அத்தியாயம் 1_ யாவரும் கேளிர்?!!!_ஜான்சி

யாவரும் கேளிர்
எழுத்தாளர் ஜான்சி
அதிகாரம் 1
அந்த பெரிய அலுவலக கேண்டீன் முழுக்க சளசளவென்று பேச்சு சப்தங்கள். வெவ்வேறு இன மக்கள் சேர்ந்து பணிபுரியும் அலுவலகம் அது.
தங்களது முதல் நாள் வேலையில் அலுவலக கேண்டீனில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க இரண்டாவது நாளாக இன்று அனைவரும் தத்தம் வீட்டிலிருந்து உணவை சமைத்துக் கொண்டு வந்திருந்தனர்.
“மொத்தமே 30 மினிட்ஸ் தான் ப்ரேக் சீக்கிரமா கொட்டிட்டு போகணும்” கெவின் படபடவென பரபரத்தான்.
“ஆமாம் டா” என அவன் அருகில் அமர்ந்திருந்த ராஜா தன்னுடைய டிஃபனையும் எடுத்து வைத்தான்.
சாரதா தன்னுடைய பையில் இருந்து நான்கைந்து டப்பர்வேர் டப்பாக்களை எடுத்து வைக்க கூட்டமே அவள் மேல் தன் பார்வையை திருப்பியது.
ஸ்வப்னில் தனது இரண்டு டப்பாக்களை எடுத்து வைத்தான்.
ஒவ்வொருவராக தத்தம் உணவு டப்பாக்களாக திறக்க ஆரம்பித்தனர்.
லலிதாவின் டப்பாவின் உள்ளே இருந்தன இட்லிகளும் இட்லிப் பொடி மற்றும் சாம்பார் இவற்றின் வாசனை பரவ ஆரம்பித்தன.
“வாவ் இட்லி இஸ் மை ஃபேவரைட்” பல குரல்கள் எழுந்தன. அவளது டிஃபனில் இருந்து மற்றவர்களின் டிபன் மூடி தட்டுகளுக்கு சில இட்லிகளும் கொஞ்சம் சாம்பாரும் பரிமாறப்பட்டன.
ஸ்வப்னிலின் டிபனின் உள்ளே இருந்தவைகள் அரிசி ரொட்டியும், காய்ந்த தேங்காய் போட்டு அரைத்திருந்த சட்னியும். “இன்னிக்கு செவ்வாய் கிழமை இல்லையா அதனால் நோ நான்வெஜ்”, என்றான் சோகமாக.
பல்பீரின் டப்பாவில் இருந்தன தளதளவென வெண்ணையுடனான ஆலு பராட்டாக்கள்.
சாரதாவின் டப்பாக்களில் இருந்த தோசைகளும் இரு வகை சட்னிகள் மற்றும் சாம்பார் கூடவே இருந்த சாலட் என அடுத்த பறிமாறும் படலம்.
சட்டென்று ஒரு நெடி பரவவும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது. மீன் குழம்பையும் சாதத்தையும் போட்டு வெகு இலயிப்புடன் உண்டுக் கொண்டு இருந்தான் கெவின்.
அவனருகில் இருந்த ரமேஷ் “இந்த வாடை எனக்குப் பிடிக்காது” என எழுந்து தள்ளி அமர்ந்தான்.
“ஹே கெவின் எனக்கு மீனு…” கேட்டு தன் டிபன் மூடியை நீட்டியவனுக்கு மீன் துண்டு ஒன்றை வைத்து கொடுத்து விட்டு தன் உண்ணும் பணியை தொடர்ந்தான்.ஆஷியும் வாங்கி உண்டாள்.
ராஜாவை அனைவரும் வினோத ஐந்துவாய் பார்த்தனர்.
“ஆஃபீஸ்கெல்லாம் நான் வெஜ் கொண்டு வருவதை தவிர்க்கலாம்” ஒருவன் சொல்ல,
“ஏன் அப்படி?”
“அந்த வாடை எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாதே. இல்லை என்றால் நான் வெஜ் சாப்பிடுகின்றவர்களுக்கென தனி உணவிடம் அமைக்கலாம்.”
“ஏன் அப்படி?”
“மற்றவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்குமல்லவா?”
யார் என்ன சொன்னால் என்ன என தன் போக்கில் உண்டுக் கொண்டு இருந்த கெவின் பேசாவிடினும் ராஜா பேசினான்.
“நாமெல்லோரும் நமது உணவை தானே உண்கின்றோம். நமது பாத்திரங்கள் வேறு அவனது பாத்திரங்கள் வேறு. அவனது உணவு, அவனது கை, அவனது வாய் அதற்கு இடையில் நமது கருத்துக்கள் எதற்காம்?”
“நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்” லலிதா புன்னகைத்தாள்.
“சொல்லப் போனால் நான் வெஜ் எனும் பதமே தவறு தெரியுமா?” மீன் முள்ளை அகற்றி உண்டுக் கொண்டு இருந்த கெவின் கேட்டான்.
“அப்படியா?” பல்பீர்
“ஆமாம், புலால் உணவு… தாவர உணவு என வேண்டுமானால் பிரித்து கூறுவது சரியாக இருக்கும். ஆனால், வெஜ் நான் வெஜ் இது என்ன வகைப் படுத்தலோ தெரியவில்லை? அது தவறான பதம்.”
“ம்ம்” என்ற கபீர் தனது டிபனில் இருந்த சாதம் மற்றும் பருப்பை கொண்டு வந்திருந்த மட்டன் ஊறுகாயுடன் உண்டுக் கொண்டு இருந்தான்.


Leave a Reply