கேட்டவனுக்கு தலையை எங்கே கொண்டு சென்று முட்டிக்கொள்ளவென தெரியவில்லை. நான்காம் வகுப்பு மாணாக்கர்களாம் இவர்களுக்கு என்ன புரியுமாம்?
பள்ளியின் வகுப்பறையில் இவளுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்த சலீம் ஏதோ ஒரு இடைவேளையில் அவனது பென்சில் பாக்ஸில் ஒரு ரப்பரையும், ஷார்ப்பனரையும் அருகருகில் வைத்து மெதுவாக நகர்த்திக் கொண்டு,
“இங்க பாருங்க இதுதான் என் கல்யாண கார், இது நான் என ரப்பரை காட்டியவன் ஷார்ப்பனரை காட்டி இது குழலி என… எங்க இரண்டு பேருக்கும் கல்யாணமாகிருச்சு. நாங்க இப்ப பாராத் (ஊர்கோலம்) போறோம்” என சொல்லவும் இவனிடம் வந்து குறை படித்தாள்.
‘இதற்கு மட்டும் பிரபாகர் எதற்கு வேண்டுமாம்? அவளே சலீமை அடிக்க வேண்டியதுதானே?’ அவன் மனதில் தோன்றியதை அவள் கண்டுக் கொண்டாள் போலும்.
“ஏ சலீம்… பொறு பிரபா வந்து உன்னை ஒரு கை பார்ப்பான்னு மிரட்டிட்டு வந்திருக்கேன், தயவு செய்து என் மானத்தை காப்பாத்து பிரபா” முட்டை விழிகளை சுழட்டி இவனிடம் அவள் பேசிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வர பார்த்தது.
“போயேன்டா பிரபா, என்னன்னு கேட்டுட்டு வா” அவன் அம்மாவும் சின்னவளுக்கு ஆதரவாக பேச பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.
“ஆள் மயக்கி, மூஞ்ச எப்படி வச்சுக்கிறா பாரு” மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும்
“அம்மா எனக்கு ஒன்பதாம் வகுப்பு பரீட்சை சீக்கிரமே இருக்கும். நான் இப்ப படிக்கவா? இல்லை இவளுக்காக சண்டை போடவா?”
“சண்டை போட யார் சொன்னா? சும்மா என்னன்னு கேட்டுட்டு வாயேன்” அம்மா சொன்னது போலெல்லாம் நிகழவில்லை.
“வாடா வாடா சண்டைக்கு வாடா… என் தலை வந்துட்டார்டா” என வடிவேல் சார் திரைப்படத்தில் வருவது போல, குழலி அவனை வைத்து படம் காட்டியதில் அந்த சலீம் வெகுண்டெழுந்து வர அவனுக்கு துணைக்கு ஓரிரண்டு பேர் வர அந்த சின்ன பசங்களுடன் தேவையில்லாமல் சண்டையில் ஈடுபட்டு கை கால் சிராய்ப்புகளோடு தான் திரும்ப வந்தான்.
உண்மை தெரியாமல் குழலியின் பெற்றோர்கள் அவன் நலம் விசாரித்து சென்றது தனிக்கதை.
இப்படி பள்ளி, கல்லூரி என அவனை தொல்லையாக பின் தொடர்ந்து வந்தவள் அவன் எடுத்த துறைக்கு சம்பந்தமில்லாத வேறு துறைக்கு செல்லவும் விட்டது தொல்லை என நிம்மதியாக இருந்தான்.
அதெப்படி விடுவேன்? என்பது போல இப்போது அவன் முன்பாக வந்து அழுதுக் கொண்டு இருக்கிறாள் குழலி எனும் கிறுக்கி.அவள் அவ்வப்போது அவன் பெற்றோரை பார்க்க வந்து செல்வாள் தான் ஆனால் இப்போது அவனை தேடி வந்திருந்தாள்.
‘தன் வால்த்தனத்தை அலுவலகத்திலும் காட்டி இருப்பாள் வேறென்ன?’ என எண்ணியவாறு அவன் அவளையே பார்த்திருந்தான்.

