அத்தியாயம் 9_உயிர் ஓவியம் நீ

பகுதி 9
அகத்தியன் தான் மேற்படிப்பிற்காக தகப்பனிடம் பேசிய போது, நுவலிக்காக நாம் இன்னும் நகை சேர்க்கவில்லையே என்று சுட்டிக் காட்டினது முதலாக அகிலனிடம் ஒரு சில நல்ல மாற்றங்கள் தென்பட்டன.
அதன் பின்னர் அவர் அதிக நேரங்கள் தனிமையில் கழித்தார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஏதேதோ எழுதுவதும் தீவிரமாய் சிந்திப்பதுமாக இருந்தார்.
வெண்ணிலாவோ வழக்கம் போல அவரை தொந்தரவு செய்யவில்லை.
சோலை வழக்கம் போல அவர்கள் வீட்டிற்கு வந்துச் சென்ற போதிலும் கூட அகிலன் சோலையிடமும் அதிகம் பேசாமல் இருந்தார்.
“வா சோலை, எப்படி இருக்க?”
என்றதோடு சரி. “சாப்பிடுறியா?” என்றெல்லாம் அவளை உபசரிக்கவில்லை.
சோலையும் அங்கே சற்று நேரம் இருந்து இருந்து பார்த்து விட்டு தன் வீட்டிற்கு எழுந்து போய் விடுவார். இவ்வாறாக சில வாரங்கள் கடந்திருந்தன.
அன்று அகிலன் மற்றும் வெண்ணிலாவின் 25வது திருமண நாள்.
அகத்தியன் விடுப்பெடுத்து வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் நுவலியும் வீட்டை எளிமையாக அலங்கரித்து இருந்தனர். ஆனிவர்சரி கேக் வாங்கி அகத்தியன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தான்.
அகிலன் தான் சொன்னது போலவே மதிய சாப்பாட்டிற்குள்ளாக வீட்டிற்கு திரும்ப வந்திருந்தார்.
குடும்பமாக கேக் வெட்டி, வாழ்த்துகள் பாடி முடிக்கவும் ஆளுக்கொரு கேக் துண்டங்கள் உண்டு முடித்தனர்.
கேக் உண்டதும் அகிலன் அதிசயமாக மனைவியின் கரம் பற்றிக் குலுக்கி வாழ்த்தியவர், மனைவியிடம் மனமார நன்றிச் சொல்லவும் ,வெண்ணிலாவின் கண்கள் பனித்து விட்டன.
வெண்ணிலாவும் கணவரிடம் இந்த அனுசரனையும் அன்பையும் தவிர வேறு என்னதான் எதிர்பார்த்திருந்தார்?
“ஹாப்பி ஆனிவர்சரிங்க” இப்போது கணவரின் கைப்பற்றிக் குலுக்குவது வெண்ணிலாவின் முறையாயிற்று.
மனைவியின் கரத்தை அழுத்தி விடுவித்தவர்.
“பொறு வெண்ணிலா” என நிதானமாக தன் காற்சட்டைப் பையை துழாவி ஏதோ எடுத்தார்.
கேமராவினுள்ளே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அகத்தியனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
“நம்ம அப்பாவா இது?!!”
அகிலனின் கையில் இருந்தது ஒரு சின்ன நகைப் பெட்டி. அதை திறந்ததும் உள்ளே அழகுற மிகச் சின்னதாக இருந்த அந்த மோதிரத்தை எடுத்து அவர் தன் மனைவிக்கு அணிவித்தார்.
நுவலிக்கும் அகத்தியனுக்கும் மனம் நிரம்பித் ததும்பிற்று.


Leave a Reply