
Rowdy Rakkamma_Tamil Short Story_Jansi
ஒரு நொடி அழுகின்றாய்
மறு நொடி சிரிக்கின்றாய்…
உனக்கென்ன?
நொடிக்கொரு முறை
செத்து செத்து பிழைப்பவன்
நானல்லவா?
பிரபாகர் அவளை ஆழ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கூட இந்த சூழ் நிலையில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென்று சுத்தமாக புரியவில்லை.
அழுதுக் கொண்டிருந்தவள் குழலி, அவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசிக்கின்றனர்.
அவனை பொருத்த வரையில் ஒன்னா நம்பர் கிறுக்கி. எதற்கெடுத்தாலும் காச்சு மூச்சென்று கத்துவதும், ஓவென அழுகையை வைப்பதுமாக அவளிடம் எல்லாமும் அதிக பட்சம் தான்.
அவள் முதன் முறை பள்ளிக்கு புறப்பட்ட போது “குழலி பாப்பாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என அவன் பெற்றோரும் அவள் பெற்றோரும் சொன்னதில் இருந்து விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கு அவன் தான் கார்டியன் ஆகிப் போனான்.
அவன் துணைக்கு இருக்கும் தைரியத்தில் அவள் இழுத்து வைக்காத பிரச்சனைகள் என எதுவும் கிடையாது. பள்ளியின் உணவு இடைவேளையில் அவசர அவசரமாக உண்டு முடித்து அவளை அவன் பார்க்கப் போனால் அந்த ஐந்தாவது மாடியின் படிகளின் ஓரம் இருக்கும் பிடி சுவற்றில் இவள் சொய்ங்க் சொய்ங்க் என சறுக்கு மரம் விளையாடிக் கொண்டு இருப்பாள்.
பள்ளியில் யாரோ யாரை அடித்தால் இவளுக்கு என்னவாம்? படை திரட்டிப் போய் அவனை ஒரு கை பார்த்து விட்டு வருவாள். இவளைக் கண்டால் அவளின் பெரிய வகுப்பு பையன்களுக்கே அல்லு விடும். அத்தனையாக அத்தனை பேரையும் மிரட்டி வைத்திருந்தாள்.
“ரௌடி ராக்கம்மா” என அவளுக்கு பட்டப் பெயர் இருப்பது அவனுக்கும் தெரியும். இருந்த போதும் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்து விடுவான்.
அவளிடம் என்னவென்று கேட்கப் போய் அவனுக்கு எதற்கு வம்பு? அவனை அவள் அடிக்காமல் இருந்தால் போதாதா?
எப்படியாகினும் தனக்கு என்ன நடந்தாலும் அவளால் அவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது.எல்லாரையும் ஒரு கை பார்க்கின்றவள் சலீம் அவனிடம் செய்த சேட்டையில் மட்டும் அவனிடம் வந்து அழுதாள்.
