Epi 5_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கா”

சொல்லி சென்றவர்களுக்குத் தலையசைத்தவள் வாட்சப் க்ரூப்பில் எட்டிப் பார்க்க,

“இவிங்க பெரிய ட்ரம்பு…காஃபேடேரியா வந்து சாப்பிட கூட நேரம் கிடையாதாம் தினம் டெஸ்க்ல தான் சாப்பிடுவாய்ங்களாம்…இன்னிக்கு வீடியோ எடுத்து அட்மின் கிட்ட போட்டுக் கொடுக்கப் போறேன் 📷” எனக் கேமரா ஸ்மைலியுடன் மறுபடி ஒருவள் கலாய்க்க….கத்தியும் துப்பாக்கியும் இருபக்கமும் பறந்தன.

அதன் பின்னர்ச் சற்றுநேரம் அலுவலகத்தை ஒட்டியிருந்த கார்டனில் காற்று வாங்கி வந்தவளின் தலைவலி குறைந்து இருந்தது. இப்போது சற்று நிதானமாகவும் யோசிக்க முடிந்தது. நேற்றைய குமரேஷின் அதிரடி வருகை மற்றும் அநாகரிக பேச்சு எண்ணும்போது அவளது உடலும், மனமும் பற்றி எரிகின்றார் போல இருந்தது. தீர்வை யோசிக்கலானாள்.

யாரிடமும் தன்னைத் தன் பிரச்சனைகளை வெளிப்படுத்தி உதவி கேட்பதில் அவளுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால், இன்றைய காலக் கட்டத்தில் எந்தப் பெண்ணுக்கும் எவரும் எதுவும் உள்ளர்த்தம் இன்றி உதவி செய்வது இல்லை. 

ஒருவரிடம் உதவி பெற்றுக் கொண்டு, அவருக்குக் கடன் பட்டவளாகப் பிணையாளியாக மாறுவதில் அவளுக்கு என்றுமே விருப்பமும் இருந்ததில்லை. போலீஸ் கேஸ் என்று அலைய அவளுக்குத் துணைக்கு வரும்படி எவரும் இல்லை. ஏதேனும், ஒரு பிரச்சினை என்று கேள்விப்பட்டால் அதனைப் பெரிதாக்கி அதில் குளிர்காயும் மக்களே இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக இருக்க, அவள் சத்தம் இன்றி இந்தப் பிரச்சினையில் இருந்து எவ்வாறு வெளிவருவது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

வழக்கம்போலத் தன்னுடைய எண்ணங்களைச் சிறு சிறு குறிப்பாகத் தன்னிடமிருந்த வெற்றுத் தாள்களில் எழுதியவள் தனக்குப் புது டீமிற்கான ஃப்ளோரில் கொடுக்கப் பட்டிருந்த ட்ராவில் (draw) அதனை வைத்துவிட்டு மூடினாள். அந்த டிராவின் சாவி அவளுக்கு இன்னும் கொடுக்கப்பட்டு இருக்கவில்லை.

மதியம் தன்னுடைய பழைய டீம் மெம்பர்களோடு சேர்ந்து கலகலப்பாக உணவு உண்டு வந்தாள். மாலை இருந்த மீட்டிங்கில் காலை முதல் செய்ய ஆரம்பித்த வேலைகள் குறித்த ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டியது இருந்தது. கூடவே அவரவர் டீம்கள் அன்றைய முதல் நாள் வேலையில் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தனர்.

அவள் வழக்கம் போலத் தன்னுடைய கருத்துக்களைக் கணீர் கணீர் குரலில் முன்வைக்க, அவள் கூறிய பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை ராகவன் பரிசீலித்து அவற்றுள் எவற்றைச் செய்வது சரிவரும் என்று ஆலோசனைகள் கூறிக் கொண்டு இருந்தார். என்னதான் ஆலிஸிற்குக் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் போது எடுக்க வேண்டிய தீர்வுகள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் உயர் அதிகாரிகள் ஒப்புதல் பெறாமல் அவற்றைச் செயல்ப்படுத்த முடியாது என்பதால் அவற்றை மின்னஞ்சலில் அனுப்பியதோடு நில்லாமல் இந்த மீட்டிங்கில் விவாதிக்க அவைகளின் குறிப்புக்களையும் டைரியில் எழுதி எடுத்து வந்திருந்தாள்.

மற்றவர்களும் தத்தமக்கு தோன்றிய தீர்வுகளைக் கூறினர். குறிப்பிட்ட சிலவற்றில் முடிவு காணப்படாததால் அனைவரும் விவாதித்துத் தத்தம் கருத்தை கூறிக்கொண்டு இருந்தனர்.

ஒரு சில தீர்வுகள் நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றிய போதெல்லாம் அதற்கான மறு கேள்விகளை ஆலிஸ் தொடுத்துக் கொண்டு இருந்தாள்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!