அத்தியாயம் 9_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 9
அன்றைக்கு வழக்கம் போல புனிதாவிற்காக காத்திருக்க தான் இன்று வரப் போவதில்லை என அவள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதனை வாசித்து பதில் அளித்தவள் மணிவண்ணன் கடைசி நேரம் கேட்டிருந்த ஒரு சந்தேகத்திற்கு பதில் அளிக்க (MsExcel) எக்ஸல் ஃபைலுக்குள் தன் தலையை விட்டு ரொம்ப தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தபோது எதிரில் ஏதோ நிழலாடிய உணர்வு. ஃபைலில் ஆழ்ந்திருந்தவள் தனது தலையை மிகவும் கஷ்டப் பட்டு நிமிர்த்திப் பார்த்தாள் ‘அட நம்ம பிரனீத்…’ அவனைக் கண்டதும் மனம் அவளது கட்டுப்பாட்டை மீறி கூப்பாடு போட்டது.
‘”உங்களுக்கு என்னோட மெயில் கிடைக்கலயா?” கேட்டான் அவன்.
“எந்த மெயில்?” கேள்வியோடு ஆலிஸ்
“நாளைக்கு பெங்களூர் புறப்படறேன், அதான் ஒரு கெட் டுகெதெர் மாதிரி…”
“நாளைக்கேவா? இன்னும் இரண்டு நாள் இருக்குன்னு சொன்னாளே? புனிதா சொன்னதை நினைவுக் கூர்ந்தவளின் மனதை ஏதோ கவ்வ,
“இல்லையே மெயில் வரலை…” எனக் கூறியவளின் புன்முறுவலை ஏற்றுக் கொண்டவனாக…
“அதுக்கென்ன இப்போ வரலாமே? …”
“ஓ… சரி இதோ இந்த ரெண்டு மெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன்.நீங்க வேணா காஃபேடேரியால வெயிட் செய்றீங்களா?”
“பரவாயில்ல இங்கயே நிக்கிறேன்…” நின்றான்.
“சரி …” பத்து நிமிடங்கள் செலவழியும் வரை காற்றசையாத மௌனம் அங்கே….
கஃபேடேரியாவில் ட்ரீட் இருக்கும் போல என அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் ஆஃபீஸை விட்டு கீழிறங்கி கார்டனுக்குள்ளாக நுழையும் வரை ஒன்றும் புரிந்துக் கொள்ள இயலவில்லை.
‘ஓஹோ அந்த காம்பஸின் நடுவில் கார்டனோடு சேர்ந்து இருக்கும் ரெஸ்டாரெண்டில் ட்ரீட் இருக்குமாக இருக்கும், மற்றவர்கள் எல்லோரும் அங்கே காத்திருக்கிறார்கள் போலும்? ஆனால், பிரனீத் குறிப்பாக எனக்காக காத்திருந்து ஏன் அழைச்சுட்டுப் போகணும்?, ஒரு வேளை எல்லாரும் வந்திருப்பாங்க, என்னை கூப்பிடலன்னா நான் தப்பா நினைச்சுக்குவேன் நினைத்து இருக்கலாம்’ என்றெண்ணியவளாக பின்தொடர்ந்தாள்.


Leave a Reply