அத்தியாயம் 8_உயிர் ஓவியம் நீ

பகுதி 8
விக்ரமாதித்யன் வேதாளமும் மனோஜீம் ஒன்று என்று மனோஜ் தன் விடா முயற்சியை நுவலியிடம் தொடர்ந்துக் காட்டினான்.
எத்தனை மாதங்களாக எத்தனை எத்தனை விதமாக நுவலியிடம் அவன் பழகி இருப்பான்?
எத்தனை நுணுக்கமாக அணுகி அவளை தன் கைப்பிடியில் வைத்திருந்தான். அவள் அவனை ப்ரோ என்று அழைத்தால் அவன் அவளது அண்ணன் ஆகிவிடுவானா என்ன?
இப்போது உள்ளம் எரிவது மனோஜின் முறை போலும்!
அன்றைய தினம் நுவலி காபேடேரியாவை விட்டு நீங்கிச் சென்ற பின்னர் புயலடித்ததுக் கொண்டிருப்பது போல அமர்ந்திருந்தான் மனோஜ்.
“என்ன ப்ரோ சட்டுன்னு நுவலி உன்னை ப்ரோ சொல்லிட்டா!” கருண் அயர்ந்து போய் கேட்க,
“அட! அதுக்கு நீ ஏன்டா அவனை ப்ரோ ப்ரோனு சொல்லி காண்டாக்குற?” கேட்டு பக்கெனச் சிரித்தான் பிரசாந்த்.
மூளையே ஸ்தம்பித்துக் கிடந்த மனோஜ் சட்டென எழும்பி புறப்பட்டு தன் வீட்டிற்கு திரும்பி விட்டான்.
“இது எப்படி? நாம் எங்கே கோட்டை விட்டோம்? எப்படி எப்படி?”
ஒன்றும் புரியவில்லை.
பூவொன்று புயலானது என்பதைப் போல நுவலியின் இந்த அதிரடி முகம் மனோஜிற்கு புதியதான ஒன்று.
இதற்காக அவனிடம் எந்த ஆயத்தமும் இல்லை. அமைதியானவள், பணிந்தவள், அத்தனை வசதியற்றவள் எப்படியும் தனக்கு பணிந்தே இருப்பாள் எனும் அவன் கணக்கீடு எங்கே பிசகியது? இனி அவளை எப்படியாக அணுக வேண்டும்? ஒன்றுமே புரியாமல் மிகவும் திணறினான்.
அடுத்த நாள் அவளிடம் தனியே பேசச் சென்றான். மிகவும் மலர்ந்த முகத்துடன், “ ஹாய் மனோஜ்” என அவள் தன்னம்பிக்கையோடு பேசவும் அதற்கு மேல் அவனால் அங்கே எதையும் பேச முடியவில்லை.
அவள் அமைதியாக இருந்தபோது, குழப்பமாக நெற்றிச் சுருங்க இருந்த போதெல்லாம் அடித்துப் பேசும் மனோஜ் இப்போது மிகவும் தடுமாறினான்.
கிட்டத்தட்ட தினமும் தன் குழுவினரோடு நுவலி தனது தோழிகளோடு இருக்கும் போது வந்து அரட்டை அடித்தான்.
பெண்களின் எதிர்கால திட்டங்களை கேட்டான். தன் தகப்பனின் கோடிகளில் புரளும் பிசினஸை விலாவரியாக விவரித்தான்.
வீட்டில் எல்லாரும் அவன் எப்போது படிப்பை முடித்து விட்டு குடும்பத் தொழிலில் ஈடுபடுவானென காத்திருப்பதாக ஜம்பமாய் பேசினான்.
தனக்கு சென்னையில் குறிப்பிட்ட அபார்ட்மெண்டில் இருக்கும் கோடிகள் பெறும் இரு பெரிய ஃப்ளாட்களை குறிப்பிட்டான். அவற்றில் இருக்கும் வசதிகளை குறிப்பிட்டான்.
அந்த வீடுகளில் இருக்கும் எந்தெந்த பொருட்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து இம்போர்ட் செய்தவைகள் எனக் குறிப்பிட்டான். வீட்டில் உள்முகத் தோற்றங்களை போட்டோக்களை காண்பித்தான்.
அந்த கோடிகள் பெறும் வீடுகளில் ஒன்று அவன் அண்ணனுக்கும் மற்றொன்று அவனுக்கும் எனச் சொன்னான்.
சொந்த ஊரில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தையும் அதில் விளைகின்றவற்றையும் குறிப்பிட்டான்.
அவன் பேச்சுக்களில் எல்லாம் தன்னை விற்கும் விதமான விளம்பரம் விளம்பரம் விளம்பரம் மட்டுமே.
எதிலும் தன்னுடைய சொந்த திறமையையும், சொந்த சாதனைகளும் இல்லை. என் தகப்பனுடைய சொத்து அது பின்னர் என்னுடையது என்பதான ஜம்பம் மட்டுமே.
ஒவ்வொரு முறையும் நுவலி மனோஜையும் இப்போது அவனது நண்பர்களையும் ப்ரோ அல்லது அண்ணா அண்ணா என அழைப்பதும் புன்னகை சிந்துவதுமாக வலம் வந்தாள். நுவலியின் தோழிகளுக்கு இவர்களுக்குள்ளாக ஏதோ பிரச்சனை?! என புரிந்தது என்ற போதும்சொன்னாலும் என்னவென புரியவில்லை.


Leave a Reply