Epi 2_Manadhoram Unthan Ninaivugal

அத்தியாயம் 2_மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 2

கண்கட்டு வித்தை

கல்லைக் கண்டவர் 

நாயகனை காணவியலவில்லையாம்.

நாயகனை கண்டதுமோ 

கல்லை காணவில்லையாம்.

உன்னைத் தேடி

உன் நினைவுகளில் 

சிக்கிக் கொள்வதும்,

 உனை நேரில் கண்டாலும் 

கானலென திகைப்பதுவும் என

கண்கட்டு வித்தையதில் 

மாட்டித்தவிப்பதிலே

அந்த சிற்பியும் நானும் ஒன்று.

தனக்கு நிகழ்ந்தது கனவு என்று மீராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் ஹைதராபாதில் இருந்து திரும்பி வந்து நான்கு மாதங்களாகிற்று. இத்தனை நாட்கள் வராத கனவா இப்போது வந்து விடப் போகின்றது?

அப்படி என்றால் தாம் இந்த அளவிற்கு அவனை தேடுகின்றோமா? சித்தம் கலங்கிப் போயிற்று.

சாத்தியம் இல்லாத, சாத்தியம் இருந்தாலும் அவளுக்கு விருப்பம் இல்லாத அந்த உறவு அந்த மனிதன் குறித்த எண்ணங்கள் அவைகள் இவளைச் சுற்றிச் சுற்றி எதற்கு வர வேண்டும்? 

அன்று அவளுக்கு அங்கே யாருமில்லாத அந்த தனிமை நாட்களில் அவன் அவளை தாங்கிக் கொண்டானே? 

“ஏந்திரா? சால நொப்பெஸ்துந்தரா?” (என்னடா? ரொம்ப வலிக்குதா?) இதை அவன் கேட்ட போது அவன் குரலில் இருந்த வலி அதுதான் இவள் ஆழ்மனதை அசைத்து இருக்க வேண்டும். 

தனியாக இருக்க விருப்பப் படுகின்றவளை தனியாக விட்டுத்தான் மற்றவர்களுக்கு பழக்கம். இவன் மட்டும் தான் அவளது தனிமைக்குள்ளாக ஊடுருவி உள்ளே வந்தான். அதனால் தான் அவளுக்கு அவனை பிடிக்காது. ஆனால், அவள் உள் மனதிற்கு அவனை பிடித்து விட்டதோ?

இல்லையென்றால் கண்கள் திறந்துக் கொண்டு இருக்கும் போதே இப்படி நிஜம் போலொரு கனவு கண்டிருப்பாளா? 

மூன்று வருடங்கள் முன்பு மீரா இந்த அலுவலகத்தில் பணிபுரிய ஆரம்பித்த போதில் இருந்து அவள் கார்த்திக் குறித்து அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தாள். ஒரே அலுவலகத்தின் மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் கிளைகளில் பணி புரிவோர் பல நேரங்களில் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டியது இருக்கும்.

அப்படி ஒரு மீட்டிங்கில் தான் அவனோடு ஃபோன் கான்ஃபெரன்ஸில் அவர்கள் உரையாடுவதாக இருந்தது. அந்த வேலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவனுக்கும் அவனது குழுவுக்கும் கற்றுக் கொடுக்க இவளது பாஸ் இவளை வெகுவாக வேண்டி கேட்டுக் கொண்டு இருந்தார். அதனால் தனது ஷிப்ட் முடிந்த பிறகும் கூட குறிப்பிட்டிருந்த 6 மணிக்கு இவள் கான்பெரன்ஸ் அறை தேடி மீட்டிங்கிற்கான தொலைபேசி எண்ணை அழுத்தி அமர்ந்திருக்க கார்த்திக் இணைப்பில் வரவே இல்லை.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *