அந்தப் பெண்ணிடம் எதையும் கேட்டு பிரயோசனம் இல்லை எனப் புரிந்தது, ரிஷாவின் உடல் நிலை எதுவும் விபரம் கேட்கவும் கூட தெம்பில்லாததாக இருந்தது, தள்ளாடினாள்.
இயற்கை உபாதை கழிக்க தள்ளாடி, தடுமாறி எழுந்த போது அந்தப் பெண்ணும் கூடவே வந்தாள்.
அப்போது சுற்றிலும் கண்களை மலர்த்திப் பார்க்க சுற்றிலும் காடு காடு காடு மட்டுமே, காணவும் பயமுறுத்தியது. பெரிய கேட் போட்டிருந்த அந்த வீட்டின் வாயிலிலும் வெகுவாக புதர் மண்டிக் கிடந்தது.உள்ளே எத்தனை பாம்பு பூச்சிகளோ? மனம் திடுக்கிட்டது.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் சுவரோரம் ஒட்டிக் கொண்டு நடு நடுங்கியவளாய் பசைப் போட்டாற்ப் போல அப்படியே இருந்துக் கொண்டாள்.
துப்பாக்கியோடு துரத்தினார்களே? நேற்றே என்னை கொன்றிருக்கலாமே? நம்மை இன்னும் கொல்லவில்லையா? சாப்பாடு எல்லாம் கொடுத்தார்களே? அப்படியென்றால் சாப்பாட்டில் விஷம் இருந்திருக்குமோ? இல்லையே? நான் சாப்பிட்டும் கூட அரை மணி நேரம் ஆகப் போகின்றதே? நான் இன்னும் சாகவில்லையே?
என்னை எதற்கு கடத்தினார்கள்? ஏன்? யோசித்து யோசித்து தலை வலிக்கவே மயக்க மருந்தின் வீரியம் இன்னும் இருக்க, அமர்ந்தவாறே அயர்ந்து உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் அதே பெண்மணி, அதே உணவு, பசியில் இன்று கூடுதலாய் உணவு உண்டாள். அவளுக்கு யாரையும் எதையும் எதிர்த்துப் போராடும் எண்ணம் அற்றுப் போயிருந்தது.
எதிரி யாரென்று தெரிந்தால் யூகம் வகுக்கலாம், திட்டமிடலாம், எதிர்த்து நிற்கலாம், போராடலாம். ஆனால், தன்னை துரத்தும் எதிரி யாரென்றே தெரியாமல், எதற்காக என்றும் புரியாமல் வருடக் கணக்காய் பெற்றோரைப் பிரிந்து அனாதைப் போலொரு வாழ்வு.
தாயும், தந்தையும் போற்ற வாழ வேண்டிய பதின்ம வயதில் கிட்டிய கொடுமையான பிரிவு, ஷாரதாவின் கண்டிப்பில் கைதி போலொரு வாழ்க்கை, வாசிப்பது மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்து பட்டிருப்பாள். அவளும் அவள் கற்பனையுமான உலகம் ஒன்றே அவள் மட்டில் உயிர்ப்பு தந்த நிஜம் அல்லவா?
தனக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது எனத் தெரிந்தும் அதற்கு தன்னை ஆயத்தப் படுத்தாமல், எதிர்கொள்ளும் விதம் கற்றுத் தராமல், இப்படி அநாதரவாய் நிற்க வைத்து விட்டார்களே? என பெற்றோரைக் குறித்து எண்ணினாள்.


Leave a Reply