Epi 5_Manadhoram Unthan Ninaivugal

எங்கிருந்து இரத்தம் வருகின்றதெனத் தெரியாமல் அடித்து ஊற்ற, பயந்து அலற ஆரம்பித்தாளவள். அவள் கையை உதறிய வேகத்தில் அந்த இளமஞ்சள் நிற சீலிங்கில் இரத்தத் துளிகள். 

வெளியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கருக்கு அவளது கதறல் கேட்கவில்லை.

கையை பொதிய துணி தேடும் முனைப்பில் தனது அறைக்கும் சமையலறைக்கும் நடுவில் இரத்தத்தால் பலத்துளிகளில் மீரா கோடுகள் வரைந்திருந்தாள்.

இரத்தம் வழியும் தன் விரல்களைச் சுற்ற பழைய துணி கிடைக்க வேண்டும் எனத் தேட இது அவளது வீடா என்ன? இருந்தவைகள் எல்லாம் நல்ல உடைகளே. கையை எதனைக் கொண்டுச் சுற்ற எனத் தெரியாமல் துவைக்கப் போட்டிருந்த தனது உடை ஒன்றை எடுத்து அதில் விரல்களைச் சுற்றினாள். அத்துணி சில நொடிகளில் சிகப்பு நிறத்தில் ஈரமானது. அதை எடுத்து தள்ளிப் போட்டு விட்டு, இப்போது மற்றொரு துணியை எடுத்து சுற்றிக் கொண்டாள்.

இரவுடையில் இருந்தவள், துணி மாற்ற இப்போது நேரமில்லை என்பதை உணர்ந்தவளாக ஒரு துப்பட்டாவை இடக்கையால் எடுத்து கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டு, பணத்தையும் பர்ஸையும் எடுத்து வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

வாசலில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கர் இவளது வருகை பார்த்து உள்ளேச் செல்ல அங்கிருந்த இரத்தத்தைப் பார்த்து அவருக்கு தலைச் சுற்றாததுதான் மிச்சம்.

“நானும் வருகிறேனம்மா” என அவர் சொல்ல,

“இல்லை நான் அந்த ஹாஸ்பிடலை அன்று பார்த்திருந்தேன். போய் வருகிறேன் ஒன்றும் பிரச்சனையில்லை” என புறப்பட்டு வெடுவெடுவென அடுத்த தெருவில் இருக்கும் அந்த பெரிய மருத்துவமனைக்கு நடந்தே சென்று விட்டிருந்தாள். 

தெரியாத ஊரில் யாரை துணைக்கு அழைக்கவாம்? அதிலும் வீடு முழுக்க தான் இரத்த கோலம் செய்து வைத்திருக்க கேர் டேக்கருக்கு அதை துடைக்கவே சரியாக இருக்கும் என எண்ணி அவரை துணைக்கு அழைக்க விழையவில்லை.

மருத்துவமனைச் சென்று தனது விபரம் தெரிவிக்க பத்தோடு பதினொன்று என அவளை அவர்கள் உபசரிக்க, விரல்களில் கசிந்த இரத்தம் இப்போது நின்று விட்டிருந்தது.

‘இந்த கையை வைத்து எப்படி நாளை அலுவலகம் செல்வதாம்?’ என நினைவு வரவும் தனது அலைபேசி எடுத்து கார்த்திக்கிற்கு இடது கையால் சுருக்கமாக செய்தி அனுப்பினாள்.

அவனிடமிருந்து வந்த பதில் செய்தியில் மிகுந்த பதற்றமிருந்ததை கண்டும் காணாமல் அவள் தவிர்த்தாள். அவளது சிந்தனை எல்லாம் அடுத்த நாள் தாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் இருந்தது.

அரை மணி நேரம் தாண்டியும் இவளைக் கண்டுக் கொள்ளவில்லையோ? என மீரா நினைத்திருக்க அங்கே ஒரு குட்டி ஆபரேசன் போன்ற ஏற்பாடுகள் அவளுக்காக நடந்துக் கொண்டிருந்தன.

நர்ஸ் “மேம் வாங்க” என அவளை உள்ளே அழைத்து சென்றார். மருத்துவர் இவளது விரலில் தையல் போடுவதற்கான ஏற்பாட்டோடு இருந்தார். நடுவிரலும், ஆள்காட்டி விரலும் என சின்னதான அவ்விரல்கள் இரண்டிலும் விபத்து நிகழ்ந்த மூன்று நொடிகளில் 4 பிளேடுகள் தீற்றிய 12 வெட்டுக்கள். அதுவும் அத்தனை நெருக்கமாக சீவி இருக்க அவள் விரல்கள் தப்பித்தது இறைவன் செயலோ?

இவள் ஒவ்வொரு தையலுக்கும் வெகுவாக வீறிட்டாள். தாய் தந்தை இல்லாது தனித்திருக்கும் இத்தருணம் வலிகள் மிகுந்தன போலும். 

“என்ன மேடம் இப்படி பயப்படுறீங்க? கத்துறீங்க?” மருத்துவர் சலிக்க…

“ரொம்ப வலிக்குது டாக்டர்” முனகினாள்.

பெரும் பிரயாசையுடன் அடுத்த முக்கால் மணி நேரத்தில், அந்த இரண்டு விரல்களிலும் ஐந்து தையல்களை மருத்துவர் போட, களைப்பாக வெளியே வந்தவளை எதிர் கொண்டது எப்போது வந்தான் எனத் தெரியாமல் அந்த ரிசப்ஷனில் அமர்ந்திருந்த கார்த்திக் தான். 

“ஏந்திரா? சால நொப்பெஸ்துந்தரா?” (என்னடா? ரொம்ப வலிக்குதா?) என அவன் தவிப்புடன் கேட்ட போது, மொழி புரியாத போதிலும் கூட அவனது தவிப்பில் மீரா செயலற்று நின்றிருந்தாள்.

தொடரும்

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *