட் வாய்ஸ்.
“அப்போ கதவுக்கு அந்தப் புறத்தில வெளிச்சம் வர்றதும் போறதுமா இருந்துச்சு.கதவு லாக் செய்திருக்கான்னு கிட்ட போயி பார்த்தேனா.?”.
‘நல்ல வேளை கதவை திறக்கல நீ?’ அதே மைண்ட் வாய்ஸ்தான்
‘கதவை திறக்கலாமான்னு கூட யோசிச்சேன்மா …’
‘அடப் பாவி’
“ஆனா கை எட்டல…”.
‘அந்த கார்பெண்டருக்கு ஒரு தேங்க் யூ சொல்லணுமே’ மனதில் எண்ணிய பபிதா மகளிடம்,
“சரி சரிப் படுத்து தூங்கு…” என்றாள்.
அதே நேரம் கதவு இடிப் பட்ட சத்தம் கேட்க தூங்க சென்ற சின்ன & பெரிய டிடெக்டிவ்ஸ் இரண்டு பேரும் அட்டென்ஷனில் எழுந்தார்கள்.
“வாங்கம்மா..” இது பெரிய டிடெக்டிவ், அதாவது ஸ்வப்னா… ஸ்வப்னாவிற்க்கு முன்னால் பபிதா எல்லாம் ஜீஜீபி இல்ல..
“ம்ம் சரி..” இப்போ பேசியது ஜீனியர் டிடெக்டிவ் பபிதா தான்.
“டொய்ங்க் டொடய்ங்க், டொடய்ங்க் டொடய்ங்க், டொய்ங்க் டொடய்ங்க் டொடய்ங்க்” ம்யூசிக் பேக்ரவுண்டில் ஒலிக்க அம்மாவும் மகளும் தரையில் மெது மெதுவாக பாதம் பதித்து சென்றார்கள்.
“அம்மா ஸ்ஸ்…” வாயில் கை வைத்து அமைதியாக இருக்கச் சொன்னவள். கிசு கிசுப்பாக..
“அம்மா இப்போ ஒருத்தரையும் காணலை… பேயை அதுக்கு தெரியாம தான் காட்ச் செய்யணும். அதனால இனிமே சத்தம் வர்ற வரைக்கும் நாம ரெண்டு பேரும் இங்க கதவுக்கு கிட்டயே காத்து நிற்போம் சரியா?..”
“சரி சரி…”
“பேய் வந்ததும் சட்டுன்னு கதவைத் திறந்து பட்டுன்னு பிடிச்சிடலாம்..”.
‘பேயை பிடிச்சி என்ன செய்றது, அதுக்கு வேற தினம் பின்னே வித விதமா பொங்கிப் போடணுமா…?’ மனதிற்குள்ளாக குழம்பிய பபிதா புரியாத தோரணையில் கேள்விக் கேட்க வாயைத் திறக்க வர ஸ்வப்னா தன் அம்மாவை வடிவேலுவைப் போல கையை குவித்து வாயில் வைத்துக் காட்டி மூடச் சொன்னாள்.
அதன் கூடவே “ஸ்ஸ்ஸ்…” எச்சரிப்போடு இருவரும் கதவின் அருகிலேயே தஞ்சமாக, கதவில் காதைப் பதித்து பபிதாவிற்கு இப்போது காதே வலிக்க ஆரம்பித்து விட்டது. அவள் எப்போது கண் அசந்திருந்தாளோ? தெரியவில்லை.
கதவின் மணி அழைக்க, அதன் சத்தத்தில் அதிர்ந்து எழுந்தாள் பபிதா. ‘இந்தக் குட்டிப் பிசாசை எங்கே காணவில்லையே?’ மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டவள் கண்களை இங்குமங்கும் சுழற்றி தேடிய வண்ணம் கதவைத் திறந்து கணவனுக்கு வழி விட்டாள்.
‘சரி இனி எதுவானாலும் அவர் பார்த்துக்குவார்’ என்று எண்ணியவளாய் படுக்கைக்குச் சென்றால் கதவின் அருகில் பேயை பிடிக்கச் சொல்லி தாயை தூங்க விட்டு விட்டு கட்டிலில் தனது கரடி பொம்மைக்கும் , தனக்குமாய் இடத்தைப் பிடித்துக் கொண்டு கை கால்களை விரித்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“அடடே குட்டி இங்கயே தூங்கிட்டாளா?” சொல்லியவாறு அவள் கூடவே சரணும் மீதி இடத்தைப் பிடிக்க..
‘நான் இன்னிக்கு தூங்கின மாதிரி தான்’ நொந்தவாறு பபிதா தனது மகன் அறையை நோக்கிச் சென்றாள்.

