அத்தியாயம் 11_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி


அத்தியாயம் 11
AK 103 என்பது AK47 என்பது மேம்படுத்தப்பட்ட ரைஃபில் ஆகும்.இது 40 மி.மி அளவு கொண்ட கிரனெடை நிறுவும் அளவு திறன் கொண்டது. இராணுவம் மற்றும் போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கி வகையில் இதுவும் ஒன்றாகும்.
****************
அது ஒரு அடர்ந்த கானகம், அதன நடுவில் அக்கம் பக்கம் அதிக ஜன சந்தடியில்லாத, வெகு நாளாக பராமரிக்கப் படாத ஒரு கட்டிடம். எந்த வனத்துறை அலுவலரும் அடிக்கடி போய் வராத பகுதி அது. கவனிப்பாரற்ற அந்த இடத்தை தான் அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தார்கள் போலும்.
சற்றே இடிந்த நிலையில் இருந்தாலும், முன்னறையும் படுக்கையறையுமாய், கழிவறையோடு சிதிலமாய் இருந்தது அந்த வீடு.
அதன் தூசு தும்புகள் நிறைந்த உள் அறையின் ஓரத்தில் ஒடுங்கி மயங்கிக் கிடந்தாள் ரிஷா. கண்ணுக்குள் உருளும் அவள் கண்மணிகள் அவள் கண்களை திறக்க முயற்சிக்கிறாள் என்றுச் சொல்லியது.
ஆனால், முன் தினம் இரவு மயங்கி தற்போது அடுத்த நாள் காலையை அடைந்து, மயக்க மருந்து கொடுத்து பல மணி நேரங்களாகியும் அவளால் அந்த மயக்க மருந்தின் வீரியத்தினின்று வெளியே வர முடியவில்லை.
அந்த மயக்கத்திலும் அவள் உதடுகள் வறண்டு தண்ணீருக்காக ஏங்கின. வாய்க்குள்ளாக எச்சிலை உறிஞ்சி உட்கொண்டாள். இரைப்பையோ உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கதறியது.
எதையோ சொல்ல எண்ணினாள். ஆனால், முடியவில்லை, மரத்துப் போன அவள் நாவும் ஒத்துழைக்கவில்லை.
அந்த முன் தினம் உடுத்தி இருந்த வெளிர் ஜீன்ஸீம், பச்சை நிற டாப்புமாக மயக்கத்தில் இருந்தவளருகே அவளோடு வந்திருந்த கைப்பை தலைகீழாக கவிழ்த்துக் கொட்டி சரிபார்க்கப் பட்டிருந்தது.
சந்தேகப் படும்படி ஒன்றுமில்லையென தெரிந்ததும் அப்படியே அத்தனைப் பொருட்களும் விசிறிவிட்ட வண்ணமாய் அங்கேயே அவளருகிலேயே கிடந்தன.
காற்றில்லாத அந்த அறையில் அவளது தலை முதல் கால் வரையிலும், புழுக்கத்தில் அணிந்திருந்த உடை தெப்பலாய் நனைந்துப் போயிருக்க, அவ்வெம்மையில் அவளது முடிகள் முகத்தில் ஒட்டிக் கொண்டு பரிதாபத்திற்குரிய விதமாய் தெரிந்தாள்.
அங்கே ஆளற்ற அத்துவானக் காட்டில் அவள் அநாதரவாக கிடந்தாள். பிறந்தது முதல் தரையில் தவழ விடாமல் கரத்திலும், தோளிலும் போட்டு வளர்க்கப் பட்ட தாய்க்கும் தந்தைக்கும் செல்லப் பிள்ளையாகிய அவள், தன் வாழ்வில் இப்படி ஒரு நாளை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.


Leave a Reply