Epi 3_Manadhoram Unthan Ninaivugal

அத்தியாயம் 3_மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 3

காதல்வியாதி 

ஆணென்றும் பெண்ணென்றும்

பாலினம் பாராது

படிப்புக்கும், பகட்டுக்கும் 

வித்தியாசம் காணாது

பேதங்கள் இன்றியே,

அனைவரையும் தாக்கும்

இந்த காதல் ஒரு தொற்று வியாதி.

மீராவின் கலக்கம் இரவிலும் தொடர, தன்னையறியாமல் நான்கு மாதங்களுக்கு முன்னதான நினைவுகளில் அமிழ்ந்தாள்.

அன்று வழக்கம் போலொரு வெள்ளிக்கிழமை சாயுங்கால நேரம்.

வேலை நேரம் முடிகின்ற போது அவளுக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவள் அந்த டைரக்டரின் கேபின் சென்று நிற்க, உள்ளே அலைபேசி அழைப்பில் ஆழ்ந்திருந்த அவர் இவளைக் கண்டதும் கண்ணாடி அறையின் உள்ளிருந்து அழைத்தார்.

அவர் பேசி முடிக்கும் வரையில் அந்த குட்டிக் கேபினில் சுற்றிப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

“ஹே மீரா, நலமா?” அவளை பதில் சொல்ல விடாமல் கூட தொடர்ந்தார்.

“நான் உன்னை அழைத்ததற்கு மிக முக்கியமான அவசரமான காரணம் இருக்கின்றது. திங்கள் கிழமை நீ ஹைதராபாதில் இருந்தாக வேண்டும்.” என காரணங்கள் விபரங்கள் சொன்னவர்,

“திங்கள் காலை உனக்கு எத்தனை மணிக்கு ஃப்ளைட் பதிவுச் செய்யட்டும்? 6 மணி ஃப்ளைட்டா இல்லை 7 மணிக்கா?”

என்னவோ பக்கத்தூரு சந்தைக்குப் போகும் பஸ் விபரம் கேட்டதைப் போலிருந்தது அவரது பேச்சு.

தேவைப்பட்டால் கிளை அலுவலகங்களுக்கு பயணித்தாக வேண்டும் எனும் விதிமுறைகள் மீரா அந்த பணியில் வேலைக்கு சேரும் முன்பே அவளுக்கு தெரிவிக்கப் பட்டு இருந்ததால் தன்னால் செல்ல முடியாது என அவள் மறுப்புச் சொல்ல வாய்ப்பில்லை.

இருந்தாலும் கூட கடைசி நேரம் தன்னிடம் தகவல் சொல்லி, சனி ஞாயிறு லீவை அமைதியாக கழிக்க விடாமல் துரத்தும் அந்த சுஜித் மேல் மீராவிற்கு கடுப்பு கடுப்பாக வந்தது.

“6 மணி ஃப்ளைட்டா இல்லை 7 மணிக்கா? அட்மின் டீமிடம் எந்த ஃப்ளைட்டில் உனக்கு டிக்கெட் பதிவுச் செய்யச் சொல்லட்டும்?” அவர் தன் பேச்சிலேயே இருக்க, போற உயிரு ஒரு மணி நேரம் முன்னயே போகட்டும் எனும் கடுப்பில் “ஆறு மணிக்கே இருக்கட்டும் சுஜித்” என்றாள்.

சுஜித்தின் முகம் மலர்ந்தது… அதன் காரணம் அவளுக்குத் தெரியாதா என்ன? அதிகாலை ஃப்ளைட் டிக்கெட்டுக்கள் விலை குறைவு. 

‘என்னமோ காசு இவனுங்க பையில் இருந்து போடுகின்றது போலத்தான்?’ என மீரா தனது மனதில் நொடித்துக் கொண்டாலும், அவரிடம் புன்னகைத்து விடைப் பெற்றாள்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *