Epi 2_Thurathum Nizhalgal_Jansi

அத்தியாயம் 2_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

துப்பாக்கிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கையடக்கமான கைத்துப்பாக்கிகள் மற்றும் அளவில் பெரிதான குழல் துப்பாக்கிகளுமே (long guns). பொதுவாக எல்லா கைத்துப்பாக்கிகளுமே பிஸ்டல் என அழைக்கப் பட்டாலும் பிஸ்டல் என்பது கைத்துப்பாக்கியின் ஒரு வகை மட்டுமே. கைத்துப்பாக்கிகளில் இன்னும் பல வகைகளும் உள்ளன. அவை revolvers , Derringers, Semi-automatic pistols, single shot pistols, machine pistols மற்றும் pepperboxes. 

கைத்துப்பாக்கி பயனாளர்களைப் பொறுத்தவரையில் சினிமாவில் காண்பிக்கப் படுவது போல துப்பாக்கியை ஒரு கையால் அனாயாசமாக பயன்படுத்துதல் சாத்தியப்படாத ஒன்றாகும். பிஸ்டல்களை விடவும் ரிவால்வர்களைக் கையாள்வது எளிதென்றும் குறிப்பிடுகின்றனர். 

**************************************

‘அரங்கநாதன் அத்தானா போன் செய்தது?…. ‘

“யாரு ரிஷாவா பேசுவது?” என்ற ஒற்றைக் கேள்வியிலேயே அவரது குரலை அவள் உள்ளம் அறிந்துக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் பாராமலிருந்தும் அவரது குரலின் பரிச்சயம் மறவாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

வெள்ளந்தியான மல்லிகா என்கின்ற தாய்க்கும் விவகாரமான செல்லத்துரை எனும் அப்பாவுக்கும் பிறந்தவர்கள் அவர்கள் அரங்கநாதனோடு கூட இரண்டு இளைய சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. செல்லத்துரைக்கோ காதலிகள் ஏராளம். குழந்தைகள் பெற்றுப் போட்டதோடு கடமைகள் முடிந்ததென அவ்வப்போது சில வருடங்கள் மிகவும் பிடித்த ஏதாவதொரு காதலியோடு போய் குடும்பம் நடத்த அவர்  சென்று விடுவார்.

மல்லிகாவிற்கு கணவனே கண்கண்ட தெய்வம், கண்ணகி வாழ்ந்த தாய் தமிழக பெண்ணின் மறு உரு அவர். கணவன் இல்லாத நேரத்தில் இருப்பவற்றைக் கொண்டு பசியும் பட்டினியுமாய் காலம் கடத்துபவர். திரும்ப வந்ததும் அதைப் பெரிதுப் படுத்தாமல் கணவனே கண்கண்ட தெய்வமாக பூசிப்பவர்.

ஒரு முறை சண்முகம் தன் தமக்கையை சந்திக்க சென்றிருக்க, 18 வயது அரங்க நாதனும், 15 வயது சந்திரனும் பிழைப்பிற்கு வழி தெரியாமல் கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்றுக் கொண்டிருப்பதைக் கண்டு இரங்கி அவர்களை தன்னோடு கூட சென்னைக்கு அழைத்துச் சென்றார். பிள்ளைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதென மல்லிகாவிற்கு பேரானந்தம். இனி தன் 16 வயது மகளுக்கு நகைச் சேர்த்து திருமணம் செய்து விடலாமென்றும் 10 வயது மகன் சுந்தரை மற்ற இருவரின் சம்பளத்தில் படிக்க வைத்து விடலாமென்று அவரது கண்களில் நம்பிக்கை பரவியிருந்தது. 

சண்முகம் தன் மருமகன்களோடு சென்னை வந்ததும் அப்போதுதான் தான் தன் நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்திருந்த கார்மெண்டில் அவர்களுக்கு வேலையை பயிற்றுவித்தார்.

அவர்களின் சாப்பாட்டுப் பொறுப்பை செல்வி கவனித்துக் கொண்டார். கணவன் தேவையில்லாமல் 2 பேர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன் வேலைப் பளுவைக் கூட்டிவிட்டதாக அவர் சற்றும் சலித்துக் கொள்ளவில்லை. 

அவர்கள் மகள் ரிஷா அப்போது 3 வயதாக இருக்க அரங்கநாதனும், சந்திரனும் அவளுக்கு விளையாட்டுத் தோழர்களானார்கள். வேலையிலிருந்து வந்ததும் அவள் எப்போதும் இருப்பது இவர்கள் இருவரின் தோளிலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நெருங்கிய உறவுகளைப் பிரிந்து இங்கு தனிமையில் இருக்கின்றோம் என்பதே அவள் மனதிற்கு பெரும் பாரமாக இருக்க, அவ்வேளையில் அவளுடன் பேசிக் கொண்டிருந்த அரங்கநாதன் அத்தான்.

“ரிஷாம்மா அம்மாக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை, அதனால நீ சீக்கிரமா வீட்டுக்கு வரப்பாரு”

என்றவாறு சுருக்கமாய் பேசி துண்டிக்க, ‘அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என்னவாயிருக்கும்? அதனால் தான் கடந்த 2 வாரமா அவங்க போன் பண்ணலியா?’ திக்பிரமை பிடித்தவண்ணம் அங்கேயே நின்று விட்டவளை ப்யூன் அழைக்க கலைந்து ரிசீவரை அதன் இடத்தில் வைத்து புறப்பட்டாள்.

ப்ரின்ஸிபலின் அறைக்கு வர அங்கே அவளுக்கு முன்பாக முதுகு காட்டி அமர்ந்திருந்தது ஷாரதா. 

‘ஏன்? எதற்காக?’ மனதிற்குள்ளாக கேள்விகள் வரிசைக் கட்டி நிற்க,

“டோண்ட் வொர்ரி ரிஷா? யூ கேன் ரைட் யுவர் எக்ஸாம்ஸ் வென் யூ கம் பேக் ஃப்ரம் யுவர் ஹோம்டவுன்? ஓகே” (கவலைப் படாதே ரிஷா, உன் ஊர் சென்று திரும்பி வந்த பின்னால் உன் தேர்வை எழுதிக் கொள்ளலாம், சரியா?)

“ஓகே மிஸ்” தலையசைத்து வைத்தாள்.

தன் வகுப்பறைச் சென்று பையில் புத்தகங்கள் அடுக்கியவள் தனக்காக நின்றுக் கொண்டிருக்கும் ஷாரதாவுடன் இணைந்து கார் நின்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு நடக்கலானாள்.

உங்களுக்கும் அரங்கநாதன் அத்தான் போன் வந்ததா மேம்?

ரிஷா கேட்க ஷாரதாவின் நடை ஒரு நொடி நின்று தொடர்ந்தது. அவளை நிமிர்ந்துப் பார்த்ததோடு சரி அவர் அவளிடம் ஒன்றுமே பேசவில்லை 

“அம்மா, அப்பாக்கு போன் பண்ணுங்க, நான் பேசணும்”

 அவளது குரலின் பிடிவாதம் ஷாரதாவை அசைக்கவில்லை. காரை வீட்டிற்கு விரட்டினார். வீட்டில் சென்றவள் அம்மா அப்பாவின் குரலை சேர்ப்பிக்கும் அந்த லேண்ட்லைன் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க,

“இன்று மதியம் நாம் புறப்படுகிறோம், தயாராகு”

ஷாரதாவிடமிருந்து கட்டளை வர, ஜீன்ஸிம் டி ஷர்ட்டும் அணிந்துக் கொண்டாள்.அதன் மேல் குளிருக்கான உடையென்றாலும் வெகு நவீனமான ஸ்ரெக் வகைப் போன்றதை அணிந்துக் கொள்ள, அதை அம்மாவோடு இணைந்து வாங்கியது குறித்த நினைவு வர கண்கலங்கினாள்.

Pages: 1 2 3

error: Content is protected !!