அத்தியாயம் 7_உயிர் ஓவியம் நீ

பகுதி 7
நுவலி மனோஜை குறித்து வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தாள்.
அவன் இதுவரையில் அவளிடம் நடந்துக் கொண்ட விதங்களை ஆராய்ந்தாள்.
அவனுக்கும் அவளுக்குமான் தனிமை நேரத்தில் மட்டுமே அவன் அவளோடு தனிப்பட்ட பார்வைகளை பகிர்ந்திருக்கின்றான்.
அவளது தனிப்பட்ட வாட்சப் செய்திகளில் தான் இதமாக பேசுவதாகச் சொல்லி வழிந்திருக்கிறான்.
அவள் செய்த ஒரே நல்ல காரியம் கடந்த வருடங்கள் முதல் கடைசி வாரம் வரையில் அவன் அனுப்பின எந்த செய்திக்கும் அவள் எந்த விதமான பதிலுமே கொடுத்ததில்லை.
இப்போது இவளாகப் போய் “ஏன் என்னிடம் ரெசார்ட் வரக் கேட்டாய்?” என்றால், நான் நட்பாகத்தான் கேட்டேன். நீ ஏன் தவறாக கணித்தாய்? என நிச்சயமாக அவளிடம் கேட்பான்.
அவளுக்கான செய்தியில் அவன் பகிரும் டியர் எனும் வார்த்தை காதலாக இருக்கத் தேவையில்லையே? அவ்வார்த்தை நட்பிலும் சேரும் என்றெல்லாம் அவன் பேச்சை மாற்றியும் பேசக் கூடும்.
அவன் அவளோடு பழகிய விதங்கள் அவைகளை எங்குமே அவளால் குற்றப்படுத்த முடியாத சூழல். ஏனென்றால், மூன்று வருடமாக அவன் இப்படித்தான் செய்திகள் அனுப்பி வருகின்றான்.
ஆரம்பத்தில் அவனை அப்படி செய்தி அனுப்பாதே எனச் சொல்லி நிறுத்தி இருந்தால் அல்லது அவன் எண்ணை ப்ளாக் செய்திருந்தால் விசயம் வேறு.
ஆனால், இத்தனை வருடங்கள் அவனை பேச விட்டு வேடிக்கை பார்த்து விட்டு, திடீரென இப்போது நீ தவறாக செய்தி அனுப்பினாய் என்பதாக இவள் முரண்பட்டால் நிச்சயமாக அவளை அவன் கேவலப்படுத்தாமல் விட மாட்டான்.
அவள் தனது தரப்பு குற்றங்களை உணர்ந்து ஏற்றுக் கொண்டாள்.
ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய களையை மரமாக்கி விட்டது அவள் குற்றமே. அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தும் அளவும் மறைமுகமாகவேனும் அவனுக்கு தைரியம் கொடுத்தவள் அவளே.
இப்போதும் என்ன? அவன் முன்பு செய்தவைகளையே தொடருகின்றான். இவைகள் புதிதாக ஒன்றும் இல்லையே.
ஆனால், இனியும் அவள் முன்செய்தது போல தொடரலாகாது.
மனோஜின் நட்பு வியன்தான் இவளை பிறந்தநாள் விழாவிற்கு வரும்படியாக அழைக்கும் படி சொன்னது என்பதை நினைவில் வைத்திருந்தாள் நுவலி.
அப்படியெனில், ஆண்கள் குழு அதாவது குறைந்த பட்சம் மனோஜ் சார்ந்த ஆண்கள் குழுவிற்கு அவன் அவள் மீது ஆர்வமாக இருப்பதுவும், அவன் அழைப்பின் பேரில் இவள் அவன் வீட்டில் சென்றதுவும் தெரியும். உண்மையோ பொய்யோ இன்னும் எவை எவைகளை தெரியப் படுத்தினானென அவள் அறியாள்.
அவன் வீட்டில் அவன் முன்பாகவே அவனது அண்ணியை இவளும் அண்ணி என அழைத்தாள் தானே?
அதைக் கூட புரிந்துக் கொள்ளாதவனோ அவன்?
இல்லை, புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றவன் அவன்.
நேரடியாக எதையும் பேசாமல், இவளிடம் பகிராமல் இவளை தன் வீட்டில் அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல்… இது என் வீடு… இது என் பெற்றோர்… நாங்கள் மிகுந்த வளமையானவர்கள்.
என் பெற்றோருக்கு அடங்கி இருக்கும் மருமகளாக உன்னை எதிர்பார்க்கிறேன் என்பதாக இதுவரைக்கும் மறைமுகமாகவே எத்தனை எத்தனை அவன் அவளுக்கு உணர்த்தி விட்டான்.
தன்னைக் குறித்து இன்னும் என்னவெல்லாம் யாரிடமெல்லாம் சொல்லி இருக்கின்றானோ? தெரியவில்லையே? மனம் முழுக்க காந்தல் தகித்தது… அவளது உள்ளம் எரிந்தது.
இனி நான் அமைதியாக இருந்து என் வாழ்வை, என் மதிப்பை, என் சுய மரியாதையை இந்த மனோஜ் கையாள விட மாட்டேன்.
இனியும் நான் பேசாமலிருக்க மாட்டேன். சாம, தான, பேத தண்ட என எந்த வழிமுறைக்கும் இவன் சரி வர மாட்டான். வஞ்சகனுக்கு வஞ்சகமே பதில்.
இவனை திருத்துவது என் வேலையும் அல்ல?
இவனை என் வழியை விட்டு விலக்குவது மட்டுமே என் வேலை.
அதற்காக எதை செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாய் செய்வேன். மனதில் உறுதி பூண்டாள் நுவலி.
மனோஜ் வழக்கம் போல கல்லூரியில் வலம் வந்தான். அவனது செய்திக்கு பதில் வராதென அவனுக்கும் தான் தெரியும்.
ஆரம்பம் முதலே ஏதோ ஒரு வகையில் அவளை நிர்பந்தித்து எப்படியாகிலும் தன் விருப்பத்திற்கு அடிபணிய வைத்து விடுவது எனும் முடிவில் தான் மனோஜ் இருந்தான்.
மௌனம் சம்மதம் என சும்மாவா சொன்னார்கள்?
அவள் மௌனம் தானே அவனை இத்தனை தூரம் இழுத்து வந்தது.
நுவலி தாம் அவளுக்கு மறைமுக செய்திகள் அனுப்பின முதல் வருடத்திலேயே அவனை தவிர்த்து இருந்தால் அவன் வேறு பெண்ணை தேடி இருப்பானல்லவா?
இவன் பார்க்கும் பார்வைகளுக்கும் கண்டனம் தெரிவிக்காமல், இவன் செய்திகளுக்கும் விரோதமாக செல்லாமல் நுவலி அமைதியாக இருந்தாள் அல்லவா? இதற்கு மேல் அவனுக்கு என்ன பெரிய சம்மதம் வேண்டி கிடக்கின்றது? என்றுத்தான் மனோஜ் அவளை தன் வீட்டில் அழைத்துச் சென்று காட்டியது.
அவனுக்கு லவ் மேரேஜ் என்று வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்வதில் எல்லாம் பெரியதாக விருப்பம் இல்லை. எதற்காக வீட்டின் வளமையை இழந்து துன்பப்பட வேண்டும்?
அதே நேரம் அம்மா அப்பா காட்டும் அம்மாஞ்சிப் பெண்களை திருமணம் செய்யவும் விருப்பம் இல்லை. அவனது பெற்றோர்களின் விருப்பம் எல்லாம் கிராமத்து பெருந்தனக்காரர்கள் வீட்டுப் பெண்கள் அல்லவா? அது அவனுக்கு சரிப்பட்டு வராது.
அவனுக்குத் தேவை நகரத்து நாசூக்கான பெண். வெளியே ஜோடியாக போக வர அவனோடு கூட அழகாக உடுத்திக் கொண்டு பொம்மை போல வரும் படியான பெண். அதனால் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜீற்காகத்தான் அவன் நுவலியிடம் இத்தனையாக உழைத்தது.
எப்படியும் ஆரம்பத்திலேயே நுவலியை தனது தாய் தந்தைக்கு அடங்கி நடக்கும் படி வழி நடத்தினால் போயிற்று. இத்தனை சொத்துக்களையும் அனுபவிக்க அவள் கொஞ்சம் தாழ்ந்து போனால்தான் என்ன? என்ன குறைந்து போய் விடுவாளாம்?
மனோஜீமே நுவலியிடம் அதிகமாக வழிந்து அவள் முன்பாக தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. எனவே, அளவாகவே அவளிடம் வழிந்தான். பிறர் முன்பாக கெத்தாக வலம் வந்தான்.
அன்பின் காதலின் பெயரில் ஏமாற்றி ஒரு அடிமையை விலைக்கு வாங்க எண்ணினான். டியர் எனும் ஒரு அழைப்பிற்கு ஒரு பெண் அடிமை கிடைக்க மாட்டாளா என்ன? மற்றபடி அவன் ஆண்மை ததும்பும் தோற்றமென்ன? பணக்கார களையென்ன? தாய் தகப்பன் வைத்திருக்கும் திரளான சொத்துக்கள் என்ன? என்ன?
ஒரு பெண்ணுக்கு வேறு என்னதான் வேண்டும்? இறுமாந்திருந்தான் மனோஜ்.
ஓரிரு வாரங்கள் கழித்தே காபேடேரியாவில் மனோஜ் நுவலியின் எதிரில் அமர்ந்தான். தனது நட்புக் குழு பார்க்கும் படியாக ஒரு ஆளுமையான பார்வையை அவன் நுவலியிடம் செலுத்த,
“ஹாய் ப்ரெண்ட்ஸ், ஹவ் ஆர் யூ?” என பொதுவாக கேட்டாள் அவள்.
மனோஜின் பார்வைக்கு பதில் பார்வை நுவலியிடமிருந்து வெகு கூர்மையாக வந்தது அவனோ தடுமாறினான்.
மற்றெல்லோர் கைகளிலும் டீயோ, குளிர்பானமோ இருக்க மனோஜ் கையில் ஏதுமில்லை.
“மனோஜ் ரம்யா அங்க கவுண்டர்ல தான் நிக்கிறா. உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா?”
“ஆமா ஒரு காஃபி” தடுமாறினான்.
“ரம்மு”
“என்னடி?”
“மனோஜ் ப்ரோக்கு ஒரு காஃபி”
“டன்”
மனோஜ் ப்ரோவின் பார்வை விரிந்தது அவனது நட்புகளுடையதும் கூட.
தொடரும்


Leave a Reply