வீடு வந்துச் சேர்ந்த போது ஒரு ஆசுவாசம், அன்று சிந்தித்து சிந்தித்தே தனது மனம் களைத்திருந்ததால் சீக்கிரம் உண்டு விட்டு உறங்கச் செல்ல வேண்டும் எனத் தீர்மானித்திருந்தாள்.
வீட்டிற்கு உள்ளே வந்த போது அங்கே டிவி கவனிக்கப் படாமல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருக்க, சோபாவில் ஒன்று போலவே தோற்றமளித்த அந்த இருபது வயது இரட்டையர்கள் சாவகாசமாய் யாரோ ஒரு செலிபிரிட்டியை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சல்லி சல்லியாக நொறுக்கிக் கொண்டு இருந்தனர்.
மீரா ஐந்தேகால் அடி உயரம் தன் அப்பாவை போல முகம். ஒல்லி, குண்டு என வரையறுக்கப் படாத தோற்றம் கொண்டவள் எனில், அவள் தங்கைகள் அம்மா அப்பா இருவரது முக இலாவண்யங்கள் கொண்டு அவளை விடவும் சற்று வளர்த்தியாக ஒல்லியாக இருந்தனர்.
அவர்கள் அரட்டை வெகு சுவாரஸ்யமாக போய் கொண்டு இருந்தது. அம்மா அவர்கள் அருகில் இருந்து எதையோ செய்துக் கொண்டு இருந்தார்.
“அக்கா தேங்க்ஸ்கா” இவளைக் கண்டதும் ஓடி வந்து இருவரும் அவள் கன்னங்களில் ஆளுக்கொரு பக்கம் முத்தங்கள் வைத்தனர். ஏற்கெனவே வாங்கிய முத்தங்களின் அதிர்வுகளில் இருந்து மீளாமல் இருந்தவளுக்கு இப்போது தூக்கி வாரிப் போட்டது.
“என்னக்கா இப்படி பேந்த பேந்த முழிக்குற? மை ஸ்வீட் அக்கா” மறுபடி அவளை ஆளுக்கொரு கன்னமாய் கடித்து வைக்க…
“டேய் போங்கடி” இருவரையும் விரட்டி விட்டு மூத்த மகளை காப்பாற்றினார் தங்கம்.
“இதுங்க இரண்டும் சேர்ந்து மூத்தவளை ஒரு வழியாக்கிடும்” மீராவின் சார்பாக பேச,
“அக்கா ஃப்ரிட்ஜ்ல ஐஸ் க்ரீம் ஃபேமிலி பேக் வாங்கி வச்சிருக்கா, அப்ப நாங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா?” தாய்க்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினாள் சித்ரா.
“வாங்கி வச்சது நான், யாருக்கும் மிச்சம் வைக்காம வழிச்சு தின்னுட்டு வேலையிலருந்து களைச்சு வந்தவளை போய் கடிச்சு வைக்கிறீங்கடி?”, இது தங்கம்.
“அம்மாவாம்டி” சுசித்ரா சித்ராவை பார்க்க இப்போது அம்மாவை துரத்தினர் இருவரும்.
மீரா தன் அறைக்கு சிரித்துக் கொண்டேச் சென்றாள். பொதுவாக அவள் அதிகம் பேசாவிட்டாலும் தங்கைகள் தங்கள் பேச்சுக்குள்ளாக அவளை இழுத்து விடுவார்கள். அவர்கள் பேச, இவர்கள் கேட்க என இருவரும் வீட்டில் இருந்தால் வீடு கலகலப்பாக இருக்கும்.
தனக்குள்ளேயே சுருண்டுக் கொள்ளும் introvert எனப்படும் தனிமை விரும்பி மீரா. அவள் தங்கைகளோ உள்ளூர் கிசுகிசுக்களில் இருந்து கொரியன் ட்ராமா, பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களில் வரைக்கும் விவாதிப்பவர்கள். அவர்களோடு இருப்பதால் மீரா தான் படிப்பு, வேலையை தவிர வேறு சில விஷயங்களையும் தெரிந்துக் கொண்டு இருக்கிறாள் எனலாம். வெளி நண்பர்களோடு சுற்றுவது அந்த வீட்டு பெண்களுக்கு மறுக்கப் பட்டு இருந்தது என்பதால் சகோதரிகள் மூவரும் தான் ஒருவருக்கொருவர் தோழிகளாக இருந்தனர்.
தனக்கு அவர்களைப் போல படபடவென பேச வராது என்பதால் தங்கைகளிடம் இருந்து மீரா ஒதுங்கி எல்லாம் இருக்க மாட்டாள். தங்கைகள் பேச, அவள் கேட்கவென இருப்பாள். படம், மால் என அவர்கள் இழுப்பிற்கு இழுபடுவாள். வேலை பார்க்கும் அக்கா டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுடன் இருக்க இவர்களுக்கு என்ன சிரமம்? வாரமொரு முறை அவளை இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற சென்று விடுவார்கள். அவ்வப்போது அதில் அவர்கள் அன்னையும் சேர்ந்து விடுவார்.
அப்பா கலகலப்பானவர் தான் ஆனால், அவர் இருக்கையில் அடக்கி வாசிக்கும் இவர்கள் அவர் வீட்டில் இல்லாத போது அடிக்கின்ற கொட்டங்கள் அதிகம்.
ஒருவழியாக இரட்டையர்கள் அம்மாவை வீட்டைச் சுற்றி ஓட விட்டு, பிடித்து, முத்த மழையில் நனைய வைத்து வீட்டில் கொண்டு விட அதற்குள் முகம் கழுவி துணி மாற்றி வந்திருந்த மீரா இருந்த டீயை நால்வருக்கும் ஊற்றி வந்தாள். ஸ்னாக்ஸையும் கொறிக்க கொண்டு வந்து டீப்பாயில் வைத்தாள்.
சாயங்கால டீ நேரத்தில் இவள் வரும் வரைக்கும் காத்திருப்பதுவும் அவர்களது வழக்கம் தான். அதனால் மற்றொரு அரட்டையுடன் டீ நேரம் மிகச் சிறப்பாக முடிவடைந்தது.
இரவில் தூங்கும் முன்பாக பல்துலக்கி, முகம் கழுவிக் கொண்டு இருக்கையில் மறுபடி முத்த ஞாபகம் வர ‘இவனை என்னால் மறக்கவே முடியாதா?’ மீராவின் மனம் மிகச் சோர்ந்தது.
நூதனம்
விவரிக்க இயலாத
நெல்லிச்சுவைப் போல,
முதல் மழையின்
மண் மணத்தைப் போல,
உனக்கும் எனக்கும் இடையிலான
காதல் உணர்வு
மிக நூதனமானது.
தொடரும்


Leave a Reply