Epi 9_Uyir Oviyam Nee

இருவரும் தாயையும் தகப்பனையும் தூர இருந்தே இரசித்தவர்களாக நின்றார்கள்.

அந்த இனிமையான தருணங்களை எவரும் கலைக்க விரும்பாதவர்களாக அப்படியே அமைதியில் கடந்தனர்.

வெண்ணிலா சமையலறைக்குள் சென்று ஓரிரு நிமிடங்கள் அசையாமல் நின்றார். தன் தவம் போன்ற வாழ்விற்கு பலன் கிடைத்த தருணம் அது அல்லவா?

அதுமிகவும் விலையுயர்ந்த, வைரம், இரத்தினங்கள் பதித்த மோதிரமெல்லாம் இல்லைதான். ஆனால், அதில் இருந்த அங்கீகாரம், அன்பு அதை என்னவென்றுச் சொல்ல?

தன் மோதிர விரலை உயர்த்தி, கணவர் அணிவித்த அந்த மோதிரத்தில் அவர் மெலிதாய் முத்தமிட்டார்.

நேரம் கடக்க, மதிய உணவிற்கு சோலையின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை, ராய்த்தா, அவித்த முட்டைகள், கேக் மற்றும் குலாப் ஜாமூன்கள் சாப்பாட்டு மேஜையை அலங்கரிக்க,

சோலையின் கண்களோ உணவை பறிமாறின வெண்ணிலாவின் கைவிரலில் டாலடித்த மோதிரத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.

‘மாமாவிடம் ஏதோ பணம் வந்திருக்கும் போலவே?’ மனம் திட்டமிட ஆரம்பித்தது. 

‘மாமாவிடம் என்னச் சொல்லி, எப்படி பணத்தை கறக்கலாம்?’

மாதா மாதம் மாமா சம்பள வாரத்தில் ஊரில் யார் யாருக்கோவெனச் சொல்லி அவள் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருந்தாள். அவரும் அதனை பெரிதாக கண்டுக் கொண்டதில்லை.

மாமாவுக்கு சீட்டுப்பணம் கையில் கிடைக்கப் போகின்றதென தெரிந்ததும் மகள் அட்மிசன் எனப் பெயர் சொல்லி, அந்த சீட்டுப் பணத்தில் ஒரு காசையும் விடாமல் சிந்தாமல் சிதறாமல் மொத்தம் ஐம்பதாயிரத்தையும் சுருட்டிக் கொண்ட சாமர்த்தியசாலி அவள்.

இப்போதும் கூட அவள் எண்ணினால் என்னதான் செய்ய முடியாது?

தனது புத்தியில் ஏராளமான திட்டங்களை வகுத்துக் கொண்டாள்.

விருந்து முடியவும் சோனாலியும், மோனலும் தம் வீட்டிற்கு திரும்பச் சென்றிருந்தனர்.

என்னச் செய்வது? எல்லா நல்ல பொருட்களையும் படுக்கையறையில் பத்திரப்படுத்தி அகத்தியன் பூட்டி இருந்தானே? பின்னே இங்கிருந்து எதைத்தான் கொண்டுச் செல்ல முடியும்?

வெண்ணிலா வேலை முடித்து களைப்பில் ஓய்வெடுக்கச் சென்று விட, அகத்தியனும் நுவலியும் சற்று தூரமிருந்து தத்தம் அலைபேசியில் கவனம் பதித்திருக்க,

வெகு நேரமாக தயங்கிக் கொண்டிருந்த அகிலன், தன்னோடு சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த சோலை மற்றும் கண்ணனிடம் தணிவாகவே கேட்டார்.

“ சோலை, அந்த சீட்டுப்பணம் ஐம்பதாயிரம் மோனல் அட்மிசனுக்காக வாங்கினியே, கண்ணன் 2-3 மாசத்தில திருப்பி தந்திடுவார்னு சொன்னியே? எப்ப தருவம்மா? எனக்கொரு அவசர வேலைக்காகத்தான் நான் அந்த சீட்டு போட்டிருந்தேன். நீ சீக்கிரம் தந்தின்னா அந்தப் பணம் என் வேலையை முடிக்க உபயோகப்படும்.”

அவர் சொல்லி முடித்ததுதான் சோலைக்கு எங்கிருந்து தான் அந்த ஆக்ரோசம் வந்ததோ தெரியாது. 

அத்தனை கூச்சலும் குழப்பத்தையும் உண்டாக்கினாள்.

யார் என்னச் சொல்லியும் அடங்கக் காணோம்.

“என்னை வீட்டுக்கு வரவச்சு மூக்க அறுத்திட்டீங்கல்ல”

“என் புருசன் முன்னாடி என்னை அவமானப் படுத்திட்டீங்கல்ல…நீங்க நல்லாருப்பீங்களா? நாசமாதான் போவீங்க.”

அந்த சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெண்ணிலா வந்து எட்டிப் பார்க்க,

“எல்லாம் இவளாலதான், எல்லாம் இவளாலதான். இவளாலதான் நல்லா இருந்த மாமா புத்தி மாறிடுச்சு”

வெளியே போய் மண்ணை அள்ளி அள்ளி அகிலனின் வீட்டில் எறிந்து தூற்றினாள்.

“ நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க, நாசமா போயிருவீங்க. மண்ணா போயிருவீங்க…உங்க வீட்ல ஒன்னும் வெளங்காது. உங்க வம்சமே விளங்காம போயிரும்… நாசமா போயிருவீங்க.”

கணவன் இழுக்க இழுக்க அடங்காமல் திமிறி ஆடிக் கொண்டிருந்த சோலையை வெறித்துப் பார்த்தபடி நின்றார் அகிலன்.

தொடரும்

Pages: 1 2


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!