Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

நெற்றிச் சுருங்கி நின்ற சம்பூர்ணாவை கண்டவன், “ஓ இது ஆனந்த் வீடு வாங்கிய ஆரம்ப காலத்தில் உள்ள புகைப்படம். அப்போது அவன் பெட்டிகளை எல்லாம் அடுக்கி இருக்கவில்லை. புகைப்படம் எடுக்காதே என தடுத்தான், நான் கேட்கவில்லையே?” சிரித்தவனாக பதிலளித்தான்.”

“ஓ சரி சரி” என சம்பூர்ணா அவனுக்கு தலையசைத்து கேட்டுக் கொண்டான்.

பொதுவாக அவன் ஊர் வம்பு பேசுகின்றவனல்லன், ஆனால் அன்று ஏனோ சில விபரங்களை அவன் சம்பூர்ணாவிற்கு தெரிய வைக்க அல்லது தெளிய வைக்க எண்ணினான். அவை அவளை தெளிய வைக்குமா? இல்லை மேலும் குழப்புமா? என்பது குறித்த பின்விளைவுகள் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“பூர்ணா நானும் அவனுமாக பாதிப் பாதி பணம் போட்டு வாங்கிய முதல் வீடு இது, லிண்டாவுடனான அவனது ப்ரேக்கப்பிற்கு பிறகு அவனுக்கு உடனே வீடு வாங்க வேண்டிய சூழல். நானுமே கூட வீடு வாங்க எண்ணி இருந்தேன். பணப்பிரச்சனை இருந்தது, முதன் முதலில் இருவரும் சில வருடங்கள் வீட்டை சேர்ந்து வாங்கி வீட்டை இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். இந்த வீடு மிக ராசியானது என ஆனந்த் சொல்வான். அங்கிருந்துதான் நாங்கள் இருவரும் வளர்ந்தோம். இப்போது நான் வேறு வீடு வாங்கி விட்டேன். ஆனந்த் அந்த வீட்டில் தனியாகத்தான் இருப்பான். பெருந்தொற்றிற்கு பிறகு வீட்டிலிருந்தும் வேலை செய்யும் வண்ணம் அவனுக்கு தேவையான அமைப்புகளை அவ்வீட்டில் அமைத்து இருந்தான். அது போலவே இந்த வீட்டையும் அமைத்திருக்கின்றான் பாரேன்.”

“…”

“சரி பூர்ணா இப்போது நீ எனது வீட்டை பார்க்கின்றாயா?”

என விகாஷ் தனது புகைப்படங்களை காண்பிக்க ஆரம்பிக்க அவன் எதிர்பார்த்தது போல அவள் முகம் கலங்கி பல்வேறு பாவனைகளை காட்டியது. தன் எண்ணங்களின் வீச்சில் அவள் ஆறு வருடங்கள் முன்பாக நொடி நேரத்தில் சென்று வந்தாள். 

ஆனந்த் அத்தானுக்கும் லிண்டாவிற்கும் ஆறு வருடங்கள் முன்பாக ப்ரேக்கப் என்றால் உடனே வேறு வீடு வாங்கியாக வேண்டிய சூழல் என்றால்… அந்த திகதியை கவனித்துப் பார்த்தால் எல்லாம் சம்பூர்ணாவிற்கு தன்னுடன் தொடர்புப் படுத்தி பார்க்கக் கூடியதாகவே இருந்து தொலைக்க… ‘ஐயோ அத்தானுக்கு என்னால் நிறைய பிரச்சனையா?’ அவளது பூமனம் பதறியது. ஆறு வருடங்களுக்கு முன் போலவே இப்போதும் பதறியது.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

சம்பூர்ணா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த போதுதான் கணேசன் ஒருவாறாக மனமிரங்கி அவளுக்கு அலைபேசி வாங்கிக் கொடுத்து இருந்தார். தனக்கு அப்பா அலைபேசி வாங்கித் தருவதற்கு முன்னதாக ஒரு வாரமாகவே அவள் ஆனந்திடம் சாட் மூலமாக பேசுகையில் எல்லாம் அலைபேசி குறித்தே பேசி அவனை அலற வைத்தாள்.

“பாப்பு … மாமா உனக்கு போன் வாங்கித் தரப் போறாங்கன்னு இதுவரைக்கும் நூறு தடவை சொல்லிட்ட, நானும் கேட்டுட்டேன். என் காது செவுள் கிழிஞ்சிருச்சுடாமா. அம்மா தாயே என்னை விட்டுரு?”

“என்ன அத்தான் நீங்க? நானே என்னோட போன் வந்ததும் உங்களுக்கு வீடியோ கால் போட்டு இங்க இருந்தே ஒரு காசு செலவில்லாமல் வெளி நாட்டை பார்த்துக்கலாம் என்று ஆசையாக இருந்தேன். நீங்க என்னன்னா இப்படி சொல்லுறீங்க?”

“அதுக்கு ஏன் உன் போன் வர்ற வரைக்கும் காத்திருக்கணும்.இப்பவே கூட மாமா ஃபோனில் இருந்து வீடியோ கால் போட வேண்டியதுதானேமா?”

“அதெல்லாம் அப்பா வேலையில் இருந்து வந்து கொஞ்ச நேரம் தான் என்கிட்ட  அவங்க மொபைல் தருவாங்க அத்தான்.அப்புறமா சீக்கிரம் தூங்க போயிருவாங்க. அந்த நேரம் உங்களுக்கு அழைக்க முடியாது நீங்க வேலையில் இருப்பீங்க.”

“ஞாயிற்றுக் கிழமை லீவுதானே? அப்ப வீடியோ கால் செய்யறியா பாப்பு? இந்த வாரம் எனக்கு எங்கேயும் வெளியே போகிற வேலை இல்லை” என்றான்.

“சரி அத்தான் இன்னும் நாலு நாள் இருக்கு” எண்ணியவளாக ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்தாள்.

கணேசன் மகளுக்கு ஞாயிறன்றுதான் அலைபேசி வாங்கிக் கொடுப்பதாக இருந்தார். தான் அவளுக்கு அலைபேசி வாங்கித் தருவதாகச் சொன்ன நேரம் முதலாக மகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தவர் என்னமோ தோன்றவும் ஒரு நாளும் இல்லாத அதிசயமாக தான் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமையே தம் மக்களை அழைத்துச் சென்று அவளுக்கு அவர் வாங்கிக் கொடுக்க எண்ணி இருந்த அலைபேசியை வாங்கிக் கொடுத்தார்.

அவளை விடவும் பிரசன்னாதான் அலைபேசி குறித்த எல்லாமும் தெரிந்தவன் போல ஒவ்வொன்றாக செய்துக் கொண்டு இருந்தான். வீட்டிற்கு வந்து இரவுணவு முடித்த பின்னர் மகளும் மகனும் அலைபேசியில் மும்முரமாக இருக்க, கணேசன் அவர்களை தூங்கச் சொல்லி விட்டு தங்கள் அறைக்குச் சென்றார்.

தகப்பன் சொல் கேட்டு தூங்கி இருந்தால்தான் பிரச்சனை இல்லையே? சம்பூர்ணாவுடன் இணைந்து அலைபேசியை ஆராய்ந்துக் கொண்டு இருந்த பிரசன்னாவும் சற்று நேரத்தில் தூங்கி விட்டிருந்தான். அந்த நேரம் அலைபேசியை முன்னும் பின்னுமாய் ஒவ்வொன்றாக பார்த்து அறிந்தவள் அதன் உள்ளே ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க வீடியோ கால் செய்யும் ஆப்ளிகேஷனையும் அதில் பார்த்தாள்.

தனது போனில் கொஞ்ச நேரம் முன்னதாக சேமித்த எண்களுள் ஆனந்தின் எண்களும் இருக்க ‘இப்போது சனிக்கிழமை இரவு பதினொன்றரை என்றால் மிலானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நான்கரை மணி நேர வித்தியாசம் இப்போது அங்கே மாலை 7 மணியாக இருக்க வேண்டும். அத்தான் வேலையில் இருந்து திரும்ப வந்திருக்கக் கூடும். இப்போது அத்தானுக்கு அழைத்தால் என்ன?’ என அவளுக்கு தோன்றியது.

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!