Epi 7_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

அத்தியாயம் 7_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 7

இரவு பல்வேறு மன சஞ்சலங்களில் தாமதமாக தூங்கி, அவசரமாக எழுந்து, கையில் கிடைத்ததை உடுத்து தயாராகி அலுவலகம் வந்துச் சேர்ந்தாள். ஐந்து நிமிடம் முன்பு வந்து விட்டதால் ஆசுவாசமாக உணர்ந்தாள். தனது குழுவிற்கு வேலையின் சமீபத்திய மாற்றங்களை புரிய வைத்தாள். அவளது வழி நடத்துதலின் படி அவர்கள் வேலை செய்ய ஆரம்பித்தனர். 

பசி பொறுக்க முடியாமல் சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லி கஃபேடேரியா சென்று மொக்கினாள். நிஜமாகவே மொக்கினாள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிக மன அழுத்தத்தில் அவள் அதிகமாக சாப்பிடுவதுண்டு. தனது சுற்றளவு பெருகுவதை அவள் அறியாமல் இல்லை. ஆனால், என்ன செய்வதென புரியவில்லை. வயது முப்பதை நெருங்குவதால் இப்படி உடலளவில் மாறிக் கொண்டு இருக்கிறோம் என எண்ணிக் கொள்வாள். ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி சற்று கண்கள் உதடுகளை அலங்கரிக்கவும் பார்க்கும் படியாக இருந்தாள். முன் தினத்தின் கவலைகளின் மிச்சம் தெரிகின்றதா? எனக் கூர்ந்து பார்த்தாள். தெரியவில்லை என்றதும் திருப்திக் கொண்டாள். 

“ஆலிஸ் யூ ஆர் லுக்கிங்க் ப்ரெட்டி’ (அழகாயிருக்கிறாய் ஆலிஸ்) என சக பணியாளர் பாராட்டவும் புன்னகை விகசித்தது. மலர்ந்த முகத்தினளாக வெளியே வந்தாள். அவளை வழியில் கண்ட முந்தைய டீம் மெம்பர்கள் அவளிடம் அளவளாவ ஆரம்பித்தனர். அரட்டை, சிரிப்பு என களைக்கட்டியது. தனது இருக்கைக்கு திரும்பவும் அங்கே மணிவண்ணன் டீம் மெம்பர் சாதிக்கிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.

“ஆலிஸ் லெட்ஸ் மீட்” அழைத்த மணிவண்ணன் அவளை கேபினுக்குள் அழைத்துச் செல்ல எதிர்பார்த்தது போலவே சில திட்டுக்கள் கிடைத்திருந்தன. 

‘உன்னை இவற்றை உடனே செயல்படுத்த வேண்டாமென கூறியிருந்தேனே? நினைவில்லையா?”

“நேற்று நாம் பேசும் போது இதைத்தானே தீர்மானித்தோம் மணிவண்ணன்?”

“அதன் பின்னர் நான் சொன்னது உன் மூளைக்குள் ஏறவில்லையா என்ன? நமது திட்டத்தை பிரனீத்திடம் ஒருமுறை காட்டி அனுமதி வாங்கிய பின்னர் செய்ய சொல்லி இருந்தேன் இல்லையா?”

“நான் டாகுமெண்டில் குறிப்பிட்டிருந்தது போலத்தான் செய்தேன்…”

“இது அதிக பிரசங்கித்தனம் ஆலிஸ்” அவன் குரல் உயரும் முன்னே அந்த கேபினின் கதவு தட்டப்பட்டது. இருவரும் வாசலைப் பார்க்க கதவை திறந்தவனாக வெளியிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்தான் பிரனீத். ஆலிஸிற்கு அவமானத்தில் தொண்டை உலர்ந்துப் போனது.

‘இந்த நேரத்திலா இவன் இங்கு வரவேண்டும்?’ அவன் முன்னால் அவமானப்பட தெம்பில்லாதவளாக நின்றாள், கண்களில் ஒரு நாளும் இல்லாமல் ஈரப்பதம் உணர, கண்ணீர் விட்டுவிடுவோமோ? எனும் கலக்கத்தில் நின்றாள்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!