அத்தியாயம் 6_உயிர் ஓவியம் நீ

பகுதி 6
திங்கள் கிழமை கல்லூரி வந்தது முதலாக மனதில் கொதித்துக் கொண்டிருந்தது நுவலிக்கு.
சனிக்கிழமை மனோஜ் வீட்டின் நிகழ்வுகள் அவளுக்கு அவ்வளவாக பாதிக்கவில்லை. ஏனெனில், நேசமாக பேசுகின்றவனின் அன்பு மொழிகளில் அவள் மனம் சிறிதளவு சாய்ந்திருந்தது எனினும் அவள் அவனை முழுமையாக நம்பி இருந்திருக்கவில்லை.
அவன் நிலையற்றவனாக இரு வேடங்கள் அல்லது பல வேடங்களில் நடித்துக் கொண்டு அவளது முன்னும் பின்னுமாக வலம் வந்த போதிலும் அவனது குழப்பம் ஏற்படுத்தும் முரணான நடவடிக்கைகள் காரணமாகவே அவள் மனம் அவன் பால் சாயாமல் இருந்ததே.
அன்றிரவு அவளுக்கு அத்தனை ஆசுவாசம். வீட்டிற்கு சென்றதும் அவனது செய்திகளை ஒரு முறை மறுபடி வாசித்துப் பார்த்து வாய்விட்டு சிரித்தும் கொண்டிருந்தாள்.
“என்ன பாப்பா?”
என அவளிடம் கேட்ட அண்ணனிடம் நேரடியாக இன்னார் எனச் சொல்லாமல் தனக்கு ஒருவன் இப்படியாக செய்தி அனுப்புவதாகச் சொல்லி சிரித்தாள்.
அதுவும் பழைய குர்த்தியை புதுத்துணி எனச் சொல்லி அவன் புகழ்ந்ததாகச் சொல்லவும் அவனுமே அவளோடு சேர்ந்து சிரித்துக் கொண்டான்.
ஒளிவு மறைவு இல்லாத சகோதரம் அவர்களது என்பதால் சிரிக்கவும், மறு நொடி மறந்து கடக்கவும் செய்தனர்.
மறு நாள் ஞாயிற்றுக் கிழமையில் சில சோலைப் புயல் அட்ராசிடிகள் இருந்தன என்றாலும் சமாளித்து விட்டனர்.
மறுபடியும் சோனாலிக்காக லேப்டாப் கேட்ட சோலையிடம் அகத்தியன் “ இல்லை மைனி இன்னும் அவ ப்ரொஜெக்ட் இன்னும் முடியலை” எனச் சொல்லி அகத்தியன் தவிர்த்திருந்தான்.
அவ்வீட்டில் அகிலன் கூட அகத்தியன் பேச்சை மறுக்க முடியாத வண்ணம் அவன் பட்டுக் கத்தரித்தாற் போல எப்போதும் பேசுவான்.
தலைக்கு மேல் வளர்ந்த தனையன், அதுவும் பொறுப்பாக படித்து முடித்து விட்டு வேலை பார்க்கின்றவன். தனக்குப் பிறகு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியவன் என்கின்ற காரணங்களாலோ என்னவோ அவனுக்குரிய மரியாதையை அகிலன் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்வார்.
சோலை லேப்டாப்பிற்காக முயற்சித்து, தோல்வியுற்று திரும்பச் சென்ற பின்னர் நால்வருமாய் அந்த உணவு மேஜையில் அமர்ந்திருந்து உண்டு இரவுணவு முடிந்திருந்தது.


Leave a Reply