அத்தியாயம் 7_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

Taurus PT 24/7

இது ஒரு செமி ஆட்டோமேடிக் பிஸ்டலாகும். சுருக்க செயல்திறன் கொண்ட சுழற்சியைப் பயன்படுத்தி ஒரு அரை-தானியங்கி பிஸ்டல் மற்றும் இரட்டை-நடவடிக்கை-மட்டுமே (DAO) மற்றும் இரட்டை நடவடிக்கை (Double Action) / ஒற்றை-நடவடிக்கை (Single Action)-வகை தூண்டுதல் செயல்களுடன் பல்வேறு மாடல்களில் கிடைக்கின்றது.. இந்த கைத்துப்பாக்கிகள் பிரேசிலில் தயாரிக்கப்படுகின்றன, அமெரிக்காவில் துணை நிறுவனமான டாரஸ் யுஎஸ்ஏ மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இவை பொதுமக்கள் உபயோகத்திற்காகவும், சட்ட அமலாக்க அலுவலர்களுக்காகவும் தயாரிக்கப் பட்டன.
பின் குறிப்பு:
Single Action: ஒற்றை நடவடிக்கை வகை பிஸ்டல்களில் ஒரு சுற்று சுட்ட பின்னர் அடுத்த சுற்று சுடுவதற்கான ஆயத்தம் பிஸ்டலில் இராது.
Double Action: இரட்டை நடவடிக்கை வகை பிஸ்டல்களில் ஒரு சுற்று சுட்ட பின்னர் தாமாகவே உந்து விசை தூண்டுதலால் அடுத்த குண்டு சுடுவதற்கு ஆயத்தமாக அமைக்கும் கட்டமைப்பு உண்டு.
**********
திடீரென எங்கிருந்து முளைத்தார்களாம் இந்த தடியர்கள்? இந்தர் அவர்களைக் கண்டு ஓடியதால் எழுந்த பய உணர்வோடு இரண்டு பைகளையும் இறுக்கப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் ரிஷா.
அவர்கள் ஒருவர் முகத்திலும் மருந்திற்கும் நன்மைத்தனம் காணப்படவில்லை. சுற்றி நிற்கின்ற யாரையாவது வழிவிட்டு நின்றாலன்றி அவளால் வெளியேற இயலாது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.
“காய் கர்தோஸ் ரே பாபா?” ( என்னடா செஞ்ச்சுட்டு இருக்கீங்க?) என்றவாறு ஒரு பெரிய மீசை வைத்த காவலர் வந்து நின்றார். சட்டென்று சிரிக்க ஆரம்பித்தனர் ஐவரும்.
“நாய் சாஹேப், கேண்டிட் கேமரா ம்ஹனூன் ப்ரோக்ராம் ஆஹேஸ். த்யாமுலே ஆம்ஹி வீடியோ காட்தோஸ். தீலா பக்” ( ஒன்னுமில்ல சார், கேண்டிட் காமெரான்னு ஒரு ப்ரோகிராம் அதுக்காக வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கோம். அங்கே பாருங்க அந்த பொண்ணு தான் நாங்க இவளை பயமுறுத்தறதை வீடியோ எடுத்திட்டு இருக்கிறா? என தூரத்தில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணை கைக் காட்டினர்.
“பர்மிஷன் கேத்லோஸ் கா?” ( பர்மிஷன் வாங்கினீங்களா? இல்லியா?)
தொடர்ந்து ஐவரும் போலீஸிடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க இந்தர் இவளுக்கு கைக்காட்டினான். அவளும் ஒன்றும் புரியாதவளாக அங்கிருந்து புறப்பட்டாள். அவளுக்கு ஹிந்தி தெரியும் ஆனால், மஹாராஷ்டிர மாநில மொழி மராத்தி தெரியாதே.
இந்தர் அவளை இக்கட்டிலிருந்து மீட்க வருவான் என்று அவள் எண்ணவே இல்லை. விட்டு விட்டு ஓடி விட்டான் என்று அல்லவா எண்ணி இருந்தாள். அவனைக் கண்டதும் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“கேண்டிட் கேமராவா?”
அப்படியானால் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களா என்ன? ஒரு நிமிடம் கதிகலங்க வைத்து விட்டார்களே? இங்கு இந்தக் கடற்கரையில் இத்தனை பேர் இருக்க நான் தான் கிடைத்தேனா என்ன?
“ஸ்ஸ்ஸ்”
என பாம்பாய் பெரு மூச்சை விட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். போலீஸிடன் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த ஐவரின் பார்வை வட்டத்திற்குள்ளாகத்தான் தாம் இருக்கிறோம் என்பதை உணராமல் இருந்தாள் ரிஷா.
இந்தர் அருகே சென்றதும் அவன் கேட்டான்,
“நான் தான் போலீஸை அனுப்பி வச்சேன், என்னவாம் அவனுங்களுக்கு? ,போலீஸ் பார்த்ததும் பம்மிட்டானுங்க?”
தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவன் ஆபத்து என்றதும் ஓடி ஒளிந்து விட்டு இப்போது விபரம் கேட்பதை அவள் வெற்றுப் பார்வை வைத்தாள். அவள் பார்வை புரிந்தாலும், முகம் மாறாமல் நோக்கினான் இந்தர்,
“இந்தப் பாரும்மா நான் ஒன்னும் சினிமா ஹீரோலாம் இல்ல, உன்னக் காப்பாத்துறதுக்கு என் உயிரைக் கொடுக்க முடியுமா என்ன? நீ என்ன என் மாமா பொண்ணா?, அத்தப் பொண்ணா?”
ரிஷா முறைத்தாள்.


Leave a Reply