‘இது நம்ம பிரனீத் இல்ல? , அட ஆமாம் பிரனீத்தே தான். நேற்று ஒரு டீம் இவர்களது பகுதிக்கு மாறப் போவதாகச் சொன்னபோது கவனமில்லாமல் கேட்டுக் கொண்டு இருந்தாளே?
திடீரென மனதிற்குள்ளாக அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. பழைய சாதமாவது கிடைத்தால் சரி என ஆசைப்பட்டவனுக்கு பிரியாணி கிடைத்தால் எப்படி இருக்கும்? அது போல ஒரு மகிழ்ச்சி. தான் தனக்குப் பிடித்தவனோடு இணையராய் ஆக வாய்ப்பில்லை என்று அவளுக்குத் தெரியும். தனக்கு அவன் மீது இருப்பது க்ரஷ்ஷா? (ஈர்ப்பா?) காதலா? என முடிவிற்கு அவள் இன்னும் வரவில்லைதான் அதுவும் தெரியும். ஆனால், அவன் டீம் இவளது இடத்திற்கே மாறி இருக்க, தினம் தினம் அவனை இனி பார்க்க கிடைக்கும், கண்ணெதிரே சில மணி நேரங்கள் உலா வருவான் என்பதே கோடி ரூபாய் லாட்டரி அடித்தது போல உணர்ந்தாள்.
என் பூஸ்டு
என் காம்ப்ளானு நீதானே
உன்னை பார்க்க
தவமான தவம் நானும் நின்னேனே
தவமும் நிறைவேறியதே
தினம் பார்க்க வழி கிட்டியதே
கிறுக்கி ட்ராவில் வைத்தவள் ‘லலலாலா லலலாலா லலலாலா லலலாலா’ சின்னதாய் பாடலை மனதிற்குள் இசைத்தவளாக உற்சாகமாக உலா வந்தாள். முன்னை விட குரல் கணீர் கணீர் என்று வர “கொஞ்சம் மெதுவாக பேசலாமே?” எனும் கோரிக்கைகள் வர ஆரம்பித்தன.
நான் கொஞ்சம் ஜாலியா இருந்தா இவனுங்களுக்கு பொறுக்காதே? பொறாமை பிடிச்சவனுங்க எண்ணிக் கொண்டவள் வேலை முடிந்ததும் ராகவன் கொடுத்த டின்னரில் கலந்துக் கொண்டாள்.
அன்றும் இரவு தாமதமாகவே வந்தவள் ரிஷாவில் இறங்கி படபடவென நடக்க ஆரம்பித்தாள். வழக்கம் போல அப்பகுதி கும்மிருட்டாக இருந்தது. குமரேஷின் பேச்சு வரம்பை மீறிப் போய்க் கொண்டிருந்தது.
“இங்கப் பாரு … உனக்கொரு திட்டம் வச்சிருக்கேன். நல்லா இருட்டுனதும் உன் வீட்டுக்கு வந்து மூணு முறை உன் கதவை தட்டுறேன், சத்தமே காட்டாம கதைவை தொறந்தீனா நான் உனக்கு சொர்க்கத்தையே காட்டுறேன். நாம குஜாலா இருக்கலாம், உன்னைப் பத்தி வெளியில ஒரு தப்பான பேச்சும் வராம நான் பார்த்துக்கிறேன், ஏய் என்ன சொல்லுற? சீக்கிரம் பதில் சொல்லு, உன்னை ஒரு நாள் இல்ல ஒரு நாள் ………..விட மாட்டேன்டி, பெரிய பத்தினின்னு நடிக்கிறியோ?, தினம் தினம் யார் கூட எல்லாம் ………..வரேன்னு எங்களுக்கு தெரியாதா?………” குடித்திருந்தான் போலும் பேச்சுக்கள் எல்லைகள் கடந்திருந்தன.
வீட்டு உரிமையாளரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது, கீழ்த்தளத்தில் இருந்த ஏனையோர் வீடுகளும் அப்படியே… குமரேஷ் தன் வீட்டை பூட்டிக் கொண்டு இவனை தொல்லை செய்ய வந்திருக்க மற்ற மூன்று வீடுகளும் நேரமே பூட்டப் பட்டு இருந்தது. யாரிடம் அவள் பாதுகாப்பு கேட்க முடியும்? பயந்தவாறே விறுவிறு என கேட்டை திறந்த போதும் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. இவனிடமிருந்து தப்பித்து எப்படி தன் அறைக்குச் செல்வது? அடிக்கப் போனால் குடிப் போதையில் தன் மேல் பாய்ந்து விட்டால் இவனை என்னால் எப்படி சமாளிக்க முடியும்? இரவு வந்து தன் வீட்டைத் தட்டினால் என்னச் செய்வது? பல்வேறு சிந்தனைகள் அவளை பயமுறுத்த கேட்டை திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு பெரிதான இரு சப்தங்கள் கேட்டன.
ஓடியவள் மேல் மாடிக்கு ஏறிய பின்பே குமரேஷ் தன்னைப் பின் தொடராததை கண்டு எட்டிப் பார்த்தாள். எடக்கு மடக்காக விழுந்து கிடந்தவன் நெற்றியில் ஏதோ காயம் முகமெங்கும் இரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. இரத்தத்தை வழித்து எறிந்தவன் எழும்ப முயற்சித்துக் கொண்டு இருந்தான். இவளோ அஞ்சியவளாக தனது அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
தொடரும்


Leave a Reply