“சைவ உணவுதான் சிறந்தது” ஒருவன் ஆரம்பித்தான்.
“எப்படியாம்?”
“அப்படித்தான் படித்திருந்தேன்”
“ஓ”
“சரி, உணவு வகைகளின் பழக்கம் எல்லாம் எப்படி வந்திருக்கும் என்று நினைக்கிறீங்க?” ராஜாதான்.
“அவங்கவங்க குடும்பத்துக்கு என்றே சில வழக்கங்கள் இருக்கும் அப்படி” லதா சொன்னாள்.
“ம்ம்… இருக்கலாம்… வேற என்ன காரணமா இருக்கலாம்…க்விக் க்விக் சொல்லுங்க சொல்லுங்க.”
“ம்ம்.. வேறென்ன? தெரியலையே.”
“ஜாதிகள் காரணமா… கூட” தயங்கி இழுத்தான் ஒருவன்
“ம்ம் அது போக வேறென்ன கமான் ஃபாஸ்ட் ஃபாஸ்ட்”
“ஹே ராஜா க்ளாஸ்லதான் லொட லொடான்னு பேசிட்டே இருக்கன்னா இங்கயுமா? சாப்பிட விடுறா” ஒருவன் சொல்லவும் மற்றவர்கள் சிரித்தனர்.
“நாம எல்லாரும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் அவங்க அவங்க மாநிலத்தில் என்னென்ன விளையுது என்று சொல்லுங்க. உங்களுக்கான பதில் கிடைச்சிரும்.”
“ஒன்னும் புரியலையே”
“ஸ்வப்னில் உங்க மாநிலம் எது?”
“மஹாராஷ்டிரா, ரத்னகிரி”
“உங்களோட திருநாள் உணவு என்னன்னு தெரியுமா? பூரன் போளி… கடலை பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த பண்டம். அது ஏன்னு தெரியுமா இந்தியாவிலேயே சர்க்கரை மற்றும் கடலை பருப்பு அதிகம் விளையும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதன்மை வகிக்கின்றது. முந்திரி, திராட்சை மற்றும் வெங்காயம் இவைகளும் அங்கு அதிகம் விளைவன.”
மற்றவர்கள் அவனை ஆவென பார்த்திருந்தனர்.
ஆஷி கை தூக்கினாள், “நான் கொல்கொத்தா எங்கள் மண்ணின் விளைச்சல் அரிசி, காய்கறிகள், மீன்கள் என்பதால் அரிசி உணவும் மீனும் எங்கள் ஃபேவரைட் சப்புக் கொட்டினாள். நீ எங்கள் மச்சேர் ஜோல், ஷுக்தோ எல்லாம் சாப்பிட்டதில்லையே?”
“வாவ்… எனக்கு உங்க ஊர் ரசகுல்லா, சம்சம் எல்லாம் பிடிக்கும்” ஷாம் சிலாகித்தான்.
மீன் முட்களை பிரித்துக் கொண்டு இருந்த கெவின் தன் இடதுக் கையை தூக்கினான். “நான் கோவன்ஸ்… கடற்கரை சார்ந்தவர்கள். எங்கள் உணவில் ஒரு நாளும் மீன் இல்லாமல் இருக்காது.”
ஸ்வப்னில் இடையிட்டான் “நாங்கள் மட்டுமென்ன? எங்கள் உணவிலும் மீன் இல்லாமல் இராது.”
அவனைத் தொடர்ந்து கடற்கரை சார் பகுதியினர் இன்னும் சிலரும் தங்கள் மீன் உணவை சிலாகித்துக் கொண்டனர்.
“குஜராத் இந்திய நாட்டின் பருத்தி உற்பத்தியில் முதன் மாநிலம்” ஜெயேஷ் புன்னகைத்தான்.
“நம்ம ஷீலு கேரளா அவங்க ஊரில் தேங்காய்தான் ஸ்பெஷல்… அவள் முடி மின்னுவதைப் பாரேன்” ஜொள்ளிய அசோக்கிடம்,
“நீ உன் ஊர் பெருமை சொல்லப்பா… பெண்களை புகழ்வதென்றால் இவனுக்கு…” எவனோ கிண்டலடிக்க சிரித்தான்.
“என் மாநிலம் மத்திய பிரதேசம்… இந்தியாவில் கோதுமை விளைவிப்பதில் நாங்கள் தான் முதல்… அது போக கடுகு உற்பத்தியும் கூட. எங்கள் ஊருக்குப் போனால் சாலையின் இருபக்கங்கங்களிலும் மஞ்சள் பூக்கள் பூக்களாக அழகாக அமைந்திருக்கும் கடுகு வயல்களை பார்க்க வேண்டுமே? காண கண்கள் கோடி வேண்டும்.
“ஷாரூக் நடித்த தில் வாலே துலனியா லே ஜாயேங்கே படத்தில் கூட வருமே?” ஒருவன் கேட்க,
“ஆமாம்” என்றவன் “நாங்கள் உணவிற்கு உபயோகிப்பது கடுகு எண்ணைதான்” என்றான்.
“ஓ கடுகு எண்ணை தேங்காய் எண்ணைக்கு ரூட் விடுகின்றதா?” கிண்டலடிக்க அனைவரோடும் கூட ஷீலுவும் அசோக்கும் சேர்ந்து சிரித்தனர்.
“அப்ப நாங்க என்னவாம்?” கோதுமை விளைச்சலில் பஞ்சாபும் குறைந்ததில்லை.
“கூகிள் செய் கூகிள் செய்” உண்டு முடித்திருந்த சிலர் தேடிப் பார்த்தனர்.
“கோதுமை உற்பத்தியில் மத்திய பிரதேசம் முதலிடம், பஞ்சாப் இரண்டாமிடம்…” வாசித்தாள் சாரதா.


Leave a Reply