Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

‘இப்போது அழைத்தால் ஓரளவு அக்கம் பக்கம் பார்க்க இயலும். அத்தான் தனது வீட்டை எல்லாம் சுற்றிக் காட்டுவார்கள். நமக்கு வெளிநாட்டை பார்க்க நல்லதொரு வாய்ப்பு’, என பலவிதமாக எண்ணியவள் தான் ஆனந்துக்கு அழைக்கப் போவதாக மரியாதைக்காக கூட அவனுக்கு தெரிவிக்காமல் உடனடியாக அழைப்பு விடுத்திருந்தாள்.

சம்பூர்ணா அந்த நேரம் வீட்டினரோடு அலைபேசி வாங்க வெளியே சென்று வந்து இருந்ததால் அவள் முகம் பளிச்சென்று இருந்தாலும் கூட தலை கலைந்து இருந்தாள். இரவு உடையான சட்டை பேண்டில் மிக சாதாரணமாகத்தான் இருந்தாள். அவள் பேசப் போவது அவளது அத்தானுடன் என்பதால் ஒப்பனை செய்ய வேண்டிய தேவை எதுவும் இருந்ததாக அவளுக்கு தோன்றவில்லை.

மனதளவில் குழந்தைமை மாறாதிருந்தவளை அந்த ஒரே இரவு அடித்து நொறுக்கி பெரிய மனுஷியாக்க காத்திருந்தது.

இவள் அழைப்பு விடுத்து விட்டு ஆனந்த் அவளது அழைப்பை எடுக்க காத்திருந்தாள். இவர்கள் பேசுகையில் பிரசன்னா விழித்து விடக் கூடாதென கட்டிலில் சற்று தூரமாக அமர்ந்திருந்தாள். அதுவும் கூட மிக நல்லதுதான். சில நொடிகள் கடந்துச் சென்ற பிறகுதான் ஆனந்த் அழைப்பை ஏற்றான்.

“பாப்பு, உனக்கு உன் போன் ஒரு நாள் முன்னமே கிடைச்சுட்டு போலிருக்கே? வாழ்த்துகள்” ஸ்டைலாய் தலையசைத்து பேசிக் கொண்டு இருந்த ஆனந்தை விழி விரிய பார்த்திருந்தாள். அவனது புகைப்படங்களை அவ்வப்போது பார்த்ததுதான். ஆனால், நேரில் பார்ப்பது வேறில்லையா?

“நன்றிகள் அத்தான், அப்பா இன்றைக்கே வாங்கிக் கொடுத்துட்டாங்க.”

“ம்ம் பிரசன்னா என்னச் செய்யறான்?”

“தூங்கிட்டான் அத்தான்” தம்பியை நோக்கி கேமராவை நகர்த்தி காட்டினாள். முதன் முறை வீடீயோ காலில் பேசுவதால் பல முறைகள் இவளது முகம் தவிர்த்து சுவர், வீட்டுக் கூரை, ஃபேன் முதலியனதான் தெரிந்துக் கொண்டு இருந்தது.

தனது பாப்புவிற்கு அலைபேசியை பிடிக்கும் விதத்தை கற்றுக் கொடுத்தவன் ஒரு சில விஷயங்களை அவள் சொல்ல கேட்டான், அவன் சொன்னான்.

“இப்ப உங்களுக்கு நல்ல வேலையா அத்தான்?”

“பரவாயில்லைமா, தனியா எடுத்துச் செய்யணும்டா. அதுக்கு கொஞ்சம் நாளாகும்.” கண்களை முகத்தை அழுந்த துடைத்தான்.

“கவலைப் படாதீங்க அத்தான், நீங்க பெரிய டிசைனரா ஆகிடுவீங்க”

“என் செல்லம்டா நீயு, நீ சொல்லிட்டல்ல பின்ன என்ன ஆகிடலாம்.” மலர்ந்து புன்னகைத்தன.

“இப்ப நீங்க ரொம்ப மாறிட்டீங்க அத்தான்”

“அப்படியா?”

“முன்ன விடவும் அழகா ஆகிட்டீங்க.” தன்னையறியாமல் சொல்லியவள் துறுதுறுவென பேசிய தன் நாவை கடித்துக் கொண்டாள். அவளது அசட்டுச் சிரிப்பில் இவனும் சிரித்தான்.

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!