Epi 11_Thurathum Nizhalgal_Jansi

முன்னிரவில் ரிஷி எவ்வளவு அழகாக திட்டங்கள் தீட்டினான். அவர்கள் ஏற்பாட்டின் படியே எல்லாம் சரியாய் நடந்திருந்தால், நேற்றிரவே தான் ஹோட்டலில் சென்று பாதுகாப்பாக தங்கிய பின்னர் ரிஷியின் உதவியால் அம்மா, அப்பாவை கண்டு பிடித்திருக்கலாம். போச்சு, போச்சு எல்லாம் போச்சு, தன் கனவுகள் கண்ட வேகத்திலேயே முறிந்துப் போனதை எண்ணி அவள் நெஞ்சம் வெதும்பி விம்மியது.

‘தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’

“அம்மா…” அரை முழிப்பில் தீனமாய் முனகினாள், “அப்பா…” முனகியவள் கண்ணிலிருந்து ஒருச் சொட்டு கண்ணீர் வெளிப்பட்டு வடிந்தது. 

சிறகொடிக்கப் பட்ட அந்தப் பறவையிடம் இப்போதோ எதையும் எதிர்கொள்ளும் உத்வேகமோ, ஆர்வமோ இல்லை.

எதற்காகவோ துரத்தப் பட்டோம், எவ்வளவு முயன்றும் மாட்டிக் கொண்டோம். நம் எதிரி நம்மை விட வலுவானவன், இன்னும் இன்னுமாய் ஓடி ஓடி நான் எங்கே போகப் போகிறேன்?

எப்படிச் செல்லப் போகிறேன்? எனும் ஆயாசம் எண்ணம் வடிவில் உடலெங்கும் படிந்து மூளையை மழுங்கடித்து, அவள் உடலெல்லாம் வியாபித்து இருந்தது. உடல் பலவீனம், மனச்சோர்வு, பசிப் பட்டினி எல்லாமே அவளை முற்றிலுமாய் சோர்வடையச் செய்திருந்தது.

அறிஞர் ஒருவர் ஆய்வுக் கூற்றின் படி மனிதன் வாழ்வதற்காக மிகத் தேவையானவை மூன்றுக் காரியங்களாம்.

ஒன்று வாழ்வுக்கான அசைக்க முடியாததொரு நோக்கம், இன்னொன்று வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் எனும் உறவுகள், மற்றொன்று மனிதனை இயக்கும் அன்பு, காதல் போன்றதொரு உன்னத உணர்வு. 

இப்போதோ, ரிஷாவிடம் இந்த மூன்றில் ஒன்றும் இல்லாமல் தனித்து இருக்கிறாளே. அவளிடம் வாழ்வை எதிர் நோக்கி போராடும் நிலை எதிர்பார்ப்பது வீணோ?

அவளது முன் தினம் ஆரம்பித்த ஓட்டம் நின்று மயக்கத்தில் கிடப்பதுவும் கூட அவளுக்கு தேவைப் படும் ஓய்வை இப்போது நல்குகின்றதோ? என்னமோ?

நெற்றிச் சுருங்க மயக்கத்தில் உருளுகிறாள். ஆம் எத்தனையோ கேள்விகள் மனதில் குழப்பங்களால் மனதே சுருங்குகையில், நெற்றிச் சுருங்காதா என்ன?

அவளைச் சுற்றி சின்ன சின்ன சத்தங்கள், கண்கள் மெதுவாய் விழிக்கின்றன. அவளைக் கடத்திய மகாபனுவர்களைக் காணோம். வெளியில் காவல் நிற்கின்றார்களோ? என்னமோ?

அவளருகே வந்து நின்ற ஒரு பெண்ணை மட்டும் கண்டாள் படுத்துக் கொண்டு எதிரில் நிற்பவளை பார்க்கையில் தலைச் சுற்றிக் கொண்டு வந்த வண்ணம் பார்க்க இயலாமல் திணறினாள்.

எதிரில் இருந்த பெண் தன் எதிரில் தரையில் தரையில் போடப்பட்ட மீனாய் அசைவற்றுக் கிடந்தவளைப் பார்த்து எந்த உணர்வும் எழவில்லை. அவளிடம் பரிவோ, கோபமோ எந்த உணர்வும் இல்லை. கிராமிய மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வந்தவள் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றும் அவசர எண்ணத்தில் மட்டுமிருந்தாள்.

அரை மயக்கத்தில் இருந்த ரிஷாவை, பலம் கொடுத்து, எழுப்பி அமர வைத்தாள். 

உட்கார இயலாதவளாக ரிஷாவின் தலை சரியவும், மறுபடி தரையில் சாய்ந்து தூங்கி விடும் அபாயம் இருந்ததால், ரிஷாவை அந்தப் பெண் சுவற்றை ஒட்டி சாய்மானமாக அமர வைத்து விட்டு, தன் அருகே சில பாக்ராவும், மசாலாவும், வெங்காயமும் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட முயன்றாள். (நம் ஊர் கஞ்சியும் வெங்காயமும் போல அது மராத்தியருக்கான எளிய உணவு) 

எதிர்ப்பே காட்டாமல், அல்லது காட்ட முடியாமல் மூக்கில் நீர் வடிய வடிய கொஞ்ச கொஞ்சமாய் அதனை ரிஷா உண்டாள். அரை ரொட்டிக்கு மேல் அவளுக்கு இறங்கவில்லை. 

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!