அப்போதுதான் அவளும் இன்னொருவனுடன் அங்கு வந்தாள்.
முதன் முறை வேறு ஆண்மகனுடன் அவளை பார்க்கையில் இவனுக்கு ஏதோ ஒரு நெருடல் தோன்ற, அந்த புதிய பொறாமை உணர்வில் அவனது மனம் அவனுக்கே புரிந்தது என்னமொ உண்மைதான். தன்னை வெளிக்காட்டாமல் அமைதியாக அவன் அவளை கவனித்துக் கொண்டு இருந்தான்.
வந்தவள் பிரபாவின் பக்கம் நின்றுக் கொண்டாள்.
“ரோமித் இது பிரபா…” என அறிமுகப்படுத்த அவன் புரியாமலும் கூட கை நீட்டினான் வேறு வழியில்லாமல் பிரபாகரும் கை குலுக்கிக் கொண்டான்.
“ரோமித் நீ வேலைக்கு வந்த புதுசில உங்க வீட்டு உறுப்பினர்கள் குறித்து சொன்ன போது உங்க வீடே உன் சம்பாத்தியத்தில் தான் நடப்பதாக சொன்ன இல்லை?”
“…”
“நீ செய்தது என் கிட்ட செய்தது ரொம்ப கேவலமான விசயம், அதை ஹெச் ஆர் கிட்ட சொன்னா உன் வேலையே போயிரும்.ஆனால், உன்னை நம்பி இருக்கிற உன் குடும்பம்… அந்த ஒரே ஒரு விசயத்துக்காகத்தான் இப்ப நான் உன்னை சும்மா விடறேன்.” என பேச்சை தொடர்ந்தவளை,
‘பிரபாகரை தன்னை அடிக்கத்தான் அழைத்து வந்திருக்கிறாளோ?’ என எண்ணி அவன் கலவரமாக பார்க்க,
“இப்ப நீ என்ன செய்யற? நீ செய்ததை எல்லாம் ஒரு மெயிலில் எழுதி இனிமேல் இப்படிப்பட்ட எந்த தவறும் நான் செய்ய மாட்டேன் என குறிப்பிட்டு என் மெயில் ஐடிக்கு அனுப்புற…”
என அவனிடம் சொன்னவள் அதுவரை அவளது கையில் ரெக்கார்ட் ஆகிக் கொண்டு இருந்த அலைபேசி கேமராவை அவள் பிரபாவின் கையில் பிடிக்க கொடுத்தாள்.
ரோமித் அவசரமாக கை நடுங்க அவள் சொன்னபடி எழுதி அவளது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினான்.
அவளின் அந்த நிதானமான அணுகுமுறை… முதிர்ச்சியான பேச்சு அந்த புது பரிமாணம் பிரபாகரின் கவனத்தை இன்னுமாய் ஈர்த்தது.
“ஓகே ரோமித் இதுவரையிலும் நான் எண்ணியதில் பாதி வேலைதான் ஆகி இருக்கு…” என்றவள் திரும்பி பிரபாவை பார்த்து,
“ஒழுங்கா கேமராவை பிடி பிரபா… மூஞ்சே தெரியலை” என அவன் கையில் இருந்த கருவியை சரி செய்ய,
‘இவளுக்கு கேமரா பிடிக்கத்தான் நீ அவசர அவசரமா உன் அலுவலக வேலையை முடிச்சுட்டு வந்தியாடா?’ என பிரபாகரை அவன் மனசாட்சி படுகேவலமாக திட்டியது.
ரோமித் முன் தினம் ஏதோ சபலத்தில்அவ்வாறு செய்து விட்ட போதும், அப்போதிருந்தே அவன் பயந்து நடுங்குவது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவள் அவனிடம் சொன்னதை கேட்டதும் “பாதி வேலையா? இன்னும் என்ன செய்ய போகின்றாளோ?” பயந்திருந்தான்.
“ரோமித், நீ செய்தது தப்பு என்று உனக்கு தெரிய வேணாமா? இப்போதைக்கு ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்… ஆனால், என்னிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்ட உன்னை எப்படி சும்மா விடறது? அது எனக்கு பழக்கமில்லையே?”
என சொன்னவள் திடீரென ஜாக்கி சானாக மாறி அவனுக்கு முகத்தில் சில தடங்களை பதித்திருந்தாள்.
அவன் அடித்த அடியில் அவன் உதடு கிழிந்து இரத்தம் கொட்ட, ரோமித் அவளை எதிர்க்கவியலாமல் பார்த்திருந்தான்.
“இனி என் கிட்ட மட்டும் இல்லை யார் கிட்டயும் இந்த வேலையை வச்சுக்கிடாத புரிஞ்சுதா?” ஒற்றை விரலை ஆட்டி அவனை எச்சரித்தவள் பிரபாகர் கையில் இருந்த கேமராவில் இருந்த அந்த காணொளியை சேமித்துக் கொண்டாள். அதனை ரோமித்திற்குமே வாட்சப்பில் அனுப்பி வைத்தாள்.
‘இவ திருந்தவே மாட்டா?’
என பிரபாகரின் மனம் சொன்ன போதும்,
‘இவள் எதற்காக அவள் திருந்த வேண்டும்?’
என்றும் கூட அவன் மனம் கேட்டது.அது யாராயினும் எப்போதும் யாரோ ஒருவர் அவருக்கு துணையாக இருந்துக் கொண்டே இருக்க முடியுமா என்ன? தனது பாதுகாப்பிற்காக அவள் செய்தது சரிதான் என எண்ணிக் கொண்டான்.

