தன்னைக் கண்டாலே போதும் அத்தை/மாமா மகளை சீண்டுவதைப் போல கார்த்திக் சீண்டுவதும் “என்னங்க மேடம்? வேலை எப்படி போகுது?” என்பதுவும்…
“வீட்டில சமைச்சு டிஃபன் கொண்டு வர்றியா நீ… அப்படின்னா வெளியில் சாப்பிடறது இல்லையா நீ?” என அவளை ஆச்சரியமாக பார்த்த்ததுவும் என தான் செய்வதை எல்லாம் கண்கொத்திப் பாம்பாய் கவனிக்கின்றவனை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவளது தனிப்பட்ட சுதந்திரத்தின் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தானவன். அது போக மாநிலம் விட்டு மாநிலம் வந்து ஐந்து நாட்களுக்குள்ளாக இவளிடம் இப்படி நடக்கின்றானென்றால் அவன் மற்றவர்களோடும் அப்படித்தானே நடப்பானாக இருக்கும்? எனும் எண்ணம் வந்த போதே அதனை இவள் மனம் ஏற்காமல் வெகுவாக இடித்துரைத்தது.
அந்த அலுவலகத்தின் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அவன் அண்ணகாருவாகத்தான் இருந்தான். அவனைக் குறித்து மற்றவர்கள் அழைக்கும் விதத்தில் அத்தனை மரியாதை தொனித்தது. அதனால் அவனை பெண் பித்தனாக அவளது மனமே ஏற்கவில்லை.
‘அது என்னவாகவும் இருக்கட்டும்? முன் பின் தெரியாத என்னிடம் இவன் இத்தனை உரிமை எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை’ என மனதில் கடுகடுத்துக் கொண்டாள்.
பாஸ்கரிடம் பேசுகையில் முன் திட்டத்துடன் சிலவற்றை கோர்த்தாள். அப்போதுதானே செய்தி கார்த்திக்கை சென்றடையும்? கார்த்திக் தன்னை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை.கார்த்திக் அவள் எதற்காக வந்தாளோ அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறான். எல்லாவற்றிலும் அவன் மூக்கு நுழைத்தானானால், அவள் செய்ய வேலைகளை தானே செய்வானானால் தான் எதற்கு ஹைதாராபாதில் இருக்க வேண்டும்? கார்த்திக் இப்படியே தொடர்ந்தானானால் தான் அடுத்த வாரமே சென்னைக்கு திரும்பச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், தன் டைரக்டரிடம் சொல்லி தனக்கு விமானச்சீட்டு ஏற்பாடுச் செய்ய சொல்லப் போவதாகவும் சொன்னாள்.
எப்படியும் தகவல் அவனைப் போய் சேர்ந்து விடும் அல்லவா? என்னே திட்டம்? மிக நல்ல திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமை… தான் ஹைதராபாத் வந்து ஐந்து நாட்களாகினவா? ஆச்சரியம் தான் மீராவுக்கு. அலுவலகத்தில் கிடைத்த ஒரு நட்புடன் அந்த வார இறுதியில் செகந்திராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தாள். புதிய இடம் பார்க்க எப்படி இருக்கும் எனும் ஆர்வம் இருந்தது. தங்கைகளுக்காக எதை வாங்கலாம் எனும் ஆர்வம் இருந்தது. தனக்காக எதை வாங்கவும் அவளுக்கு தோன்றவில்லை.
அவள் எதிர்பார்த்த வண்ணம் பாஸ்கரிடம் அவள் சொன்ன தகவல் கார்த்திக்கைப் போய் சேர்ந்திருந்தது. வெள்ளிக்கிழமை அவளை அவன் பார்க்க வரவில்லை, அவளை அவன் அழைக்கவில்லை, அவளுடன் பேசவில்லை. அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவுமில்லை.
‘ஹீர்ரே, என் திட்டம் பலித்து விட்டது’ என மனதிற்குள் குதூகலித்தாள் மீரா.


Leave a Reply