அடுத்த நாள் சனிக்கிழமை சிம்பிளாக ஜீன்ஸ் டிசர்ட்டில் புறப்பட்டு நின்றவளை அவளது அலுவலகத் தோழி ஆட்டோவில் வந்து அழைத்துக் கொண்டாள்.
மொழியில் வித்தியாசங்கள் இருந்தாலும், கனிவிலும் உபசரிப்பிலும் வித்தியாசம் இல்லாத வகையில் அவளுக்கு தெலுங்கானா மிகவும் பிடித்திருந்தது. ஜனவரியின் மூன்றாம் வாரம் அது… தாம் குடும்பத்தோடு கொண்டாடும் பொங்கலை தவற விட்டதால், அந்த ஜனச் சந்தடியில் கிடைத்த துண்டுப் போடப்பட்ட கரும்புகளை ஆசையாக வாங்கி சுவைத்தாள்.
இவளோடு வந்த தோழி ஊர் சுற்றுவதற்கு ஏற்ற துணையாக இருந்தாள். அவளது தயவில் பல கடைகள் பார்க்க கிடைத்தன. தங்கைகளுக்காக சில அழகான உடைகளை வாங்கினாள். தனக்காகவும் ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டாள். மிக அழகான லெஹங்காக்களின் விலைகளை கேட்ட போதோ கண்கள் விரிந்தன. பார்வையால் அவைகளை பருகி விட்டு அமைதியாக இருந்தாள்.
மறுபடி ஜனச்சந்தடிக்குள் வந்த போதோ அவளை அந்த பனங்கிழங்குகள் ஈர்த்தன. நான்கு பனங்கிழங்குகள் வாங்கி பையில் போட்டவள் தோழியோடு அந்த பாரடைஸ் ஹோட்டலுக்குச் சென்றாள்.
“பாரடைஸ் ஹோட்டலில் இருந்து தினம் ஹைதராபாத் பிரியாணிகள் துபாய்க்கு ஏற்றுமதிச் செய்யப் படுகின்றன” அனுரேகா சொன்ன போது ஆச்சரியப்பட்டாள் தான். ஆனால், செகந்திராபாதில் இருந்த பெரும்பாலான உணவகங்களின் பெயர்கள் பாரடைஸாக இருக்க… இதில் எது ஒரிஜினல் பாரடைஸ்? எது போலி பாரடைஸ்? என எப்படித் தெரிந்துக் கொள்வதாம்.
ஐயோ அம்மா என்ன இது பாரடைஸீக்கு வந்த சோதனை? என எண்ணிக் கொண்டு தோழி அழைத்துச் சென்ற அந்த பெரிய உணவகம் (பெயர் பாரடைஸ்தானுங்கோ) சென்று பிரியாணி ஆர்டர் கொடுக்க ஆறி அவலாகி வந்த அந்த பிரியாணியை தோழிகள் இருவரும் மாற்றி மாற்றி பார்த்த வண்ணம், ஒரு கோக கோலா உதவியுடன் உண்டு அல்லது வயிற்றுக்குள்ளாக தள்ளி முடித்தனர்.
“இதை விட ருசியா நானே பிரியாணி சமைப்பேனே? பெயர் என்னமோ ஹைதராபாத் பிரியாணி. என் தங்கச்சிங்க எப்படி இருந்துச்சுன்னு கேட்பாங்களே? நான் என்னன்னு சொல்லுவேன்?” புலம்பிய மீராவைப் பார்த்து தோழி சிரித்து வைக்க இவளுக்கும் சிரிப்பு பீறிட்டது.
தனது அறைக்கு வந்ததும் ஊர் சுற்றி வந்த களைப்பை போக்குவதிலேயே அன்றைய தினம் கழிய, இரவு அலுப்பில் நன்றாக தூங்கி காலை எழுந்தாள். அடிக்கடி வீட்டிற்கு அழைத்து பேசினாலும், வீட்டிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஞாயிற்றுக் கிழமையின் வெறுமையை அவளால் சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
தான் வாங்கி வந்த பனங்கிழங்குகளை உப்பிட்டு வேக வைத்து எடுக்க, அதை அப்படியே உண்டிருக்கலாம். ஆனால், விதி யாரை விட்டது. உப்பும் மிளகாயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உண்டால் என்ன? என ஆர்வமெழ, நாக்கும் சப்புக் கொட்டவே, பனங்கிழங்கை எடுத்து, நார் நாராக உரித்து துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க எடுக்க மீதமிருந்த ஒரு கிழங்கும் அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.
சரி இதையும் போட்டுவிடலாமென, அதையும் சேர்க்க இப்போது மிக்சி ஜார் முழு அளவும் நிறைந்து விட்டிருந்தது.கவனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வலக்கையால் மிக்ஸி ஜார் மூடியை அழுந்தப் பற்றிக் கொண்டு இடக்கையால் ஸ்விட்சை ஆன் செய்ய அதிகளவு பொருட்கள் அதுவும் இளக்கமற்ற கிழங்கை அரைக்க வேண்டி இருந்ததால் குபீரென அழுத்தத்தில் மிக்ஸி ஜார் மேலே எழ அதை அழுத்தி கீழே இறக்கும் நொடி நேரச் செயலில் மீராவின் வலதுக் கையின் நடு மற்றும் ஆள்காட்டி விரல் மிக்ஸியின் உள்ளே இறங்க சில நொடிகளில் விளைந்து விட்டதந்த விபரீதம்.


Leave a Reply