அத்தியாயம் 16_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 16
திருமணத்திற்கு அடுத்த சில நாட்கள் ஓய்வு, ஊர் சுற்றல் எனக் கழிய ஐந்தாவது நாள் எங்கோ புறப்பட்டார்கள். ஃப்ளைட்டில் வந்து கார்ப்பயணம் முடிந்து அவள் பார்த்துக் கொண்டு இருந்த போதே தமிழகத்திற்கு வந்துச் சேர்ந்திருந்தார்கள்.
‘எதற்காக இங்கே வந்திருக்கின்றோம்? எனச் சொல்வானா?’ என அடிக்கடி கணவன் முகம் பார்த்தாள். அந்தக் கள்வன் அவளிடம் அது தவிர்த்து எல்லாமும் பேசினான்.
மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பம் சூழ பயணிக்கையில் அவனிடம் அவளால் வெளிப்படையாக பேசவும் முடியவில்லை.எல்லோர் முன்னும் தயக்கம் உடைத்து பேசும் உண்மையான ஆலிஸ் இன்னும் வெளிவரவில்லையோ?
“இங்கே பக்கத்தில தான் எங்க ஊர் இருக்கு?” சொல்லலாமா என நினைத்தவளின் குரல் எழாமல் தொண்டையிலேயே அழுந்தியது.
ஹோட்டலில் அறை ஒன்று முன்பதிவு செய்திருந்தான்.
“கல்யாணத்துக்கு போகணும் புறப்படு” புதிய பட்டுப் புடவை ஒன்றைத் தந்தான். அவனது சூட்டும் புதிதாக இருந்தது.
தாருணி கண்களில் ஏதோ மின்னல், வாயாடியான அவளே வாயை மூடி இருக்கிறாளென்றால் ஏதோ பெரிய திட்டம் தான் போலிருக்கிறது.
“அம்மா, அப்பா” அழைத்து நிறுத்தினான் திருமணத்தன்றுப் போலவே தம்பதியர் பெற்றோரை பணிந்து எழுந்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவளது ஊரின் ஆலயத்தில் இருந்தார்கள்.
“முயற்சி செய்தேன் ஆலிஸ், மதம் மாறாமல் சர்ச் உள்ளே திருமணம் செஞ்சுக்க அனுமதி இல்லையாம். அதனால் குறைந்த பட்சம் உன் ஊர் சர்சில் மோதிரம் மாத்திக்க நினைச்சேன்”
எல்லாம் உனக்காக என அவன் பார்வை எடுத்துச் சொல்ல எங்கோ அடைத்து நின்ற அத்தனை உணர்வும் பிரவகித்துக் கொண்டு கண்ணில் கட்டியது. தன்னை அவன் ஒருபோதும் மதம் மாற சொல்லாமலிருக்க, அவனிடம் தான் எதிர்பார்ப்பது எப்படி? மாட்டாள். அது போக அவர்கள் உறவிற்கு மதம் எந்த விதத்திலும் இடையில் வரப் போவதில்லை.
அவளது பிறந்து வளர்ந்த ஊர், அவள் உணர்வு ரீதியாக ஒன்றிய அந்த ஆலயம் என அந்த இடத்தில் நின்றவள் முகம் முன்னிலும் மிளிர்ந்தது.
“பிரனீத்”கணவனைப் பார்த்தவளுக்கு கண்கள் ஏற்கெனவே மசமசத்திருக்க, குரலும் காணாமல் போய் காற்றுத்தான் வந்தது. அவனருகில் நின்று அவனைப் பற்றுக் கோலாய் பாவித்து, சாய்ந்தவள் பரிதவித்து அவன் முகம் பார்த்தாள். அவன் புன்னகையால் அவளை ஆற்றுப் படுத்தினான்.
“அத்தை, மாமா, தாருணிமா” அவர்களிடம் சென்று தன் மகிழ்ச்சியை உணர்த்த கன்னம் வருடிய சரஸ்வதி, கட்டிக் கொண்ட தாருணி என அணைப்பில் நின்றாள்.
“நல்லாயிருக்கியா ஆலிஸ்?” திரும்பிப் பார்க்க அவள் உறவினர்கள் கூடியிருந்தனர்.
“அக்கா, தம்பி, பெரியம்மா, சித்தி என அனைவரையும் காணக் காண மகிழ்ச்சி எல்லைத் தொட்டது. என்னதான் வாழ்வின் சுழலில் அகப்பட்ட துரும்பாக மனிதன் திசைகள் தாண்டி பயணித்தாலும் தன் வேர்கள் தரும் மகிழ்ச்சியை வேறு எங்கும் அடைய முடியாது தானே?
“நீ என்னை அடக்கியாளுகின்றாய், you are bossy” என அடிக்கடி அவளை புலம்ப வைத்தவன் தான் அவளை வேர் வரை மறுபடி பயணிக்கச் செய்து இருக்கிறான். குழந்தைப் போல மனம் ஆர்ப்பரித்திருக்க, மறுபடி திரும்பி கனவனை காதலாய் பார்த்தவளுக்கு கனிவாய் புன்னகைக் கொடுத்தான்.
“அத்தான்” அருகே வந்த ஆலிஸ் தம்பி ஜேம்ஸிற்க்கு கைக் கொடுத்த பிரனீத் தோழமையாய் அவன் தோளில் கைப் போட்டான்.அவர்களுக்குள்ளாக கடந்த மாதங்களில் நட்புணர்வு வளர்ந்திருந்தது.
ஆலிஸை அழைத்துச் சென்றவர்கள் அவளது தலைக்கு நெட், வெய்ல் அணிவித்து அழைத்து வர ஆலயம் முன்பாக மோதிரம் மாற்றிக் கொண்டனர். பாதிரியார் வந்து தம்பதியரை ஆசீர்வதித்து, வாழ்த்துச் சொல்லிச் சென்றார். அங்கிருந்து மதிய உணவிற்கு அனைவரும் ஹாலிற்கு செல்ல, இவர்கள் வண்டி சற்று தூரம் சென்று நின்றது.


Leave a Reply