எப்போதுமே அலுவலகங்களில் ஒரு சில சொல்லப் படாத நடைமுறைகள் உண்டு. அதாவது யாருக்கு யாரிடம் இருந்து உதவி வேண்டுமோ அவர்தான் கெஞ்சி கூத்தாடி மற்றவரிடம் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். உதவி செய்கின்றவர் எதற்கும் மெனக்கெடுவதில்லை.
இங்கோ அதற்கு நேர்மாறாக உதவி செய்கின்றவள் காத்திருக்க, உதவி வேண்டியவன் தனது குழுவோடு இணைப்பில் வந்த போதோ குறிப்பிட்ட நேரத்தை விடவும் பத்திருபது நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.
நேரம் தவறாமை மீராவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எந்த வேலையானாலும் திருத்தமாக செய்வது அவளது பாணி. தனது வேலையில் அவள் கொஞ்சம் கண்டிப்பானவள்தான். அவளுக்கு சோம்பேறிகள், சாக்கு போக்கு சொல்கின்றவர்களை சுத்தமாகவே பிடிக்காது எனலாம். அதனால் கார்த்திக் அன்று மீட்டிங்கிற்கு தாமதமாக வந்தது அவளுக்கு ஆரம்பத்திலேயே அவன் மீது ஒரு வகையான ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.
தனது தாமதத்தால் பிறரது நேரத்தை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது அவளது கருத்து. ‘இந்நேரம் நான் வீட்டில் இருக்க வேண்டியது? இவர்களுக்காக காத்திருந்தால் தாமதமாக வருகின்றார்களே? சொன்னால் சொன்ன நேரத்தில் வர முடியாதா?’ என சிடுசிடுப்பாக அவள் மனதில் தோன்றினாலும் தான் ஒப்புக் கொண்ட பொறுப்பிற்காக அவர்கள் கேள்விகள் கேட்க கேட்க இவள் விவரிக்க ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் இவள் கற்றுக் கொடுத்ததை அவன் கற்றுக் கொண்டது போல அவளுக்கு தோன்றவில்லை. விருப்பமே இல்லாமல் கூட சும்மா மீட்டிங்கில் அமர்ந்திருக்கின்றனர் என்பதாக தோன்றினது. ஏதோ தான் தனியாக பேசுவதான ஒரு உணர்வு எழவும், தான் கூறியதை எதிர்தரப்பினர் புரிந்துக் கொண்டார்களா? என்றறிய ஒரு சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.
பொதுவாக வெறுமனே எதையாவது கற்றுக் கொடுப்பதற்கு, கேள்விகள் கேட்டு யோசிக்க வைத்து கற்றுக் கொடுப்பது எதிரில் இருப்பவர்களது சிந்திக்கும் திறனை தூண்டி விடும் இது ஒரு வகையான கற்பிக்கும் வழிமுறை அதைத்தான் அவளும் பின்பற்றினாள்.
அதிலும் அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள். கார்த்திக்கிற்கு விடை தெரியவில்லையோ அல்லது விடை தெரியாமல் பெண் ஒருத்தி முன்பு அவமானப்படுவதா? எனும் ஈகோவோ என்னமோ? சட்டென்று,
“நன்றி மீரா, நாங்கள் உன்னை மறுபடி தொடர்பு கொள்கிறோம்” என்றுச் சொல்லி தொலைபேசி இணைப்பைத் துண்டித்து இருந்தான்.
மீராவிற்கு அவனது செயல் மூஞ்சில் அறைந்தார் போல இருந்தது. ‘இப்படிப்பட்ட ஒருவனுக்காகவா சில மணி நேரங்கள் வீணடித்தோம்?’ எனும் சிந்தனை காரணமாக அவள் மனதில் கார்த்திக் குறித்த ஒரு சின்ன கரும் புள்ளி பதிந்து விட்டது.
அதன் பின்னர் அவள் அவனிடம் நேரிலோ, போனிலோ பேச தேவை எப்போதும் ஏற்பட்டிருக்கவில்லை.
தான் இந்த நபர் இப்படித்தான் என கார்த்திக் குறித்த முன் அனுமானத்தில் இருக்க அவனை அவள் நேரில் சந்தித்த போது நிகழ்ந்தவைகள் எல்லாம் நம்பவே முடியாத அதிசயங்கள்தாம்.
மீரா தனது வேலை முடிந்து விடவும், தனது அலுவலக கண்ணாடிச் சுவர் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். இருட்ட ஆரம்பித்து இருந்தது, இனி வீட்டிற்கு புறப்பட வேண்டியதுதான். காலை நேர அவசரத்தில் அன்று டூ வீலரை அவள் எடுத்து வந்திருக்கவில்லை.
ரிசப்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு வழக்கமாக படிகள் இறங்கிச் செல்ல கூசியது. ‘அங்கே தானே அந்த முத்தம்…அல்ல முத்தங்கள்…’ இப்போதும் கூட அவை நிஜம் போலவே இருந்தன. கீழிறங்க மின்தூக்கியை உபயோகித்தவள் அதன் பின்னர் ரோட்டை நோக்கி நடக்கலானாள்.
அலுவலக கேம்பஸை கடந்துச் சென்றால் ஆட்டோ பிடித்து விடலாம், இல்லையெனில் ஓலாவில் ரிக்ஷா பதிவுச் செய்யலாமா? என நடந்தவண்ணமே குனிந்து மொபைலில் ஓலா அப்ளிகேஷனில் ரிக்ஷாவை தேடினாள். அப்போது அவளை யாரோ உரசிச் சென்ற உணர்வு. கூடவே “ஏல உனாவே?”( எப்படி இருக்கடி?) எனும் மிக மெல்லிய குரலும் கேட்டிருந்தது.
‘யாரது?’
திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் அருகாமையில் யாரையும் காணவில்லை. பெப்பரப்பே என்று விரிந்த வளாகம், அதில் தன்னை உரசிச் செல்லும் தேவையே யாருக்கும் இல்லையே? அந்த வார்த்தைகள், அவளது காதுக்குள் கேட்ட வார்த்தைகள் அவை தெலுங்கு தானே? உடனே மொபைலில் அதன் அர்த்தம் தேடி அறிந்தாள்.
‘நிஜமாகவே இது அவன் தானா? அதெப்படி அவனாக இருக்க முடியும்? அவனை யோசித்து யோசித்து, கடைசியில் தான் கிறுக்காகி விட்டோமோ?’ மனதிற்குள்ளாக கலங்கினாள்.


Leave a Reply