Epi 4_Uyir Oviyam Nee

“வா பாப்பா” என்றவன் முன்செல்ல நுவலி தொடர்ந்தாள்.

வெளியே வந்தவன் தங்கையின் கையை பிடித்துக் கொண்டான்.

“ நாம ஒன்னும் பேச வேண்டாம், எப்படியாவது எத்தன நேரமானாலும் நின்னு வாங்கிட்டு வந்திடலாம்.”

“ சரிண்ணா, சாரி உன்னை ஓய்வு எடுக்கக் கூட விடாம உடனே அழைச்சுட்டு வந்திட்டேன்”

“அதுக்கென்னமா பரவால்ல”

என்ற இருபத்தி மூன்று வயது அகத்தியன் அகிலனின் சின்ன வயது உருவமாய் இருந்தான். நன்கு சிகப்பான சருமமும், ஐந்தரை அடி உயரமும், தெளிவான தீர்க்கமுமான தாயின் கண்களையும் பெற்றிருந்தான்.

நுவலி தன் இருபத்தியோரு வயதிற்கும் சிறியவளாய் தோற்றமளித்தாள். தாயின் மாநிறம் தான் அழகான முக வடிவம் கொண்டவள். ஐந்து புள்ளி இரண்டு அடி உயரம் இருப்பாள். நேர்த்தியான குர்த்தி லெக்கின்ஸில், அவள் பார்வையில், நடக்கும் மற்றும் பேசும் விதத்தில்,  படித்த பெண்ணுக்குரிய நாசூக்கும் நாகரீகமும் தெளிவாய் தெரிந்தது.

இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த சோலையின் வீட்டினருகே அவர்கள் நெருங்கி இருந்தார்கள்.

அது ஒரு நெருக்கமான சந்து. சோலையின் வீடு சற்று சிறியதுதான். சோலை அதை பேணும் விதத்தில் இன்னும் சிறியதாகி கிடந்தது.

அகத்தியனும் நுவலியும் சோலையின் வீட்டின் வாசலில் நின்றார்கள். மாடி எடுத்து கட்டப்பட்டிருந்த வீடு அது. சில வருடங்கள் முன்பு கண்ணன் தாம் வாடகைக்கு இருந்த அந்த வீட்டை விலைக்கு வாங்கி அதில் மேல் மாடியும் கட்டி இருந்தார்.

வீட்டின் வாசலுக்குள் நுழைய விடாதபடி வீடெல்லாம் பொருட்கள் இரைந்து கிடந்தன.

வாசலருகே ஒரு வாளியில் எப்போதோ நனைத்த துணி துவைக்கப் படாமல் வீச்சமடித்துக் கொண்டிருந்தது.

எட்டிப் பார்த்தால் பாத்திர சிங்கில் கிடந்த காய்ந்த பாத்திரங்களை சுற்றி கொசுக்கள் பறந்துக் கொண்டிருந்தன.

வீட்டில் இருந்த கொஞ்ச இடத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சோனாலி கால்களை பரப்பியவண்ணம் படுத்துக் கிடந்தாள். எதையோ வரைந்துக் கொண்டிருந்தாள். அவளருகே இவர்களது லேப்டாப் தலைகீழாய் விரித்து வைக்கப் பட்டிருந்தது.

இவர்களுக்கு இரத்தம் கொதித்தது… ஆனாலும், என்ன? வாசலில் இருவரும் அமைதியாய் நின்றார்கள்.

மேல் மாடிக்கு செல்லும் படியில் மோனல் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து எடுத்து உண்டுக் கொண்டு இருந்தாள். அவ்வப்போது விரலில் ஒட்டியவைகளை சப்பிக் கொண்டாள்.

“சோலை உன் வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க” 

பக்கத்து வீட்டில் யாரோ குரல் கொடுக்க சோலை ஆடி அசைந்து வந்துச் சேர்ந்தாள். வாசலில் இருந்த துணி பக்கெட்டை இலேசாக நகர்த்தி வைத்து உள்ளே நுழைந்தவள்.

“என்ன அகத்தியா? எங்க இங்க?”

என ஏன் வந்தாய்? எனும் தொனியில் கேட்டாள்.

“ மைனி எங்க லேப்டாப் வாங்க வந்தோம்” என்றான் அகத்தியன்.

“ அதுவா… சோனாலி இன்னும் ப்ரொஜெக்ட் செஞ்சு முடிக்கலியே… நாளைக்கு நான் கொண்டு வந்து தரட்டுமா?” என இழுத்தார்.

“ இல்ல மைனி இப்ப வேலை இருக்கு” அகத்தியன் கூற,

“ அப்படியா?” என்ற சோலை

“ ஏ சோனாலி அந்த லேப்டாப்ப அண்ணனுக்கு கொடு”

எனச் சொல்லி மறுபடியும் பாய்ந்து வெளியேறிச் சென்று எங்கோ சென்று விட,

தமையனும் தங்கையும் அந்த வாசலை விட்டு சற்றும் அகலவில்லை. ஒருவர் ஒருவரோடு பேசவும் இல்லை.

கூடவே வீட்டிலிருந்த சோனாலியும் மோனலும் தத்தம் நிலையிலிருந்து அசைந்தே கொடுக்கவில்லை. அதே நிலையில் தன் போக்கில் இருக்க நேரம் கடந்தது.

அரை மணி நேரம் இருக்கும் குடும்பத் தலைவர் கண்ணன் வீட்டை வந்தடைந்தார்.

“ அடடே அகிலன், நுவலி நல்லா இருக்கியாம்மா?”

எனச் சொல்லவும்,

“ஒரு மணி நேரம் பிள்ளைங்க வாசல்லயே நிக்குதுங்க” பக்கத்து வீட்டு பெண்ணுக்கு சோலை மேல் என்ன காண்டோ? போட்டுக் கொடுக்க,

கண்ணன் முகம் கருத்தவராக,

“ வாங்க தம்பி, வாம்மா” என்றவராக வீட்டின் வாசலில் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

முன்பிற்கும் இப்போதைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், முன்பு அகத்தியனும் நுவலியும் வாசலில் நின்றார்கள். 

இப்போது வாசல் படியில் நின்றார்கள் அவ்வளவே. இதற்காகவே அகத்தியன் தங்கையை இங்கே தனியே விடுவதில்லை.

வீட்டினுள் அமரும் படி ஒன்றும் இடமில்லை. அத்தனையும் குப்பையும் கூளமுமாக இருந்தன.

கண்ணனுக்கு தன் அதே வீடு அதே சூழல்தான். ஆனால், உறவினர் முன்னே வெகுவாய் கூச்சமாக இருந்தது.

இதுவே அகிலனின் வீடு எப்படி இருக்கும் என அவருக்கு நன்றாகத் தெரியுமே.

நன்றாக சுத்தமாக, நறுவிசாக பேணி நறுமணம் கமழும் விதமாக இருக்கும். அங்கே சென்றாலே மனதிற்குள் ஒரு இதம் இருக்கும். இங்கோ, ஏன்டா வீட்டிற்குள் வருகிறோம்? என்று இருக்கும்.

அவரும் எவ்வளவு செய்வார்? வீட்டுத் தலைவி தன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் விட்டேற்றியாக இருந்தால் எப்படி?

“என்ன தம்பி?” ஏதோ ஒரு காரியமாக வந்திருக்கிறார்கள் என்றறிந்து கேட்க,

“லேப்டாப் வாங்கிட்டு போக வந்தோம்”

என்றான் அகத்தியன்.

“ உங்க லேப்டாப்பா?”

“ஆமா”

“எப்ப வாங்கிட்டு வந்தாங்க?”

“போன வாரம்ணா”

“ஓ சரி, எங்க இருக்குன்னு தேடணும்” என அவர் சுற்றும் முற்றும் தேட,

“ அங்க இருக்குண்ணா” என அவன் சுற்றிக் காட்டவும் அவர் சோனாலியை தாண்டி பெப்பரெப்பே எனக் கிடந்த லேப்டாப்பை பார்க்கவும் வெட்கினார்.

எருமை மாட்டில் பெய்த மழை போல சற்றே அசைந்துக் கொடுத்து எழுந்து அமர்ந்தாள் சோனாலி.

“ சோனாலி, அந்த லேப்டாப்பை எடு”

அவள் முனகிக் கொண்டே எடுத்து நீட்ட,

யாரோச் சொல்லி கணவன் வீடு திரும்பியதை அறிந்த சோலைப் புயல் படு வேகமாக தன் வீட்டை அடைந்தது.

“ என்னங்க வந்துட்டீங்களா?”

“என்னடி சோனாலி, எப்பவே லேப்டாப் கொடுக்கச் சொன்னேன். இன்னும் கொடுக்கலியா நீயி” தொப்பென அவள் முதுகில் இரண்டை ஆங்காரமாக இறக்கினாள் சோலை.

அழுதுக் கொண்டே எழுந்து மாடிக்கு ஓடினாள் பெண்.

மகளிடமிருந்து ஆங்காரமாய் பிடுங்கிய லேப்டாப்பை நுவலியின் கைக்கு நீட்ட அகத்தியன் அதை வாங்கிக் கொண்டான்.

“புள்ள படிக்கட்டும்னு லேப்டாப் வாங்கிக் கொடுத்தா என்ன அழகுல படிக்கிறா உங்க மவ” கிடைத்த இடைவெளியில் தன் குற்றத்தை சுமத்தி கணவனை சாடினாள் சோலை.

ஓவென இன்னும் சோனாலி கதறிக் கொண்டிருக்க,

“ இங்காரு, அழுதுட்டு இருந்த கத்தியை சூடாக்கி தொடையில சூடு போட்டிருவேன். உனக்காக மானத்த விட்டு லேப்டாப் வாங்கி கொடுத்தா நீ உக்காந்து வரைஞ்சுட்டு இருக்க?” அலறினாள்.

இன்னும் வாசற்படியிலேயே நிற்கும் மாமா பிள்ளைகளை முகத்தில் கடுகை போட்டால் வெடித்து விடும் நிலையில் நின்றவள் என்னவென்று நோக்க,

அகத்தியன் அவளிடம், “ மைனி லேப்டாப் சார்ஜர், மவுஸ் தாங்க”

“ அதுவுமா?” என சலித்தவள்

தேடித் தேடி குப்பைக்குள் கிடந்த மவுஸை தேடிக் கொடுத்தாள். தான் கொண்டு வந்த பையில் அகத்தியன் அதனை போட்டான்.

சார்ஜரை தான் காணவே இல்லை. நச நசவென ஈரமான இடத்தில் கிடந்த சார்ஜரை எடுத்து வந்து சோலை நீட்டவும். இப்படித்தான் நடக்கும் எனத் தெரியும் என்பது போல கொண்டு வந்திருந்த நியூஸ் பேப்பரில் அதை சுற்றிக் கொண்ட அகத்தியன். வருகிறேன் …போகிறேன் என எதையும் சொல்லாமல் தங்கைக்கு கண்களை காட்ட அவள் முன்னேச் செல்ல இவன் பின்னே வந்தான்.

கொஞ்ச தூரம் கடந்து வரவும் நுவலி அவனிடம், “அண்ணா, அந்த சார்ஜர் ஈரமா இருக்கே” கவலை தெரிவித்தாள்.

“பார்க்கலாம்டா பாப்பா, இது வொர்க் ஆகலின்னா அண்ணா வேற வாங்கி தரேன்” 

“ சரிண்ணா”

தமையனின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்ததால் நன்கு இருள் சூழ்ந்திருந்தது.

“ வீட்டில் எதையும் சொல்ல வேணாண்டா பாப்பா”

“சரிண்ணா”

“அண்ணா எல்லாத்தையும் பார்த்துக்குவேன்” சொன்னவன் கண்களில் தீர்க்கம்.

“சரிண்ணா”

வீட்டிற்கு வரவும் முன்னறையில் அகிலன் அமர்ந்திருந்தார்.

“என்னடா சோலை வீட்டுக்கா போயிருந்தீங்க”

“ஆமாம்பா” அகத்தியன்.

“போனா உடனே விடவே மாட்டாளே, காபி ஜீஸ்னு ஒரே உபசரணைதான்.”

என்றவருக்கு பதில் சொல்லாமல் இரண்டு மணி நேரமாய் தண்ணீர் குடிக்காமல் வரண்டிருந்த தொண்டைக்கு டைனிங் டேபிளில் இருந்த ஜக்கிலிருந்த தண்ணீரை கிளாஸில் ஊற்றி எடுத்து மாறி மாறி குடித்துக் கொண்டிருந்தான் அவன்.

நுவலி சமையலறைக்குச் சென்று தாய்க்கு சுருக்கமாய் விபரம் சொல்லி தாறுமாறாய் இருந்த தன் லேப்டாப்பை சுத்தப்படுத்தி, சார்ஜரை ஈரம் போகத் துடைத்து பயந்துக் கொண்டே லேப்டாப்புடன் இணைக்க அது செயல்படவும் “ஹப்பாடா” என பெருமூச்சு விட்டாள்.

இரண்டு மணி நேரங்கள் நின்று நின்று இடுப்பு வலித்திருக்க லேப்டாப்பை ஆன் செய்து, தன் லாகின் போட்டு படுக்கையில் அப்படியே சாயவும் அது தன் போல ஒலி எழுப்பி பக்கங்கள் தென்பட ஆரம்பித்தன.

ப்ரொஜெக்டுக்காக வாட்சப் கணக்கு லேப்டாப்பிலும் அவள் வைத்து இருக்கவும், புதியதாக எந்த செய்தியும் இல்லை என்றவாறு அதை பார்த்திருந்தாள் அவள்.

திடீரென ஒரு செய்தி மிளிர என்னவென பார்க்க,

மனோஜ் அந்த செய்தியில்,

“ஹாய்மா, ஹவ் ஆர் யூ? இன்றைக்கு உன் புது குர்த்தியில் எத்தனை அழகாய் இருந்தாய் தெரியுமா அன்பே?”

என செய்தி வர,

ஐந்து வருடங்களாக மாறி மாறி துவைத்து கல்லூரிக்கும் மூன்று வருடங்களாக உடுத்து பழசாகி சிவப்பு பிங்காய் மாறின தன் குர்த்தியை பார்த்து சிரித்தவளாக லேப்டாப்பை மூடினாள் நுவலி.

தொடரும்

Pages: 1 2


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!