Epi 9_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

 இரவின் இருள் முழுமையாக கவ்வாத நேரம், சென்றுக் கொண்டிருக்கும் போதே பிரனீத்தின் மொபைல் ஒலித்தது. வீடியோ காலிங்க் எடுத்து, முகத்திற்கு முன்பாகப் பிடித்து தன் தாய் மொழியில்(?) பேசத் துவங்கினான். ‘நமக்குத்தான் கன்னடம் புரியாதே இருந்தாலும் கூட அவர்களது தனிப்பட்ட பேச்சில் நாம் எதுக்கு இடைஞ்சலாக?’ என்றெண்ணியவளாக சற்றுத் தள்ளிச் செல்ல துவங்க, இரண்டெட்டு எடுத்து வைக்கும் முன் ஆலிஸின் விரல்களை மென்மையாகப் பற்றி பின் இழுத்தான் அவன்.

“மீட் மை மாம்…” என்றுச் சொல்லியவனாக அவளை தனது மொபைல் பக்கம்ப் பார்க்க தூண்டினான்.

அவள் அவனது இந்த செயலால் சற்றுத் தடுமாறிய போதும் “ஹலோ ஆன்டி” என்று மரியாதைக்காக பேச,

“நல்லாயிருக்கியா ஆலிஸ் பொண்ணே” என்று அவனின் அம்மா அவளிடம் தமிழில் பேச, என் பெயர் தெரிந்திருக்கின்றதே? அதுவும் தமிழில் பேசுகிறார்கள் என ஆச்சரியமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“எங்க அம்மா தமிழ்” என்றான் அவளிடம்… ஆங்க்… மூளை ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்ய, ‘ இவனுக்கும் தமிழ் தெரியும் போல? இதுவரை யாரிடமும் அவன் தமிழில் பேசிப் பார்த்ததில்லையே’ என தட்டுத்தடுமாறி வந்த சிந்தனையை தாய் பின்னே தலையை நுழைத்தவளாக ஸ்கிரீனுக்குள் நுழைந்து உற்சாகமாக “ஹாய்ய்ய்”  சொன்ன அழகான யுவதியின் குரல் கலைத்தது.

“மை சிஸ்டர்” என்று அவளிடம் சொல்லிப் புன்னகைத்தான்.

இப்போது தாயும் மகளும் விலகி நிற்க, பிரனீத் தலையில் ஒரு டப்பா பவுடரைக் கொட்டினால் எப்படி இருக்குமோ? அப்படி ஒருவர் ஸ்க்ரீனில் வந்து புன்னகைத்தார்.அறிமுகப்படுத்தவே தேவையில்லை இவர் அவன் அப்பா என்றெண்ணியவளாக மரியாதைக்காக “ஹாய் அங்கிள்” என்றுச் சொல்லிப் புன்னகைத்தாள். பதிலுக்கு அவர் புன்னகைத்ததில் பிரனீத்திற்கு இந்த அமைதியான புன்முறுவல் எங்கிருந்து வந்தது? எனும் ரகசியம் அவளுக்கு புரிந்தது.

“அடுத்து என்ன மீட் மை வைஃப்” என்றுச் சொல்லப் போகிறான் என்று எண்ணும் போதே அவன் பெர்ஃப்யூம் வாசனை அவளருகே உணர்ந்தாள்.அவனது நெருக்கம் அவளை கலவரப் படுத்தியது தோளணைப்பு மாத்திரம் தான் நிகழவில்லை அவ்வளவாக நெருங்கி வந்தவன் வீடியோ காலில் இருப்பவர்களிடம் ஏதோ ஒன்றைக் கேட்கும் தொனியில்…

“மம்மி…” என்று கையில் பிடித்திருந்த போனில் இருவரும் வரும் வகையில் பிடித்துக் கேட்டான்.எதிரில் அனைவர் பார்வையிலும் அளவில்லாத ஆர்வத்தைக் கண்டாள்.

ஒரு வகையான உணர்வில் இருந்தாள் அவள். அது ஒரு பொருள் விளங்கா உணர்வு, இதெல்லாம் ஒன்றுமில்லை சும்மாதான் வீண் கற்பனை வேண்டாம் மனமே…..என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

போனில் பேசி முடித்தவன், ரெஸ்டாரெண்ட் செல்லும் எண்ணமே இல்லாதவன் போல அவளிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!