‘எல்லாம் என் தப்புதான்’ அகிலன் தன் மனதிற்குள்ளாக சொல்லிக் கொண்டார்.
வீடே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க அகிலனின் கண்கள் பனித்திருந்தன. இனி அவர் நிம்மதியாய் தூங்க எத்தனை நாளாகுமோ?
என்னென்னவோ எண்ணங்கள் அகிலனின் மனதிற்குள்ளாக சுழன்றன. அவரது கைகளுக்குள்ளாக வெண்ணிலா அழுதபடியே தூங்கி இருக்க, அவரை நகர்த்தி தலையணையில் படுக்க வைத்தார்.
அன்றிரவு அகத்தியன் ஹாஸ்டல் புறப்பட்டுச் சென்றான்.
இவர்கள் யாரும் அதன் பின்னர் சோலையையோ அவர்கள் குடும்பத்தையோ சந்திக்கவும் இல்லை, அது குறித்து எதையும் பேசிக் கொள்ளவும் இல்லை.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்ற கதையாக சோலை தன் தாயிடம் அழுது புலம்பியதில்,
“நீ நல்லா பார்த்துக்குவன்னு தானடா நான் சென்னையில மாப்பிள பார்த்து கட்டி வச்சேன். நீ இப்படி என் பிள்ளையை அழுதழுது மயங்கி விழுறது போல் வச்சிட்டியே?” என அகிலனின் அக்கா மாறி மாறி போன் செய்து கத்த,
சோலை ஒரு வாரம் லோ பிபி ( குறைவான இரத்த அழுத்தம்) என மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு வீடு திரும்பி இருந்ததாக தெரிய வந்தது.
“என் மவளை போய் பாரு”
“உம் பொஞ்சாதியையாவது போய் பார்த்துட்டு வரச் சொல்லு.”
“சோலை நல்லா ஆகிற வரைக்கும் பிள்ளைங்களை உன் வீட்ல வச்சி சாப்பாடு கொடுத்து பார்த்துக்க.”
“என் மருமவனுக்கிட்ட செலவுக்கு பணம் இருக்கோ என்னமோ? கேட்டு பணம் கொடு தம்பி”
“அவ ஒன்னும் தாயத்த பிள்ள கிடையாது. நான் இருக்கேன். நான் வந்து நியாயத்த கேப்பேன்.”
“ஊர்ல தான இருக்கா, இவ என்ன செஞ்சிருவான்னு நினைப்பு வச்சுக்காத தம்பி. இன்னும் ஊர்ல உன் நிலம் இருக்குனு நினைவு வச்சிக்க. நான் நினைச்சா என்னவும் செய்வேன்”
என மாறி மாறி பேசிய அக்காவின் பேச்சுக்களை மரம் போல அசையாமல் கேட்டிருந்தார்.
தன் அக்கா அழைத்தால் போன் எடுக்கக் கூடாதென மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லி இருந்தார்.
ஒரு வாரம் இரு வாரங்களாக அகிலன் எதற்கும் அசைந்தே கொடுக்கவில்லை என அறிந்ததும் அகிலனின் அக்கா சென்னைக்குப் புறப்பட்டார்.
அவர் வரும் முன்னதாக அகத்தியன் தன் படிப்புக்கும், வேலைக்கும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு வந்துச் சேர்ந்தான்.
வழக்கமாக எப்போதும் தன் தம்பி வீட்டில் டேரா போடுவது சோலையின் அம்மாவின் வழக்கம்.
அன்றும் அப்படித்தான் வந்திருந்தார். ஆனால், இம்முறை அவரை இரயில் நிலையம் சென்று அழைத்து வந்தது அகிலன் அல்ல கண்ணன்.
அகிலன் வீட்டில் வீராவேசமாக அவர் அக்கா நுழைய, கண்ணன் வெட்கப்பட்டு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்.
இருவரையுமே யாரும் உள்ளே அழைத்திருக்கவில்லை.
“எம் பிள்ள படாதபாடு பட்டு ஆஸ்பத்திரியில இருந்துட்டு வந்திருக்கா. நீ இங்கின இருந்துட்டு அவளை ஒரு எட்டு போய் பார்க்கலை. நீயெல்லாம் ஒரு தாய்மாமனா?”
சாடினார் அவர்.
அகிலன் பதிலுக்கு எதையும் பேசினாரில்லை. தன் குடும்பத்தை விடவும் அதிகமாக சோலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது அவரையும் அவர் குடும்பத்தையும் எங்கே போய் விட்டிருக்கின்றது? என எண்ணிக் கொண்டார்.


Leave a Reply