“அவன் என் இடுப்பில் கை வச்சுட்டான்” என தான் அழுததற்கு காரணத்தை அவள் சொல்லவும் அந்த அவன் யாரென புரியாமலும் கூட, இவனுக்கு பக்கென சிரிப்புத்தான் வந்தது, சிரிப்பை தன் வாய்க்குள் அடக்கிக் கொண்டான். ‘அவன் சிரிப்பது தெரிந்தால் இந்த ராட்சசி அவனை கொன்றே விடுவாளே?’
“பதிலுக்கு நீயும் அவன் இடுப்பில் கை வச்சுற வேண்டியதுதானே?” சிரிக்காமல் அவளிடம் கேட்டு வைத்தான்.
“நானும் அப்படி யோசிச்சேன் தான்”
அவன் ஆலோசனைக்கு வெகு தீவிரமாக பதில் சொன்னவளை பார்த்து அவள் யாருடைய இடுப்பையோ கிள்ளுவதாக கற்பனை செய்து பார்க்க அடக்க மாட்டாமல் சிரிப்பு வர அவசரமாக தனது இருக்கையினின்று எழுந்தவன்,
“ஒரு நிமிசம் வரேன்” என தனது குளியலறைக்கு செல்ல முயல, அவனை முந்திக் கொண்டு அவள் சென்றாள்.
“எல்லாத்திலயும் ஏட்டிக்கு போட்டி” என எண்ணியவனாக தங்கள் வீட்டின் முதல் தளத்தில் வெளியே நீட்டி கட்டி இருந்த பால்கனி அமைப்பில் சென்று நின்றவன் மறுபடி அந்த இடுப்பும் கிள்ளுதலான கற்பனை நினைவுக்கு வர, அவளை எண்ணி சிரித்துக் கொண்டான்.
சுற்றியும் கூரையினின்று சிதறிய மழைத் தூரல் இதமாக இருக்க, தனது கை நீட்டி சில மழைத் துளிகளை கையில் ஏந்தி நின்றான். எதிரில் மாடியில் நின்று துணிகளை காய வைக்க மாற்றி போட்டுக் கொண்டிருந்த குழலியின் தாய் இவனை பார்த்து புன்னகைத்தார்.
“பிரபா, குழலி வந்தால்ல?”
“ஆமாத்த”
“என்னமோ மூஞ்ச தூக்கிட்டே இருந்தா?”
“பார்த்துக்கிறேன்த்த”
“சரிம்மா” என உள்ளே செல்ல திரும்பும் முன்பாக குழலி அவன் அருகில் வந்து நின்று மழையில் விளையாடினாள்.
“அம்மா” இங்கிருந்து அழைத்தவளிடம்,
“என்னடா?” என்றார்.
“நான் இங்க இருந்து அப்படியே குதிச்சு அந்த பக்கம் வரவா?”
அவள் அன்னையோ இவளிடம் எப்படி பேசினால் சரிவரும் என எனக்குத் தெரியாதா? என எண்ணியவராக அவளிடம் “சரி வா…எனக்கென்ன? உன் கால் தான் உடையும்” அலட்டாமல் சொல்லிவிட்டு போக, ஒரு நிமிடம் நின்று யோசித்தவள்.
“சரி, இப்ப வேணாம், அப்பாட்ட சொல்லி பாலம் கட்ட சொல்லணும்” என இரு வீட்டிற்கும் நடுவில் பாலம் போட திட்டமிட்டவள் நாளை அவன் அலுவலகத்திற்கு அவன் வந்தே ஆக வேண்டுமென சட்ட திட்டமாக சொல்லி விட்டுத்தான் தன் வீட்டிற்கு சென்றாள்.
அவன் அன்னையும் அவள் சொன்னதை வழிமொழியவும், ‘எல்லாம் விதி’ என எண்ணியவனாக அடுத்த நாள் சாயங்காலம் தனது வேலையை அரக்க பரக்க முடித்து விட்டு அவள் கூறிய வண்ணம் அலுவலக கட்டிடத்தின் கீழே பார்க்கிங்கில் காத்திருந்தான்.

