வெளியே சத்தம் கேட்டு ஆட்கள் கூடத் தொடங்கினார்கள்.
அகிலன் தன் குடும்பத்தை தானே சந்தியில் இழுத்து விட்டு விட்டோம் என மிகவும் வெட்கினார்.
சோலை அன்றொரு நாள் ஆடிய ஆட்டம் ஒரு பக்கம். இன்று தன் தமக்கை ஆடும் ஆட்டம் ஒரு பக்கம்.
வெளியில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்னமோ இவர்கள்தான் குற்றம் செய்ததாக எண்ணும் படியாக ஆகிப் போயிற்று அல்லவா?
இத்தனை வருடமாக தான் தன் அக்கா மகளுக்கு செய்த எல்லா நன்மைகளும் என்னவாயிற்று? அதற்கெல்லாம் கணக்கில்லையா?
சமயம் பார்த்து அவள் பாம்பு போல தன்னையும் தன் குடும்பத்தையும் கொத்தி விட்டாளே?
இவ்வளவுக்கும் சோலைக்கு எந்த தீங்கும் ஆக வேண்டும் என்றெல்லாம் அகிலன் எண்ணி இருக்கவில்லை. அவள் நலமற்று மருத்துவமனையில் இருப்பதாக அறிந்த போதே வெண்ணிலா போய் பார்க்கலாமா? என கேட்கவும் தான் செய்தார்.
ஆனாலும், அவர்கள் சோலைக்கு செய்த நன்மைகளும் அதற்கு பதில் உபகாரமாக கிடைத்த தூற்றல்களும் சாபங்களும் போதாதா என்ன?
எத்தனை குதூகலமாக மன நிறைவாக இருந்த தனது திருமண நாளை எத்தனை வருத்தமாக, கவலையாக, அழுகை, கதறலாக சோலை மாற்றி விட்டிருந்தாள்?
அதை எல்லாம் அகிலன் மறப்பதற்கு இல்லை.
அவர் சோலையிடம் அன்று தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதும், அவள் மாமா என்னிடம் பணம் இப்போது இல்லை என அவரிடம் சொல்லி இருந்தாலும் அகிலன் ஒன்றும் உடனே தர வேண்டும் என பிடிவாதம் பிடித்திருக்கப் போவதில்லை. பின்னர் ஏன் அத்தனை ஆர்ப்பாட்டங்கள்?
அவரதும், மகனதும் உழைப்பின் பயனல்லவா அந்த சீட்டுப் பணம்? தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டது அத்தனை பெரிய குற்றமா?
இவை எல்லாவற்றையும் தன் மனதிற்குள்ளாக அசை போட்ட வண்ணம் அகிலன் தன் அக்காவின் முன் அமைதியாக நின்றார்.
தன் மனைவியையும், பிள்ளைகளையும் ஏற்கனவே உள்ளறையில் இருக்கும் படி கூறி இருந்ததால் அவர்கள் வெளியே வரவில்லை. ஆனாலும், தேவை எனின் வர வசதியாக அறைக் கதவில் காது வைத்து கேட்ட வண்ணம் நின்றுக் கொண்டிருந்தான் அகத்தியன்.
“இப்ப நீ என்ன செய்யறதா இருக்க தம்பி? வா அக்கா கூட வா. சோலைக்கிட்ட வந்து பேசு. அவ ஒன்னும் சொல்ல மாட்டா.”
“…”
“அதெல்லாம் உறவுகளுக்குள்ள பிரச்சனை வந்து போகிறதுதான். சோலைக்கு உன் கிட்ட மறுபடி வந்து போய் சமாதானமா இருக்கத்தான் ஆசையாம்.”
“…”
“நீரடிச்சு நீர் விலகுமா சொல்லு? அவ நாலு பேசினா நீ நாலு வார்த்தை பேசிடு. அதுக்காக உறவு இல்லாம போயிடுமா என்ன?”
“…”
“ முன்ன எத்தன தரம் அவளுக்கு சுகமில்லாதப்ப நீயும் உன் பொஞ்சாதியும் அவள மாசக்கணக்கில கவனிச்சு பார்த்துக்கல. இப்ப மட்டும் உன் மனசுல ஈரம் வத்திப் போச்சோ?”
விட்டால் ஒப்பாரி வைத்து விடுவார் என்பது போல மாமியார் அடங்காமல் பேசிக் கொண்டிருக்க, வெளியே கூட்டம் கூடி நிற்க,
கண்ணன் வீட்டினுள்ளே நுழைந்தார்.
“சித்தப்பா மன்னிச்சுக்குங்க. என் வீட்டுக்காரியால உங்களுக்கு ரொம்ப சிரமம்.
இப்ப அத்த உங்கள பார்த்துட்டு வரணும் என்று சொன்னதாலத்தான் அழைச்சுட்டு வந்தேன். அவங்க இன்னும் பிரச்சனையை பெரிசாக்குவாங்கனு எனக்கு தெரியாது.
அந்த ஐம்பதாயிரம் பணம் சோலை சீட்டுப் போட்டதில் கிடைச்ச பணம்னு சொல்லி தந்திருந்தா மத்தபடி மோனலுக்கு ஸ்கூல் அட்மிசனுக்கு நான் பணம் வச்சிருந்தேன்.
உங்க பணத்தில செலவழிச்சது போக மீதி இருபதினாயிரம் இதோ வாங்கிக்கோங்க. மீதியை அடுத்த மாசம் தந்திருவேன்”
அகிலன் பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், தமக்கையிடம் இன்னும் பேச விரும்பாதவராக நின்றிருந்தார்.
தன்னை ஓடோடி வந்து விசாரிக்கும் தம்பி மனைவியை காணாததில்,
“நான் போய் சோலைய பார்த்துட்டு வாரேன்” என சோலையின் தாய் புறப்பட்டார்.
வாசலில் கூட்டம் கலையத் தொடங்கியது.
தன்னை ஆயிரத்தோராவது முறையாக நொந்த வண்ணம் கதவை உள்பக்கமாய் தாளிட்டார் அகிலன்.
தொடரும்


Leave a Reply