அத்தியாயம் 4_உயிர் ஓவியம் நீ

பகுதி 4
சாயுங்கால நேரம் தாய் தந்த காஃபி மற்றும் சிப்ஸை நொறுக்கிக் கொண்டே தன் தமையனுக்காக காத்திருந்தாள் நுவலி.
அகத்தியனுக்கும் இவளுக்கும் 2 வயதுகள் தான் வித்தியாசம். இருவரும் எலியும் பூனையுமாகவும் நிற்பார்கள்.
“எங்க வந்து பாருங்க?” என ஒருவருக்காக மற்றவரை விட்டுக் கொடுக்காமலும் நிற்பார்கள்.
அகிலன் இல்லாத நேரங்களில் தாயும் பிள்ளைகளும் அரட்டை, விளையாட்டு என மிக கலகலப்பாக நேரம் கழியும். எல்லாம் அவர்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டிக் கொண்டுதான்.
அதுதான் அவர்கள் வீட்டில் உறவெனும் பெயரில் உயிரை எடுக்க ஒன்று நேரம் காலம் தெரியாமல் எப்போதும் வருமே.
நுவலியின் ப்ரொஜெக்டுக்காக லேப்டாப்பை தேடிய போதுதான் சோலைப் புயல் இவர்கள் வீட்டு லேப்டாப்பை கடந்த வாரத்தில் ஆட்டையை போட்டது தெரிய வந்தது.
“ சோலை மக சோனாலிக்கு ப்ரொஜெக்டாம், சோலை லேப்டாப் கொண்டு போயிருச்சுடா. அப்பா தூக்கி கொடுத்துட்டார். நான் என்னச் சொல்ல?” எனச் சொன்ன அம்மாவை நுவலி பாவம் போல பார்த்தாள்.
வேறென்னச் சொல்ல? சொந்த வீட்டில் சொந்த கருத்தைச் சொல்ல உரிமை இல்லாத பெண்மணி அல்லவா அவர்.
சோலை பிறந்து வளர்ந்தது கிராமத்தில் என்றுதான் பெயர், தன்னை யாருக்கு நிரூபிக்கவென எண்ணமோ தெரியாது. திசையறியாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெண் அவள்.
தன் மகள்களுக்கு சோனாலி, மோனல் என ஸ்டைலாக இருக்க வேண்டுமென பெயர் வைத்திருந்தார்.
தாய் எட்டடி என்றால் குட்டிகள் இரண்டும் பதினாறடி பாயும்கள். அவர்கள் இவர்கள் வீட்டில் வந்தால் போதும் களேபரம் தான்.
நுவலியின் பொம்மைகளின் கண்களை குருடாக்குவது. மினியேச்சர்களான சின்னச் சின்ன பொம்மைகளை ஒரு சின்ன பெட்டியில் நுவலி பத்திரப்படுத்தி இருக்க, ஒருமுறை வீட்டிற்கு வந்த சோனாலி நோகாமல் அதை மொத்தமாக தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றிருந்தாள்.
அதற்காக விழுந்து புரண்டு அழுத நுவலியை அகிலன் ஆறுதல் படுத்தாமல், அவளது பொருட்களை திரும்பித் தரும்படி கேட்காமல்,
“ அவதான் சின்ன பிள்ளை உனக்கென்ன? விட்டுக்கொடு” என நுவலியின் முதுகில் இரண்டு வைத்தது என அவ்வீட்டில் அகிலனின் தனிப்பட்ட நியாயங்கள் அனேகம்.
தான் சோனாலியை விடவும் ஐந்து வயது பெரியவள் என்றால் இவள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? இவ்வளவுக்கும் அவள் நுவலியின் தங்கையும் அல்ல. யாரோ ஒரு உறவினர் மட்டுமே.
எதற்காக தன் குடும்பத்தை மற்றவர்களிடம் அகிலன் விட்டுக் கொடுக்கிறார்? என பிள்ளைகளுக்கு புரியவே இல்லை.
தகப்பனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியவர்களுக்கு அகிலன் இப்போது தன் அப்பாவாக அல்லாமல் சோலையின் உறவினராக மட்டுமே தெரிகிறார்.
தன் தந்தைமையின் உறவை விட்டுக் கொடுத்தது புரியாமலேயே அகிலன் எல்லாம் நன்றாகவே நடக்கின்றது என்பதான ஏதோ ஒரு கனவுலகத்தில் வாழ்கின்றார். ஒரு நாள் கனவிலிருந்து விழிக்கும் காலமும் வரும் அல்லவா?
அகத்தியன் வரவும் நுவலி தனக்காக காத்திருப்பது புரிய அவளிடம் குனிந்து தன் காதை கொடுத்தான்.
“எனக்கு ப்ரொஜெக்ட் வேலை இருக்கு. அவங்க வீட்லருந்து நம்ம லேப்டாப் கொண்டு வரணும்” காற்றினிலும் மெல்லிய குரலில் நுவலி சொல்ல தலையசைத்துக் கொண்டான்.
அவன் தங்கை சொன்னதால் தன் உடையை மாற்றவில்லை, வெளியே செல்ல வேண்டுமல்லவா?
வெண்ணிலா மகனுக்கு அவசரமாய் சிற்றுண்டியும் காஃபியுமாய் கொண்டு வந்தார்.
“சாப்டு போடா, அங்க பச்சத்தண்ணி கூட கிடைக்காது” முனகினார்.
அது தெரியாதவனா அவன்! முகம் கை கால்கள் கழுவி வந்தவன் நிதானமாகவே உண்டான்.
அகிலன் இன்னும் வந்திருக்கவில்லை.


Leave a Reply