அத்தியாயம் 15_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 15
திருமண உடை, அலங்காரம் என நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பு ஆலிஸை ஹாஸ்டலை விட்டு வரும் படி செய்தான் பிரனீத். அடுத்த வாரத்திலிருந்து அலுவலக விடுப்பு இருவருக்கும் ஆரம்பமாக இருந்தது.
“இதுக்காகவா ஹாஸ்டல் போனீங்க, நான் அதெல்லாம் உங்களை எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன் அண்ணி” கட்டிக் கொண்டாள்.
“ரொம்ப தொணதொணத்து கேட்கவும் சொல்ல வேண்டியதாப் போச்சு” அருகிருந்தவனை அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“இதுக்காகவெல்லாம் நீ ஹாஸ்டல் போயிருக்க தேவையில்லமா, நீயும் என் மகள் தான்” அமைதியான மாமனாரிடமிருந்து அவளுக்கான பதில் வந்தது.
“அத்தை…” தயக்கமாக அவரைப் பார்க்க அவர் முகத்தில் கலவையான உணர்வு, அவள் புரிதல் குறித்து அவருக்குச் சற்று பெருமிதமே.
மாமியாராக தனிமையில் மட்டுமே ஆலிஸிற்கான அறிவுரையைச் சொன்னார்.
“நீ யோசிச்ச விதம் உன் மனமுதிர்ச்சியைக் காட்டுது, இதுவரை எப்படியோ இனி அதுவும் திருமணத்துக்கு அப்புறம் இப்படி இருக்கக் கூடாது. உன் உரிமையை, வாழ்க்கையை எப்பவும் மத்தவங்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது. மற்றவங்க போலில்லாம உங்க இரண்டு பேருக்குமே தாமதமான திருமணம். எனக்கெல்லாம் உன் கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்புத்தான் நீயும் அவனும் சந்தோஷமா நிறைவா வாழணும். யாருக்காகவும் எதையும் சமரசம் பண்ணிக்கக் கூடாது. என்னப் புரியுதா?”
இத்தனை அக்கறையான கருத்தில் அவள் பதிலென்னச் சொல்ல தேவையிருந்தது? தலையசைத்து அவர் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டாள். வெகு மகிழ்ச்சியாக வலம் வந்தாள்.
ஏனோ, திருமணத்திற்கு முந்தைய சில நாட்கள் ஆழ்ந்த அமைதியிலிருந்தாள் அடிக்கடி எதையாவது கொரிப்பது, பதட்டம் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுவது என இருக்க சரஸ்வதியம்மாள் மகனை அழைத்தார்.
“அவ சரியில்லடா, மனசுக்குள்ள எதையும் போட்டு குழப்பிக்கிறா போல… என்னன்னு கேளு?”
“என்னம்மா? என்னாச்சுமா?”
“என் கிட்ட கேட்டா? எங்களுக்காகப் பார்த்து அவளை தனிமையில் விடாதே. மனசுக்குள்ள என்ன இருக்கோ? போய் பேசு, இல்லை வெளியில் அழைச்சுட்டுப் போ”
“அவ கூட தான்மா இருந்தேன், ஷாப்பிங்க்லாம் சேர்ந்து தான் போனோம்.”
“ஊர் சுத்துறதும் மனசு விட்டு பேசுறதும் வேற வேற.அவ உன் பொறுப்பு யார் என்ன நினைப்பாங்கன்னு மத்தவங்களுக்காக பார்த்து அவளை தவிர்க்காதே. நாங்க இருக்கிறோம்தான் ஆனால், உணர்வு ரீதியா அவள் உன் கிட்ட தான் எதையும் பகிர்ந்துக்க முடியும். புரிஞ்சு நடந்துக்கோ. திருமணம் முடிவு இல்லை ஆரம்பம். அவளை எப்பவும் தவிக்க விட்டுறாதே. எப்பவும் நீ அவளுக்கு பக்கத்திலயே இருக்கேங்கிற நம்பிக்கையை கொடுக்கணும்…போ”
இந்த தலைமுறைகளுக்கு அவ்வப்போது அறிவுரைகள் தேவைப்படுகின்றனதான்.


Leave a Reply