Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“அத்தான் நான் உங்களுக்கு போன் போட்டதே வெளிநாடு பார்க்கத்தான்… காண்பிங்க பார்க்கணும்”

“அடடே அப்ப பாப்பு அத்தானை பார்க்க போன் போடலையா?”

“அதான் பார்த்துட்டேன்ல அத்தான்.”

“பார்த்தாச்சு, நான் அழகா இருக்கேன்னு சொல்லியாச்சு இன்னும் என்னச் சொல்ல அத்தான். ஊர் சுத்தி காண்பின்னு சொல்லுற சரியா?” எனச் சிரிக்கவும் அவளும் சிரித்தாள்.

அவன் பேசிக் கொண்டே அந்த வீட்டின் ஒவ்வொரு பக்கமாய் சென்றுக் கொண்டிருக்க எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

“பொறு பாப்பு, பெட்ரூம் பக்கம் ஒரு ஜன்னல் இருக்கு அங்கே இருந்து பார்க்க வியூ அழகா இருக்கும்… ம்ம்” என்றவனாக படுக்கையறை சென்றவன் என்னென்னவோ செய்து அந்த ஜன்னலை திறந்து பாப்புவிற்கு காட்டிக் கொண்டு இருந்தான்.

இப்போது ஆனந்தின் கையில் இருந்த அலைபேசி ஜன்னலின் வெளியே இருந்து உள்பக்கம் திரும்ப ஏறத்தாழ நிர்வாணமாக ஒரு பெண் ஆனந்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

தனது இதழை அவளிடம் இருந்து விடுவித்துக் கொண்டு ஆனந்த் அலைபேசியை பார்க்க, அவனோடு கூட அவனை முத்தமிட்டவளும் என்னவென அறிந்துக் கொள்ள திரும்பிப் பார்க்க ஆனந்துடன் கண்டங்கள் கடந்து அலைபேசியில் தொடர்பில் இருந்தவள் கண்களோ இவர்களை பேயை கண்டது போல மிரண்டு திகைத்துப் பார்த்து விழித்திருந்தன. 

அந்தக் கண்களில் தான் தற்போது கண்டதன் பொருள் என்னவென புரியாத பாவனை இருந்தது. தான் கண்டதை செரிமானம் செய்துக் கொள்ள முடியாத திகைப்பு இருந்தது. ஆனந்தின் பாப்பு அவனை அதிர்ச்சியில் பார்த்திருந்தாள்.

சற்று நேரத்தில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மணித்துளிகளாக கண்ணே முத்தே என சம்பூர்ணா செல்லம் கொஞ்சிய புத்தம் புதிய அலைபேசி இப்போது தீண்டத்தகாதது போல ஓரமாக கிடந்தது.

அந்த ஒரு வீடியோ கால் ஒரே நேரத்தில் பாப்புவையும், ஆனந்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருந்தது. ஆனந்திற்கும் கூட அதுவரை சரியாக தெரிந்த பலவும் அதன் பின்னர் சரியென தோன்றாமல் போக, அவனது வாழ்விலும் பல விஷயங்கள் மாறின.

அவரவர் பக்கம் அவரவர் நியாயங்கள், அவரவர் கோணங்கள். பாப்புவின் அத்தானும், அத்தானின் பாப்புவும் இருவரும் ஒருவருக்கொருவர் எதையும் இதுவரை விளக்கிக் கொள்ள முயலவில்லை. அது முடியும் போலவும் இல்லை.

சம்பூர்ணாவிற்கு அந்த வீடியோ கால் ஏற்படுத்திய பாதிப்பினின்று வெளிவர வெகு மாதங்களாகிற்று. 

தான் செய்ததில் இது தவறு இது சரி, தான் இன்னது செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் தன்னையே நிந்தித்து நிந்தித்து தனக்குள்ளாக மருகி, தனக்கு எது சரி எது தவறு எனச் சொல்லித் தர ஆளில்லாத, தாயில்லாத நிலை எண்ணி மருகியே நொந்திருந்தாள்.

அம்மா இருந்தால் நிகழ்ந்தவைகளைச் சொல்லி விட்டிருக்கலாம், மனப்பாரம் தீர்ந்திருக்கும். அம்மா இருந்து இவள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டு, “இதெல்லாம் பெரிய விஷயமில்லை போ” என ஒரு வார்த்தைச் சொல்லி இருந்தால் அவள் மனம் ஆறி இருக்குமோ என்னமோ?

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!